தமிழ் அறிவோம்! 106. கல்லாதவரும் நனிநல்லர் ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 106. கல்லாதவரும் நனிநல்லர் ஆ.தி.பகலன்

 தமிழ் அறிவோம்!  106. கல்லாதவரும் நனிநல்லர் ஆ.தி.பகலன்

 


" கல்லாதவரும் நனிநல்லர் "

 இந்தியா விடுதலை ( 1947)  பெற்ற போது நம் நாட்டு மக்கள் தொகையில்  9 விழுக்காட்டினர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர்களாக  இருந்தனர்.

தற்போதைய ( 2023 ஆம் ஆண்டு)  புள்ளி விவரத்தின்படி 77 விழுக்காட்டினர் எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். விடுதலை பெற்று 77 ஆண்டுகளைக் கடந்தும் நம் நாட்டு மக்களின் எழுத்தறிவு 77 விழுக்காட்டினைத் தாண்டவில்லை.

100 விழுக்காட்டினைத்  தாண்ட வேண்டுமென்றால் , நாம்  இன்னும் ஒரு நூற்றாண்டைக் கடக்க வேண்டும் போல.

"இதற்கெல்லாம் காரணம் அரசு " என்று சொன்னால் அது அறிவற்ற செயல்.

"கற்றவர்கள், கல்வியால் அறிவைப் பெற்றவர்கள் எல்லோரும் தங்களைப் போல மற்றவர்களும்  கல்வியறிவு பெற வேண்டும், அவர்கள் கல்வியறிவு பெற நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும்" என்று எண்ணாமல் இருப்பதுதான் உண்மையான காரணமாகும். 

"எரிகின்ற விளக்கால்தான் இன்னொரு விளக்கை ஏற்ற முடியும் " என்பார்கள். ஒரு விளக்கின் பணி இருளை நீக்கி வெளிச்சத்தைத் தருவது. ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றாமல் இருந்தால், தான் இருக்கும் இடத்திற்கு வெளிச்சம் தராமல் இருந்தால் அந்த விளக்கு இருந்து என்ன பயன்?

அப்படித்தான் இருக்கிறது இன்று கற்றவர்களின் செயல். 

"கல்வி கற்ற ஒருவர் தன் வாழ்நாளில் 10 பேருக்காவது எழுதப் படிக்கக் கற்றுத்தர வேண்டும் " என்றார் அப்துல் கலாம். இதை எத்தனை பேர் கடைப்பிடித்திருப்போம். 

"கல்வி கற்ற ஒருவர், தாம் கற்ற கல்வியை மற்றவர்களுக்குக் கற்றுத் தராமல் போனால் அவர்களைத் தூக்கில் தொங்கவிடுங்கள் " என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன் . 

" கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக்

கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம் " ( பாண்டியன் பரிசு) 

ஓரிடத்தில் கற்றவரையும், கல்லாதவரையும் கண்டால் கல்லாதவரை விட்டுவிடுங்கள். கற்றவரைக் கொன்றுவிடுங்கள். படித்தும் பத்து பேருக்குப் பயன்தராதவன் வாழ்ந்து என்ன பயன்? என்பதே பாவேந்தரின் கருத்து. 

பாவேந்தரின் கருத்தை நாம் கடைப்பிடித்தால்,   " முப்பது கோடி முகமுடையாள் " என்ற பாரதியாரின் பாடலைத்தான் என்றென்றும் பாடிக் கொண்டு இருக்கவேண்டும். ஏனென்றால், அவ்வளவு பேரை நாம் கொல்ல வேண்டியிருக்கும். 

" லருவாயைப் பெற்றுத் தருவது கல்வி அல்ல!

வாழ்வதற்குக் கற்றுத் தருவதுதான்

உண்மையானக் கல்வி! 

"படித்தோம், பணம் சம்பாதித்தோம் என்றில்லாமல், படித்தோம் பத்து பேர் வாழ நாமும் காரணமாக இருந்தோம் " என்று வாழ்வோம். அதுதான்  நாம் கற்றதற்கான அடையாளம். 

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் யாருக்கேனும் வாசிக்கக் கற்றுக் கொடுங்கள். எழுத்துகளை அடையாளம் காணக்  கற்றுக்கொடுங்கள்.  அவர்கள் வாழ்க்கைக்கு நீங்களே அடையாளம் ஆவீர்கள். 

 100 விழுக்காடு எழுத்தறிவு பெற்றவர்களைக் கொண்ட நாடாக நம் நாடு என்று மாறுகிறதோ  அன்றுதான்  நாம் பெருமையாகச் சொல்ல முடியும்.

நாம் கற்றவர்கள் என்று. இல்லையேல் நாமும் கல்லாதவர்களே. 

இன்று வள்ளுவர் இருந்திருந்தால், இந்த அவலநிலையைக் கண்டு இப்படி ஒரு குறள் எழுதி இருப்பார்.

 "கல்லா தவரும் நனிநல்லர் கற்றதைக்

கற்பிக்க எண்ணாதோர் முன். " 

விளக்கம் :

தான் கற்ற கல்வியை மற்றவர்களுக்குக் கற்பிக்க எண்ணாதவர்களுக்கு  முன்னால், கல்வி அறிவு இல்லாதவர்களே சிறந்தவர்கள்.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

0 Response to " தமிழ் அறிவோம்! 106. கல்லாதவரும் நனிநல்லர் ஆ.தி.பகலன் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel