திருக்குறளில் அறிவியல் பார்வை - வெ. பாலமுருகன் - கட்டுரை

Trending

Breaking News
Loading...

திருக்குறளில் அறிவியல் பார்வை - வெ. பாலமுருகன் - கட்டுரை

திருக்குறளில் அறிவியல் பார்வை  -  வெ. பாலமுருகன் - கட்டுரை

 


முன்னுரை

வான்புகழ் வள்ளுவர் அளித்த தெள்ளமுதமாகிய திருக்குறள் உலகப் பொதுமறையாக விளங்குவதோடு வாழ்க்கைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்காகவும் உள்ளது.  கற்குந்தோறும் புதுப் பொருள்தரும் நற்றமிழ் இலக்கியமாகவும் திகழ்கிறது. இந்நூல் அரசியல், பொருளாதாரம், வேதியியல், உயிரியல், தாவரவியல், நூல் அறிவு, ஆய்வறிவு, இயற்பியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை விளக்கும் களஞ்சியமாகவும் இருந்து வருகின்றது. ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகம் வியக்குமாறு அத்துணைக் கருத்துகளையும், எக்காலத்தவரும், எந்நாட்டவரும், எக்கொள்கையினரும், எச்சமயத்தாரும் போற்றும் வகையில் கூறியுள்ள சிறப்பு இத்திருக்குறள் ஒன்றுக்கே உள்ள தனிச்சிறப்பாகும். இத்தகைய திருக்குறளில் கூறியுள்ள அறிவியல் கருத்துகளை எடுத்துக் கூறுவதே  இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

நவில்தொறும் நூல்நயம்

மக்களுடைய வாழ்க்கையை அகம், புறமென்று பாகுபாடு செய்து, அதன் பல்வேறு இயல்புகளை நுட்பமாக ஆராய்ந்த சங்க காலத்தை யொட்டிப், புறப்பொருளின் ஒரு பகுதியாகிய ‘அறத்தின்' சிறப்பினை எடுத்துரைக்கும் அறநூல்கள் பல இயற்றப்பட்டன. அவை அமைப்பு முறையாலும், அறிவுறுத்தும் கருத்துகளாலும் தனிப்பட்டதோர் இலக்கிய வகையாகச் சிறப்புற்று விளங்குகின்றன, அவற்றைப் பிற்காலத்துச் சான்றோர்கள் ‘நீதி நூல்கள்’ என்னும் பெயரால் அழைக்கலாயினர். நீதிகளை அறிவுறுத்தும் நூல்களை 'நீதி நூல்கள்' என்று நாம் போற்றுகிறோம். ‘நீதி நூல்கள்' என்று குறிப்பிடும் வழக்கே தேவார காலத்தில் தோன்றியதாகும்.

 

திருக்குறளில் ஆசிரியர் எடுத்தியம்பும் பொருளைப் பலமுறையும் துருவித்துருவி ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொருமுறையும் புதிதுபுதிதாகச் சிறப்புமிக்க பொருள் நயம் புலப்படும். இதைப் பொருட்செறிவு அல்லது பொரு ளாழம் என்று கூறுவர். திருக்குறளின் முதல் பாட்டே இதற்கு நல்லதொரு சான்றாகும்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. ( குறள் 1)

இக்குறட்பா 'எழுத்துகளெல்லாம் அகரத்தை முதலாக உடையன, அதைப் போன்று உலகம் இறைவனை முதலாகத் தலைவனாகக் கொண்டிருக்கிறது' என்ற கருத்தை உணர்த்துகிறது.

 

இக்குறட்பாவை மொழியியல், அணியியல், அறவியல், மெய்ப்பொருளியல், இறையியல், அறிவியல் முதலிய பல்வேறு கலைகளின் கண்கொண்டு அணுகுவோமானால், புத்தம் புதிய கருத்துகள் பல இதிலிருந்து தோன்றும். அவற்றை விரிவாகப் பார்த்தால் கருத்துகள் பெருகும்.

 

தமிழ் இலக்கியத்துள் திருக்குறளுக்குச் சிறப்பு மிக்கதோர் தனி இடத்தை நம் முன்னோர்கள் கொடுத்துள்ளனர். அதில் அறிவுறுத்தும் கருத்துகள் மிகுதியாக இருந்த போதிலும் அதைச் சிறப்புமிக்கதோர் இலக்கியமாகவே அவர்கள் போற்றிவந்துள்ளனர். தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் கம்பருக்கும் இளங்கோவிற்கும் ஒப்பாகத் திருவள்ளு வரைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை! (பா.கவி. 22:2)

இப்பாடலில் கவின்மிகு காப்பியம் இயற்றிய கம்பருக்கும், சிந்தைக்கினிய சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகளுக்கும் இடையில் வள்ளுவரை வைத்துப் பாடியுள்ளமை கருதத்தக்கதாகும். காலவரன்முறைப்படி கூறுவதானால் வள்ளுவர், இளங்கோ, கம்பர் என்று முறைப்படுத்தியிருக்க வேண்டும். அல்லது எதுகை மோனை நயங்கருதிப் பாடியிருந்தால் 'யாமறிந்த புலவரிலே இளங்கோவைப்போல்' என்று அமைத்திருக்க வேண்டும்

 

திருக்குறள் மற்ற இலக்கியங்களைவிட தனித்தன்மை பெற்று விளங்குவதற்குக் காரணம் அவர் மனித அறிவு பற்றிக் கூறிய கருத்துகள் ஆகும். ஒரு மனிதனுடைய அகவாழ்வும், புறவாழ்வும் சிறப்பாக அமைய வேண்டுமானால், அவனுக்கு அறிவு முக்கியமாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். வள்ளுவர் மனிதனின் துன்பத்திற்கும், வறுமைக்கும் காரணம் அறியாமையே என்கிறார்.

 

உடைமைகள்

வள்ளுவர் மனிதனுக்கு வேண்டிய பல்வேறு சிறந்த பண்புகளைப் பல்வேறு இடங்களில் கூறுவார். அவற்றுள் சிலவற்றைத்தான் உடைமை என்று கூறுவதைக் காண முடிகிறது. அடக்கமுடைமை, அருளுடைமை, அறிவுடைமை, அன்புடமை, ஆள்வினை உடைமை, ஒழுக்கமுடைமை, நாணுடைமை, பண்புடமை, பொறையுடைமை ஆகியவை இத்தகையவை. இவ்வதிகாரங்களில் கூறப்படும் பண்புகள் மனிதனுக்கு இன்றியமையாது வேண்டிய பண்புகள் எனக் கருதப்படுகின்றன. இதில் அறிவு மிக முக்கியமான உடைமையாகும். அறிவின்றி வேறு உடைமைகளைப் பெற முடியாது.

 

அறிவும் பயனும்

அறிவு என்ற கலைச் சொல்லால் வள்ளுவர் அறிவு, மதிநலம், ஆய்வுணர் திறம், விவேகம், பகுத்தறிவு நெறி, நூலறிவு ஆகிய பலவகையான அறிவுகளைப் பற்றி ஆங்காங்கே தெளிவாக்குகிறார்.

"அறிவினால் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை” (315)

இக்குறள் சமுதாய அறிவைத் தூண்டுகிறது. சமத்துவ அறிவுக்கு வழி கோலுகிறது. அறிவின் பயன் மற்றவர்களுக்கு வரும் துன்பத்தைத் தமது துன்பம் போலக் கருதித் தீர்க்க வேண்டும் என்பதாகும். உலக வாழ்க்கையில் ஒருவன் வாழ்வதற்குத் தனக்கு உரிய பங்குக்கு மீறிய பொருள்மேல் பேராசைப்பட்டு, மற்றவருக்குரிய பொருளை ஒருவன் பெற விரும்பினால்  மனிதருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்தும் என்ன பயன் (175) என்று கேட்கிறார் வள்ளுவர். அறிவின் பயன் பிறருக்குரிய பொருளைக் கவராதிருத்தலும், பிறருக்கு உதவுவதுமே என்று தெளிவுபடுத்துகிறார்.

 

திருக்குறளில் பொருளாதாரம்

பொருளாதாரமே இன்னதென்று உருவாகாத காலத்திலே திருக்குறள் தோன்றியது. மேலை நாடுகளில் கி.பி. 18, 19-ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி தோன்றி இன்று மிகச்சிறந்த முறையில் வளர்ச்சியடைந்துள்ள கலையே பொருளாதாரக் கலையாகும். இப்பொருளாதாரக் கலை 18-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இன்றியமையாத கலையாக இருந்ததில்லை. இருந்தும் ஓரளவு அடிப்படைக் கருத்துகள் மிகச் சிறிய அளவில் திருக்குறளில் காணப்படுகிறது. இவை ஒரு சில பொருளாதாரக் கருத்துகள் பண்டைக் காலத்திலும் நிலவியிருந்தன என்பதற்குச் சான்றாகும்.

 

வரவும் செலவும்

பொருளும், சுங்கமாகிய பொருளும், பகைவர்கள் திறையாகக் கொடுத்த பொருளும் அரசாங்க வருவாய்களாக இருந்தன. இதனை இன்றைய பொருளாதாரம் குறிக்கும் ‘பொருளீட்டு நெறி' யோடு ஒப்பிட்டு அ.கி. பரந்தாமனார் விளக்குகிறார்.

திரட்டிய வரிப்பணத்தை அரசாங்கம் மூவகையில் செலவு செய்தது. கோயிலுக்கும், அந்தணர்க்கும், புலவர்க்கும், வறியர்க்கும் அரசாங்கம் செலவு செய்தது. இஃது அறப்பொருட்டாக ஆன செலவு. படைவீரர்களுக்கும் அரண் அமைத்தலுக்கும் போர்க் கருவிகள் முதலியவற்றிற்கும் அரசாங்கம் செலவு செய்தது. இது பொருட் பொருட்டாக ஆன செலவாகும். அரசாங்கம் வாவி, சோலை, மண்டபம் இவை அமைத்தலுக்கும் செலவு செய்தது

 

கணிதம் (Mathematics)

அறிவியலுக்குக் கணிதம் மிக மிக இன்றியமையாதது எனவே தான் அது ‘அறிவியலின் அரசி' என்று போற்றப்படுகின்றது. 'பொதுவாக கணிதம் என்று கூறப்படும் இந்த அறிவியல்தான் மற்றுள்ள எல்லா அறிவியலுக்கும் அடிப்படை என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்" கணிதத்தை 'எண்' என்று உரைத்தனர் அறிஞர்கள். அறிவியல் உணர்வுடைய வள்ளுவர் கணிதம், எண் மானிடத்தின் கண் என்பதை,

"எண்என்ப ஏனை எழுத்தேன்ப இவ்விரண்டும்

கண்என்ப வாழும் உயிர்க்கு" (குறள் - 392)

என்னும் குறள் மூலம் உயர்த்திக் கூறுகின்றார்.

 

உயிரியல் (Biology)

உயிரியல் என்பது உயிர்களின் பிறப்பு, இறப்பு வகைகள் உயிர்களின் உளவியல் உள்ளிட்ட தன்மைகளை ஆராயும் இயல்பாகும். 'ஆராய்ச்சியாளர்கள் 3.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே இப்பூமியில் உயிரினங்கள் தோன்றியிருக்கக் கூடும் என்று கூறுகின்றனர். அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்க தத்துவ ஞானிகளும் உயிரினங்களைத் தாவரவியல் விலங்கியல் என்று பிரித்தனர்'. இன்று உயிரியலானது பல்வேறு துறைகளாக, சூழ்நிலையியல் (Ecology), பறவையியல் (Ornithology) என்று வளர்ந்தவாறு உள்ளன. 'உலகில் வாழும் உயிரினங்களை அளவிற்கேற்ப ஆறு பிரிவாக வகுத்தனர் அறிவியலார். இயங்குவதற்கேற்ப நிலைத்தினை, இயங்குதினை என்றும் உண்ணும் முறைக்கேற்ப, புலால் உண்பவை, உண்ணாதவை என்றும் உடல் அமைப்பிற்கேற்ப எலும்புள்ளவை, எலும்பற்றவை என்று வகைக்கண்டனர். எறும்பு, பூச்சி முதலியன எலும்பு பெறாத காரணத்தால் சூரியனுடைய வெப்பத்தைத் தாங்கமுடியாமல் சூரிய ஒளிபட்டதும் சுருண்டு மடிகின்றன''' இவற்றை வள்ளுவர் எலும்பு இல்லாத ஒரு புழுவை வெயில் வாட்டுவதுபோல அறக்கடவுள் அன்பில்லாத மனிதனை வாட்டுவார் என்று உயிரிகளின் எலும்பில்லாத்தன்மையைக் கூறுகிறார். இதனை,

"என்பிலதனை வெயில் போலக் காயுமே

அன்பி லதனை அறம்" (கு.77)

என்ற குறள் காட்டுகிறது.

 

வேதியியல் (Chemistry)

வேதியியல் மனிதனின் அனைத்து பயன்பாட்டிலும் முக்கியமான ஒரு துறையாக விளங்குகின்றது. இன்று அனைத்து பொருள்களின் உற்பத்தியிலும் வேதியியல் துறையின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். இது சார்ந்த கருத்துகள் குறளில் இடம்பெற்றுள்ளன.

 

இயற்பியல் (Physics)

இன்றைய உலகில் இயற்பியல் இன்றியமைந்ததாக இருக்கின்றது. அனைத்துத் துறைகளிலும் இதன் பயன்பாடு அதிகமாக இருக்கின்றது. "ஒரு நாட்டின் முன்னேற்றம், நலம் மற்றும் பாதுகாப்பு எதைப் பொருத்தது என்றால் அந்நாடு இயற்பியலில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்று இருக்கிறதோ அதைப்   பொருத்ததாகும்” மேலும் அறிஞர்கள் "இயற்பியல் என்பது இயற்கைப் பொருள்களைப் பற்றிய அறிவாகும்” என்கின்றனர்.

 

வள்ளுவர் கண்களே ஒருவரைத் துல்லியமாக அளந்துகாட்டும் நுட்ப அளவுகோல் என்றுரைக்கிறார், அளவு நுட்பத்தினைப் போன்று எடை நுட்பமும் முக்கியமானது என்பதைக் கீழ்வரும் குறளில் கூறுகிறார்.

 

"சமன்செய்துசீர் தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி" (குறள் - 118)

 

இத்துலாக்கோலானது ஒரு பொருளின் எடையை மிகத் துல்லியமாக ஆராய்ந்து, இயற்பியலின் நுட்பத்தைக் கூறுகிறது. அதைப் போல இக்குறளில் துாலாக்கோலைப் போல சான்றோர்கள் நடுவுநிலைமை தவறாமல் ஒருபக்கம் சாயாத்திருத்தலே அழகு என்கிறார்.

 

பகுத்தறிவு

மானிடச் சிந்தனை முழு அறிவுத் திறனோடு இசைந்திருக்கச் செய்கிற முடிவில்லாத செயல்முறையே அறிவு. அறியாமையிலிருந்து அறிவை நோக்கியும் அரைகுறை அறிவிலிருந்து சரியான அறிவை நோக்கியும் செல்லக்கூடிய மனிதச் சிந்தனையின் இயக்கமே அறிவு. பழைய கொள்கைகளை – முடிவுகளை - நீக்கி, புதியனவற்றைப் புகுத்தி முழுமையற்றவைகளை முழுமையாக ஆக்கி மெய்மையின் புதிய பகுதிகளை அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டே செல்வது அறிவின் முன்னேற்றம் ஆகும். முழுமையான உண்மைப் பொருளை காண்பதே பகுத்தறிவு. ஒன்றைப் பற்றிய சரியான அறிவே அந்தப் பொருளைப் பற்றிய உண்மையும் ஆகும். எனவே ஒன்றைப் பற்றிய முழு அறிவினைப் பெறாமல் அதனைப் பற்றிய முழு உண்மையைக் காண முடியாது. எனவே முழு உண்மையை அறிவது என்பது ஒன்றைப் பற்றிய முழு அறிவைப் பெறுவது என்பதாகிறது. அந்த முழு உண்மையையே செம்பொருள் என்றார்.

 

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்பொருள் காண்பது அறிவு" (424)

இக்காலத்திலும் வெப்பத்தின் துணைக்கொண்டே பல்வேறு உலோகங்களும், அலோகங்களும் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன என்பதற்குச் சான்றாக வள்ளுவர்

"சுடச்சுடரும் பொன்போல்ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோக்கிற் பவர்க்கு" (கு. 267)

என்கிறார். பொன்னானது புடம்போட்டுக் காய்ச்ச காய்ச்ச ஒளிமிகும். அதுபோல் இரும்பின் தன்மையைக் கூறும் வள்ளுவர் உட்பகை கொண்டவர்கள் ஒரே குடும்பத்தில் சேர்ந்து வாழ்ந்தாலும் அரத்தால் அராவி குறைக்கப்பட்ட இரும்பைப் போல வலிமை இழந்து காணப்படுவர் என்பதை

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொழுது

 உட்பகை உற்ற குடி" (கு.888) என்கிறார்.

 

நூலறிவும் ஆய்வறிவும்

ஒருவன் பல நூல்களைக் கற்பதன் மூலமாக அறிவைப் பெற முடியும் என்கிறார் வள்ளுவர்,

தொட்டனைத் துாறு மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் துதூறும் அறிவு" (396)

 

ஒரு பொருளினைப் பார்த்த உடனே அதனை மதிப்பிடக் கூடாது. அப்பொருளின் உண்மை என்ன என்பதனை ஆய்ந்து அறிவதே உண்மையான அறிவாகும்.

''நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்

மண்மாண் புனைபாவை யற்று" (407)

ஆய்வறிவு இல்லாதவர்கள் மண் பொம்மை போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள். அவர்களை மனிதர்களாக மதிக்க முடியாது என்கிறார் வள்ளுவர்.

 

திருக்குறளில் அரசியல்

திருக்குறளில் அரசு எங்ஙனம் தோன்றியது என்பது குறித்த, சமுதாய ஒப்பந்தக் கொள்கை, தாய் முறைக்கொள்கை, இன்பக்கொள்கை, படிப்படி வளர்ச்சிக் கொள்கை முதலிய கொள்கைகளை விளக்கிக் கூறியுள்ளார். இவற்றில் தெய்வீக உரிமைக் கொள்கையான, ‘அரசன் கடவுள் தன்மை வாய்ந்தவன்' எனும் கருத்துக்குத் திருக்குறளில் உள்ளது. வள்ளுவர் கூறும் அரசியல், சாணக்கியர், மாக்கியவல்லி ஆகியோர் கூறிய அரசியல் முறையிலிருந்து மாறுபட்டது. 'ஒற்றாடல்' போன்ற அரசியல் தந்திரங்களைக் வள்ளுவரின் பொருட்பாலில் இடம்பெற்றுள்ளது.

 

முடிவுரை

பண்டைய இலக்கியங்களைப் புதிய அறிவுத்துறைகளோடு ஒப்பிட்டுக் காட்டுவதால் அக்குறிப்பிட்ட இலக்கியம் அதன் சமகாலத் தன்மையைப் புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டு நிலைபேறடைகிறது. குறிப்பாகத் திருக்குறளின் நிலைபேற்றுக்கு இதனைக் காரணம் காட்ட முடிகிறது. உலகப் பொதுமறையாம் திருக்குறளில் இன்றைய 'அறிவியல் தொழில்நுட்பம், உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் போன்ற பல்வேறு துறைகளின் உயர்மிகு சிந்தனைக் கருத்துகளை காண முடிகின்றது. அன்றே அவர் கூறியிருப்பது திருக்குறளின் தனிச்சிறப்பினையும் அக்கால மக்களின் அறிவியல் வாழ்க்கை முறையினையும் காட்டுவதாக உள்ளது.

 Mobile Number  9600270331

பயன்பட்ட நூல்கள்

 

1.திருக்குறள், பரிமேலழகர் உரை, அருணா, 2020

2.திருக்குறள் நீதி இலக்கியம், 1977, சென்னைப் பல்கலைக்கழகம்

3.தமிழ் இலக்கியங்களில் மனித விழுமியங்கள், பிப்ரவரி, 2012

4.மனித வாழ்க்கை விழுமியங்கள் சோமசுந்தரம், குமாரசாமி, 2010

5.நாமக்கல் கவிஞரின் திருக்குறள் எளிய உரை - 1999

6.திருக்குறள் உரைவளம், தண்டபாணி தேசிகர், 1951.

7. நீதிநூல் கொத்து, கழக வெளியீடு, 1964.

8.தமிழில் பொது அறிவியல், கு. அண்ணாதுரை, 2003.

9.தமிழும் பிற துறைகளும், நா. கடிகாசலம், 1994.

10.விஞ்ஞான வரலாறு, சி, மகாதேவன், 1995.


0 Response to "திருக்குறளில் அறிவியல் பார்வை - வெ. பாலமுருகன் - கட்டுரை"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel