" யான்பெற்ற பெருந்தவப் பேறு "
நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவரிடம், "நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே
இருக்கிறீர்களே? உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லையா? என்று கேட்டேன்.
அதற்கு அவர், உப்பு ( கடல்) நீரை எடுத்துக் கொண்டு
நன்னீரைத் தரும் மேகத்தைப் போல இந்த உலகம் நமக்கு
என்ன தீங்கு செய்தாலும், நாம் நன்மையே செய்ய வேண்டும். அவர்கள் நமக்கு செய்த இன்னல்களுக்கு தண்டனையாக வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். நம் இன்முகத்தில்
தோன்றும் புன்னகை ஒன்றே போதுமானது.
நமக்குத் தீங்கு செய்தவர்கள் எதிரே வரும்போது உங்கள்
சினத்தையோ , கவலையையோ வெளிப்படுத்தாதீர்கள். எந்த அளவுக்கு சிரிக்க முடியுமோ அந்த
அளவுக்கு சிரித்துக்கொண்டு அவர்களைக் கடந்து செல்லுங்கள்.
"நாம் எவ்வளவோ தீங்கு செய்தும் அவன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறானே" என்ற
பொறாமையில் அவர்களது ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் மங்கி விடும் .
அதுமட்டுமல்ல!
யாராவது உங்களைப் பார்த்து "நீங்கள் நன்றாக
இருக்கிறீர்களா? என்று கேட்டால் ,
வேலை இல்லை , வருவாய் இல்லை , கடன் தொல்லை , வாழ்வில்
நிம்மதி இல்லை " என்று சோக புராணம் பாடாதீர்கள் . நாம் எதிர்மறையாக
பேசினாலும் , எதிர்மறையாக சிந்தித்தாலும் நம் வாழ்வில் எல்லாமே எதிர்மறையாகவே
நடக்கும்.
எதிரே இருப்பவர்களும் " பரவாயில்லை நமக்கு ஆயிரம் கவலை என்றால் இவனுக்கு ஐயாயிரம் கவலை
இருக்கிறது" என்று சொல்லி மகிழ்ச்சி அடைவார்கள்.
அதனால், யாரிடமும் எப்போதும் உங்கள் கவலை குப்பைகளைக் கொட்டாதீர்கள். உங்களை இனி யார்
நலம் விசாரித்தாலும்,
"எனக்கு என்ன கவலை? மகிழ்ச்சியாக இருக்கிறேன். அன்பான மனைவி, அறிவார்ந்த பிள்ளைகள், கை நிறைய அல்ல பை நிறைய
வருவாய், எந்தக் கடன் தொல்லையும் இல்லை.
என் மகிழ்ச்சிக்கு அந்த வானமே எல்லை " என்று அள்ளி விடுங்கள்.
"ஒரு பொய்யை பத்துமுறை சொன்னால் அது உண்மையாகும் " என்பார்கள். நாம் சொல்கின்ற
இந்த நல்ல நல்ல பொய்கள் எல்லாம் நாளை
உண்மையாகும். நம் வாழ்க்கைக்கு நன்மையாகும். நம் துன்பத்தைக் கேட்டு மகிழ்ச்சியடையும் வாய்ப்பை மற்றவர்களுக்கு
நாம் எப்போதுமே தரக் கூடாது. நாம் மகிழ்ச்சியாக வாழ்வதைக்
கண்டு மற்றவர்கள் கவலைப்படட்டுமே. மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு நம்மால் வாழ
முடிவில்லை என்றாலும் பரவாயில்லை. மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு நாம் நன்றாக
வாழ்வதாகப் பேசி வைப்போமே. " என்றார்.
அவர் சொன்னது அனைத்துமே உண்மை. நாம் எதைப் பேசுகிறோமோ
அதுதான் நடக்கும். ஆகையால் எப்போதுமே நேர்மறையாகப் பேசுங்கள். நேர்மறையாக
எண்ணுங்கள்.
உங்கள் வீட்டில் உண்ண உணவு கொடுத்தால், அதை உண்டபின்
அதில் உள்ள குறைகளைச் சொல்லாதீர்கள். " அருமையான உணவு, இன்னும் கொஞ்சம் கிடைக்குமா? என்று பொய்
சொல்லிப் பாருங்கள். அடுத்த வேளை உங்களுக்கு அறுசுவை விருந்தே கிடைக்கும் .
எல்லாம் இழந்தபின் கடைசியாக உயிரை இழக்கும் போது கன்னன்
(கர்ணன்) சொல்வதாக வில்லிபாரதம் சொல்லும்
பாடலைப் பாருங்கள்.
" யான்பெற்ற பெருந்தவப் பேறு என்னை அன்றி
இருநிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே "
"இந்தப் பரந்த உலகில் எனக்குக் கிடைத்த
பெரும்பேறும் , பெரும் புகழும் வேறு யாருக்குக் கிடைத்தது? என்று பெருமிதத்தோடு கூறுகிறான் கன்னன்.
கன்னன் சாகும்போது சொன்னதை நாம் ஏன் வாழும் போதே சொல்லக்
கூடாது?
இந்த உலகில்
"எனக்குக் கிடைத்த வாழ்க்கையைப் போல் வேறு
யாருக்கும் கிடைத்திருக்காது " என்று எப்போதும் பெருமிதத்தோடு
சொல்லுங்கள்.
உங்கள் வாழ்க்கை நாளை வரலாறாய் மாறும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 123. யான்பெற்ற பெருந்தவப் பேறு ஆ.தி.பகலன்"
Post a Comment