
" திருக்குறளும் தமிழ் எழுத்துகளும் "
திருக்குறளில் எண்ணற்ற சிறப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்றினைப் பார்ப்போம்.
"எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் " ( தொல்காப்பியம் - 01)
தமிழ் எழுத்துகள் அகரத்தில் ( அ ) தொடங்கி னகரத்தில் ( ன்) முடிவதாகக் கூறுகிறார் தொல்காப்பியர்.
தொல்காப்பியர் கூற்றுப்படியே திருவள்ளுவரும் தன்
குறட்பாக்களை அமைத்துள்ளார்.
தன் முதல் குறட்பாவை அகரத்தில் தொடங்கி இருக்கிறார்.
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. "
முதல் குறட்பா 'அ ' என்ற எழுத்தில் தொடங்கி இருக்கிறது.
கடைசி குறட்பா (1330)வின் கடைசி எழுத்து னகரத்தில் (ன்) முடிந்துள்ளதைப் பாருங்கள் .
"ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்."
இக்குறட்பாவின் ஈற்றுச்சீரின் ( பெறின்) ஈற்று ( ன்) எழுத்து னகரத்தில் ( ன்) முடிந்து இருக்கிறது .
திருக்குறள் அகரத்தில் ( அ) தொடங்கி னகரத்தில் ( ன் ) முடிந்துள்ளது என்பது எல்லோர்க்கும் தெரிந்த செய்திதான். இனி தெரியாத செய்தியைத் தெரிந்து கொள்வோம்.
தமிழில் உள்ள முதலெழுத்துகளில் உயிரெழுத்துகள் , மெய்யெழுத்துகள் என இருவகை
உண்டு. அவற்றில்
உயிரெழுத்துகளைக் குறில் , நெடில் என்று இருவகையாகப்
பிரிப்பர். அதையும் தன் குறட்பாவில்
புகுத்தி இருக்கிறார் திருவள்ளுவர்.
தன் முதல் குறட்பாவை குறில் எழுத்தில் ( அகர - அ ) தொடங்கிய திருவள்ளுவர், தன் கடைசி குறட்பாவை நெடில் எழுத்தில் தொடங்கி ( ஊடுதல் - ஊ ) இருக்கிறார்.
மெய்யெழுத்துகளை வல்லினம், மெல்லினம், இடையினம் என்று
மூவகையாகப் பிரிப்பர். இதையும் திருக்குறளில் புகுத்தி இருக்கிறார் திருவள்ளுவர்.
தன் இரண்டாவது குறட்பாவை வல்லினத்தில் தொடங்கி இருப்பார்.
"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்."
கற்றதனால் - க (
க்+ அ )
க் - வல்லினம்.
மூன்றாவது குறட்பாவை மெல்லினத்தில் தொடங்கி இருப்பார்.
"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்."
மலர்மிசை - ம ( ம்+ அ )
ம் - மெல்லினம்.
தன் நான்காவது குறட்பாவை இடையினத்தில் தொடங்கி
இருப்பார்.
"வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல."
வேண்டுதல் - வே ( வ் + ஏ )
வ் - இடையினம்.
திருக்குறளில் தமிழ் என்ற சொல்தான் இல்லையே தவிர, தமிழின் சிறப்புகள் அனைத்தும் திருக்குறளில்
உண்டு என்பதற்கு இதுவே சான்றாகும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to " தமிழ் அறிவோம்! 120. திருக்குறளும் தமிழ் எழுத்துகளும் ஆ.தி.பகலன்"
Post a Comment