"நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் "
ஒவ்வொரு குடும்பத்திற்கும் அச்சாணியாய் ,ஆலம் விழுதாய்
இருப்பது கணவனும் மனைவியும்தான். அவர்கள்
இருவரால் ஒரு குடும்பம் கோபுரமாகவும்
மாறலாம். குப்பையாகவும் மாறலாம்.
"திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் "
என்பார்கள் நம் முன்னோர்கள். நாகரிக
உலகில் நீண்ட காலப்பயிர்கள் எல்லாம் எப்படி குறுகிய கால பயிர்கள் ஆனதோ, அதுபோல.
"ஆயிரம் காலத்துப் பயிராக இருந்த திருமண வாழ்க்கை இன்று ஐந்தாண்டு
பயிராகவும், பத்தாண்டு பயிராகவும் மாறிவிட்டது.
அன்றைய காலகட்டத்தில் திருமண உறவு என்பது மரணம்வரை
தொடர்ந்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில்
திருமண உறவுகள் பெரும்பாலும் மணமுறிவு ( விவாகரத்து) வரைதான் தொடர்கிறது.
தன்னை நம்பி வந்த வாழ்க்கைத் துணைக்காக, தன் விருப்பு
வெறுப்புகளை மறந்து தன்னையே கொடையாய் கொடுப்பதுதான் உண்மையான இல்லற வாழ்க்கை.
இல்வாழ்வில் கருத்து வேறுபாடுகள் பல வரலாம். அது
களையப்பட வேண்டுமே தவிர கழற்றி
விடவேண்டும் என்று எண்ணுதல் கூடாது.
"உவமைக் கவிஞர் " சுரதா அவர்கள் மணமக்களை
வாழ்த்தும்போது " இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள். பிரிந்தால் பொருள் இல்லை ." என்று
சொல்லிதான் வாழ்த்துவார்.
"ஓடுகிற வண்டி ஓட
ஒத்துமையா ரெண்டு மாடு
ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா
என்ன ஆகும் எண்ணிப்பாரு "
இல்லற வாழ்வின் தத்துவத்தை மிகச்சிறப்பாக எடுத்துச்
சொல்லி இருக்கிறது இத்திரைப்படப் பாடல்.
பழந்தமிழ் இலக்கியத்தில் காட்டப்பட்டிருக்கும் கணவன் மனைவி உறவின் சிறப்பை உலகின் வேறு
எம்மொழி இலக்கியங்களிலும் காட்டப்படவில்லை.
"இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியர்என் கணவனை
யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே " ( குறுந்தொகை - 49)
"இப்பிறவி மட்டுமல்ல ,
மறுபிறவி மட்டுமல்ல, எல்லாப் பிறவிகளிலும் நீயே எனக்கு
கணவனாக இருக்கவேண்டும். நானே உனக்கு நீ விரும்பும் மனைவியாக இருக்க வேண்டும்
" என்று தன் விருப்பத்தைத் கணவனிடம் கூறுகிறாள் தலைவி.
நமக்குள் இருக்கும் அன்பு பிறவிதோறும் தொடர வேண்டும்
என்ற தலைவியின் விருப்பத்தை இது வெளிக்காட்டுகிறது.
இப்படித்தான்
வாழ்ந்தது நம் தமிழ்ச்சமூகம்.
அதுபோலவே,
இன்றைய சமூகமும் வாழவேண்டும். அப்படி வாழ்ந்தால்தான்
"நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் " என்பது உண்மையாகும்.
உலகையே தன் குடும்பமாக எண்ணி வாழ்ந்தது நம் தமிழ்ச்சமூகம் . அந்த வழியைப் பின்பற்றி சாதி, மத, இன வேறுபாடுகள் களைந்து உலகோர் அனைவரும் ஒரு குடும்பமாய் வாழ்வோம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 121. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் ஆ.தி.பகலன்"
Post a Comment