
திருவள்ளுவர் ஆண்டு என்றால் என்ன?
உலகத்தார் அவரவர் மதம் சார்ந்த நாட்காட்டியை (ஆண்டுமுறை) வடிவமைத்து பின்பற்றி
வருகின்றனர். தமிழர்கள் எம்மதமும் சாராமல் இயற்கை நெறியைப் பின்பற்றி வருபவர்கள். ஆகையால்
மற்ற நாட்காட்டியைத் தவிர்த்து தமிழர்களுக்கென்று
ஓர் ஆண்டுமுறையை வடிவமைக்க தமிழறிஞர்கள் விரும்பினர்.
இதன் பயனாக, 1921 இல் 500 க்கும் மேற்பட்ட
தமிறிஞர்கள் ஒன்றுகூடி ஆய்வு செய்யும் ஓர் மாநாட்டை சென்னை பச்சையப்பன் கல்லூரியில்
நடத்தினர் . மாநாட்டிற்குத் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் தலைமையேற்றார்.
மாநாட்டின் ஒருமித்த முடிவாகத் தமிழர்களின்
தொடராண்டாகத் திருவள்ளுவர் ஆண்டினை ஏற்பது என்று முடிவுசெய்தனர். திருவள்ளுவர் பிறப்பாண்டு
கி.மு.31 என்று முடிவு செய்யப்பட்டது. சுறவ (தை)த் திங்கள் முதல்நாளே திருவள்ளுவராண்டின்
புத்தாண்டு என முடிவு செய்யப்பட்டது.
தை முதல் நாள் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுவதால்,
சுறவம் (தை) 2 ஆம் நாளில் மாட்டுப்பொங்கல் அன்று திருவள்ளுவர்நாள் விழாவுக்காகப் பொதுவிடுமுறையை
அறிவிக்க முடிவு செய்தனர். இம்முடிவு 3.11.1969 இல் அரசு ஆணை எண் 2723 பொதுத்துறை வழியாக
வெளியிடப்பட்டது.
இந்த ஆணையின்படி 1.1.1970 முதற்கொண்டு
திருவள்ளுவர்நாள் விழாவைக் கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் சுறவம் (தை) 2ஆம் நாள் தமிழக அரசின்
பொதுவிடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
1971 முதற்கொண்டு திருவள்ளுவர் ஆண்டுமுறையை
ஏற்று அரசு நாட்குறிப்பிலும், 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் பயன்படுத்தப்பட்டு
வருகிறது.
தமிழக அரசு 3.2.1981 இல் வெளியிடப்பட்ட
ஆணையின்படி திருவள்ளுவராண்டைத் தமிழக அரசு வெளியிடும் அனைத்து ஆணைகள், மடல்கள், செய்திகள்
மற்றும் ஏனைய வெளியீடுகள் அனைத்திலும் பயன்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டது.
ஆங்கில ஆண்டோடு திருவள்ளுவர் ஆண்டினை
கணக்கிடும் முறை!
ஆங்கில ஆண்டு 2024 + திருவள்ளுவர் பிறப்பாண்டு
கி.மு 31 இவ்விரண்டின் கூட்டுத்தொகை = 2055
தற்போதைய திருவள்ளுவர் ஆண்டு 2055
தமிழர்களாகிய நாம் இனி அனைத்து அழைப்பிதழ்
மற்றும் குறிப்பேடுகளில் திருவள்ளுவர் ஆண்டினையும் தமிழ் மாதப் பெயர்களையும் குறிக்க
உறுதி கொள்வோம்.
இவண்
ஆ.தி.பகலன் ,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583)
0 Response to " தமிழ் அறிவோம்! - 1 - திருவள்ளுவர் ஆண்டு என்றால் என்ன? - ஆ.தி.பகலன் "
Post a Comment