தமிழ் அறிவோம்! 103. முப்பேரும் பெற்ற மோர் ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 103. முப்பேரும் பெற்ற மோர் ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!   103.  முப்பேரும் பெற்ற மோர் ஆ.தி.பகலன்

 


முப்பேரும் பெற்ற மோர் 

 

ஒருநாள் காளமேகப் புலவர் கடும்வெயில் நேரத்தில் சாலையில் நடந்து வந்தார். காளமேகப் புலவருக்குத் தொண்டை வறண்டு தாகம் எடுத்தது.  தலையில் கூடையுடன் ஆயர்குலப் பெண்ணொருத்தி 'மோர் மோரே ' என்று கூவிக்கொண்டு எதிரே வந்தாள்.

அவளை அழைத்து ஒரு குவளை மோர் வாங்கிக் குடித்தார்.

ஆனால், அந்தக் குவளையில் மோரைவிடத் தண்ணீர்தான் அதிகமாக இருந்தது. மோர் விற்றவள் பெண் என்பதால் அவளை வைய மனம் வரவில்லை. குடித்த மோருக்கு காசு கொடுத்தார். இவர்தான் காளமேகப் புலவர் என்பதை அறிந்து கொண்ட அந்தப் பெண் அவரிடம் காசு  வாங்கவில்லை .

"ஐயா, எனக்குக் காசு வேண்டாம். எத்தனையோ பொருள்களை வைத்து அழகானப் பாடல்களை பாடி இருக்கிறீர்கள். அதுபோல, இன்று நான் கொடுத்த மோரை வைத்து ஒரு பாடல் பாடுங்கள். எனக்கு அது போதும். காசு வேண்டாம் " என்று வேண்டினாள்.

அந்த ஆயர்குலப்பெண் கொடுத்த மோர் வெறும் மோர் அல்ல, நீர்மோர் என்பதை தன் பாட்டால் கிண்டலடித்து உணர்த்தினார் காளமேகப் புலவர்.

 "காரென்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது

நீரென்று பேர்படைத்தாய் நெடுந்தரையில் வந்ததன்பின்

வாரொன்று மென்முலையார் ஆய்ச்சியர்கை வந்ததன்பின்

மோரென்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே " 

(காளமேகப் புலவர் பாடல்கள் - 184) 

இடைச்சி தந்த மோரே! ( மோர் வடிவில் இருக்கும் நீரே) வானத்தில் இருக்கும் போது நீ "கார்" ( மேகம்)  என்ற பெயரைப் பெற்றிருந்தாய். இந்த உலகிற்கு வந்தபிறகு "  நீர் " என்ற பெயரைப் பெற்றாய். கச்சையணிந்த மென்மையான தனங்களையுடைய இடைச்சியர் கையில் சேர்ந்த பின் " மோர் " என்ற பெயரைப் பெற்றுக் கொண்டாய் . இங்ஙனம்,  நீ கார் (மேகம்), நீர், மோர் என்று மூன்று பெயரையும் பெற்று முப்பேறும் ( மூன்று தகுதிகளையும்)  பெற்று விட்டாய்.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

0 Response to "தமிழ் அறிவோம்! 103. முப்பேரும் பெற்ற மோர் ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel