தமிழ் அறிவோம்! 124 கன்னா பின்னா மன்னா தென்னா ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 124 கன்னா பின்னா மன்னா தென்னா ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!   124 கன்னா பின்னா மன்னா தென்னா  ஆ.தி.பகலன்

  


"கன்னா பின்னா மன்னா தென்னா "
 

ஓர் ஏழைப் புலவன் தன் வறுமையைப் போக்கிக் கொள்ள பாடல் ஒன்றை எழுதி மன்னனிடம் கொடுத்துப் பரிசு பெற நினைத்தான். அவனிடம் வறுமை இருந்த அளவுக்கு புலமை இல்லை. ஆதலால்,  தனக்குத் தோன்றியதை எல்லாம் பாடலாக எழுதிக் கொண்டு அரசவைக்கு சென்றான். 

அரசவையில் இரண்டாம் குலோத்துங்கன் வீற்றிருக்கிறான். கம்பர் உள்ளிட்ட பெரும்புலவர்கள்  எல்லாம் அங்கே அமர்ந்திருக்கிறார்கள். 

அவையை வணங்கி தான் கொண்டு வந்த பாடலைப் பாடினான் அந்த ஏழைப் புலவன். 

" மண்ணுண்ணி மாப்பிள்ளையே

கா விறையே

கூ விறையே

உங்கள் அப்பன் கோவில் பெருச்சாளி

கன்னா பின்னா மன்னா தென்னா

சோழங்கப் பெருமானே " ( தனிப்பாடல் திரட்டு) 

இந்தப் பாடலைக் கேட்டதும் அவையில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டனர். ஆனால்,  கம்பர் மட்டும் அவன் நிலையைக் கண்டு அவனைக் காப்பாற்ற நினைத்தார். உடனே எழுந்து " ஆகா! என்னே அருமையான பாடல். நம் மன்னனை இதுவரை இவ்வளவு அழகாக யாரும் புகழ்ந்து பாடியதில்லை " என்று சொல்லி அப்பாடலுக்கு விளக்கம் கூறினார் கம்பர். 

"மண்ணுண்ணி மாப்பிள்ளையே " 

மண்ணை உண்ட திருமாலுக்கு ஒப்பானவனே,

( மா + பிள்ளை)  மா என்பது திருமகளைக் குறிக்கும்.  பிள்ளையே என்பது திருமகளின் பிள்ளையான மன்மதனைக் குறிக்கும். மன்மதன் போன்று அழகு நிறைந்தவனே.

கா விறையே ( கா + இறையே)

 கா என்பது சோலையைக் குறிக்கும். இறையே - கற்பகச் சோலைக்குத் தலைவனான இந்திரனைக் குறிக்கும்.  இந்திரன் போன்று எங்களைக் காப்பவனே.

கூ விறையே ( கூ + இறையே)

கூ என்பது நிலத்தைக் குறிக்கும்.

இறையே - நில உலகிற்கு எல்லாம் அரசனே. 

"உங்கள் அப்பன் கோவில் பெருச்சாளி"

கோ+ வில் - ( வில்வித்தையின் அரசன்)

பெருச்சாளி ( பெரிய + ஆளி) ஆளி என்பது சிங்கத்தைக் குறிக்கும்.

விற்போரில் சிங்கத்துக்கு ஒப்பானவனே. 

கன்னா - கன்னன் ( கர்ணன்) போன்ற கொடைவள்ளலே.

பின்னா - கன்னனுக்கு பின்  ( பிறந்தவன்)  வந்தவன்  தருமன். 

தருமனைப் போல தருமத்தைக் காப்பவனே.

மன்னா - ( மன் - நிலைபேறு)  நீண்ட ஆயுளோடு வாழ்பவனே.

தென்னா - தென்னவனுக்கு ( பாண்டியன்)  நிகராய் தமிழைக் காப்பவனே.

சோழங்கப் பெருமானே -

சோழர்களில் பெரும் புகழை உடையவனே   என்பதே இப்பாடலின் உண்மையான பொருள். இதை உணராமல் இந்த ஏழைப்புலவரை இகழலாமா?   என்றார் கம்பர். 

கம்பரின் சிறந்த விளக்கத்தைக் கேட்ட அரசரும், அவையினரும் கம்பரைப்   புகழ்ந்தார்கள்.

அந்த ஏழைப் புலவருக்கு எண்ணற்ற பரிசுகளை அள்ளிக் கொடுத்து சிறப்பு செய்தான் அரசன். 

"கம்பர் கவிதை எழுதுவதில் மட்டும்  சக்கரவர்த்தி இல்லை, கருணை காட்டுவதிலும் சக்கரவர்த்தி"  என்பதை எடுத்துக்காட்டுகிறது இந்நிகழ்வு.


இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

 


0 Response to "தமிழ் அறிவோம்! 124 கன்னா பின்னா மன்னா தென்னா ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel