" தமிழ்க் கவிஞர் நாள் "
தமிழ்நாட்டில் " பாவேந்தர் " பாரதிதாசன்
பிறந்த நாளான ஏப்ரல் 29ஆம் நாளை
" தமிழ்க் கவிஞர் நாளாக"
கொண்டாடப்படும் என்று தமிழக அரசு 2016 ஆம் ஆண்டு அறிவித்தது.
2016 ஆம் ஆண்டுமுதல் தமிழ் வளர்ச்சித் துறை மூலமாக " தமிழ்க் கவிஞர் நாளை " சிறப்பாகக் கொண்டாடி வருகிறது தமிழக அரசு.
சங்க காலத்தில் தமிழ்க் கவிஞர்களை அரசர்கள் எப்படி கொண்டாடினார்கள் என்பதை ஒரு பாடல்வழி பார்ப்போம்.
ஒருநாள் மோசிகீரனார் , சேரமான் தகடூர் எறிந்த
பெருஞ்சேரல் இரும்பொறையைக் காணச் சென்றார். நீண்ட தூரம் நடந்து வந்த களைப்பு
மிகுதியால் அங்கிருந்த முரசுக் கட்டிலில் படுத்து உறங்கினார். அக்காலத்தில்
முரசுக் கட்டில் புனிதமாகக் கருதப்பட்டது. அந்தக் கட்டிலில் யாராவது படுத்தால்
கடுந்தண்டனை வழங்குவது வழக்கம். ஆனால், புலவர் மோசிகீரனார் கட்டிலில் உறங்குவதைக் கண்ட சேர மன்னன் , அவரை
உறக்கத்தில் இருந்து எழுப்பாமல் அவருக்குக் கவரி வீசினான். மன்னனின் செயலால்
மிகவும் வியப்படைந்த புலவர் மோசிகீரனார் அவனைப் பாராட்டும் வகையில் ஒரு பாடல்
ஒன்றைப் பாடினார்.
அப்பாடல் புறநானூற்றில் ( 50 ஆவது பாடல்) இடம்பெற்றுள்ளது.
அப்பாடல் கூறும் கருத்து :
குற்றமில்லாமல் வாரால் இறுக்கிக் கட்டப்பட்டு, வயிரம்
கொண்ட கரிய மரத்தால் செய்யப்பட்டு ,
நடுவிடம் அழகாக விளங்குமாறு நெடிய மயில் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டு ,
நீலமணிகளும் பொன்னிறமான உழிஞைப் பூக்களும் அணிந்து , குருதிப்பலியை விரும்பும்
அச்சம் தரும் முரசு, நீராட்டுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டு இருந்தது. அவ்வேளையில்
, எண்ணெய் நுரையை முகந்து வைத்ததுபோல்
இருந்த மெல்லிய மலர்க்கட்டிலை முரசுக்கட்டில் என்று அறியாது நான்
ஏறிப்படுத்தேன். என் செயலுக்காக என்னைச் சினந்து , இரு கூறாக வெட்டக்கூடிய உன்
கூரிய வாளால் வெட்டாமல் விடுத்தாய்.
நீ தமிழை நன்கு அறிந்தவன் என்பதற்கு அதுவே சான்று.
அத்தோடு அமையாமல் என்னை அணுகி வலிமை மிக்க
உன் தோளால் அகன்ற இடமெல்லாம் குளிர்ந்த காற்று வரும்படி கவரி வீசினாய்.இந்த உலகத்தில் புகழ்
உடையோருக்குத்தான் மேலுலகத்தில் வாழும் பேறு கிடைக்கும் என்பார்கள். அதற்கு மாறாக, ( குற்றம் செய்த எனக்கே இந்த
உலகத்தில்) மேலுலக வாழ்வு தந்த உன்
செயலை என்னவென்று சொல்வேன்? என்கிறார் மோசிகீரனார்.
சங்க காலத்தில் அரசர்கள் புலவர்களைப் பாராட்டி அவர்களுக்குப் பொன்னும் பொருளும் அளித்தது மட்டுமல்லாமல் அவர்களைப் பெரிதும் போற்றி மகிழ்ந்தார்கள் என்பதற்கு இப்பாடல் ஒரு சிறந்த சான்றாகும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 105. தமிழ்க் கவிஞர் நாள் ஆ.தி.பகலன்"
Post a Comment