"பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் "
வகுப்பறையில்
ஆசிரியர் ஒருவர் கணிதப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். கூட்டல் கணக்குகளை எளிய
முறையில் விளக்கினார். பாடம் நடத்தி முடித்தபின் மாணவர்களைக் கேள்வி கேட்டார். அனைவரும் மிகச்சிறப்பாக
விடையளித்தனர். கடைசியாக ஒரு மாணவனை எழுப்பினார். அவன் கற்றலில் குறைபாடு உள்ள
மாணவன் என்பதால் மிக எளிதான ஒரு கேள்வியை அவனிடம் கேட்டார்.
முப்பதையும் (30) , இருபதையும் (20) கூட்டினால் என்ன வரும் என்று கேட்டார்.
அதற்கு அந்த மாணவன் " நாற்பது வரும் "
என்றான்.
"நன்றாக யோசித்து விடையளி " என்றார் ஆசிரியர்
.
"நன்றாக யோசித்துப் பார்த்தேன் நாற்பது தான்
வருகிறது " என்றான் அவன்.
"முப்பதையும் , இருபதையும் கூட்டினால் ஐம்பது தானே
வரவேண்டும் . எப்படி நாற்பது வரும்?
என்று கேட்டார் ஆசிரியர் .
அதற்கு அந்த மாணவன் அளித்த விளக்கத்தைப் பாருங்கள்.
"ஐயா , முப்பதையும் , இருபதையும் கூட்டினால்
ஐம்பதுதான் வரும் " என்று எனக்கு நன்றாகவே தெரியும் .
இப்போது உணவு இடைவேளை விடுகின்ற ( நண்பகல் 12.30 ) நேரம்
அல்லவா ? .
எனக்கு இப்போது பயங்கரமாகப் பசி வந்துவிட்டது.
"பசி வந்தால் பத்தும் பறந்து போகும் "
என்பார்கள். அதனால்தான் பத்து பறந்து போய்
விட்டது . ( 50 - 10 = 40 ). மீதி நாற்பது
இருக்கிறது " என்றான் .
"பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் "
என்பதைத் தவறாக புரிந்து கொண்டதன் விளைவு இது.
உண்மையில் " பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்
" என்பதற்கு பொருள்தான் என்ன?
"மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம். " ( நல்வழி - 26)
1. மானம் - தன்மான உணர்வு
2. குலம் - தன் குலப்பெருமை பற்றிய சிந்தனை.
3. கல்வி - கற்ற கல்வியின் சிந்தனை.
4. வண்மை - உடல் வளம்.
5. அறிவுடைமை - எண்ணிப் பார்க்கும் அறிவு.
6. தானம் - கொடை வழங்கும் வள்ளல் தன்மை.
7. தவம் - தவம் செய்யும் அறநெறி.
8. உயர்ச்சி - உயர்வு பற்றிய எண்ணம்.
9. தாளாண்மை - செயலாற்றத் தூண்டும் ஊக்கம்.
10. காமுறுதல் - தேன்போல் பேசும் பெண்ணின் மீது
ஆசைப்படுதல்.
மேற்கண்ட. பத்தும்
"பசி வந்திடப்
பறந்து போகும் " என்கிறார் ஔவையார்.
ஒரு மனிதனுக்கு பசியென்னும் நோய் வந்துவிட்டால் அவனிடம்
உள்ள சிறந்த குணங்களாகிய அனைத்தும் காணாமல் போகும்.
பசிக்கொடுமையால் ஏற்படும் விளைவை இதைவிட சிறப்பாகச்
சொல்ல ஔவையாரைத் தவிர வேறு யாரால் முடியும்?
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 122. பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் ஆ.தி.பகலன்"
Post a Comment