நட்பில் பிழை பொறுத்தல்
வான்நிலவுக்கும் கறையுண்டு!
வாழும் மனிதரிடத்தில் குறையுண்டு!
இந்த உலகில் குறை இல்லாத மனிதன் இல்லை. அந்தக் குறைகளைப்
பெரிது படுத்துபவன் மனிதனே இல்லை. அதிலும் நட்பில் குறை காண்பவனை எந்த
உயிரினத்தோடும் சேர்க்க முடியாது. அதாவது, அவர்கள் உயர்திணையும் இல்லை, அஃறிணையும்
இல்லை.
" நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும் ;
நெல்லுக்கு உமியுண்டு; நீர்க்கு நுரையுண்டு ;
புல்லிதழ் பூவிற்கும் உண்டு. ( நாலடியார் - 221)
நல்லவரென்று ஆராய்ந்து தேர்ந்தபின், அந்நல்லவரிடம் நட்பு
கொண்டபின், அந்நல்லவரிடம் ஒரு சில குறைகள்
இருப்பது நமக்கு தெரிய வரலாம். ஒவ்வொரு
மனிதனிடமும் ஏதாவது ஒரு குறை இருப்பது இயல்பு. அதை நாம் பெருந்தன்மையோடு
பொறுத்துக் கொள்ள வேண்டும்.
நெல்லுக்கு உமி இருந்தாலும் அதை நீக்கிவிட்டு அரிசியாகக்
கொள்கிறோம். தண்ணீரில் நுரை இருந்தாலும் அதை நீக்கிவிட்டு தண்ணீரை மட்டும்
குடிக்கிறோம். பூவில் முள் இருந்தாலும் அதை நீக்கிவிட்டு மலரை மட்டும் சூடுகிறோம்.
ஆதலால், நட்பு கொண்டவரிடத்தில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் அதை நீக்கிவிட்டு அவர் நட்பையும், அவரிடம் உள்ள நற்பண்பையும் மட்டுமே நாம் பார்க்க வேண்டும். அவரிடம் உள்ள குறைகளைப் பார்க்கக் கூடாது.
அதுதான் நட்புக்கு அழகு.
" இனிமை தேடும்வரை இருப்பது அல்ல நட்பு!
இமைகள் மூடும்வரை
இருப்பதுதான் நட்பு!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to " தமிழ் அறிவோம்! 108. நட்பில் பிழை பொறுத்தல் ஆ.தி.பகலன் "
Post a Comment