"நந்தவனத்தில் ஓர் ஆண்டி "
தமிழுலகம் இந்த உலகிற்கு கொடுத்த மிகப்பெரிய கொடை " சித்தர் பாடல்கள் " . என்றாவது ஒருநாள் இந்த உலக மக்கள் அனைவரும் ஆறாம் அறிவைக் கடந்து ஏழாம் அறிவை எட்டுவார்கள் . அன்று உலக மக்கள் அனைவரது கைகளிலும் இருக்கப் போவது " சித்தர் பாடல்கள்"தான்.
"சித்து "
என்ற சொல்லுக்கு " அறிவு " என்பது பொருளாகும்.
" சித்தர் " என்ற சொல்லுக்கு " அறிவுடையோர் " என்பது பொருளாகும் . சாதி, சமய ஏற்றத்தாழ்வுகளை முதன்முதலில் எதிர்த்தவர்கள் சித்தர்கள். மூடநம்பிக்கைகளை எதிர்த்து முதன்முதலில் குரல் கொடுத்தவர்கள் சித்தர்கள். அறிவியலையும், மருத்துவத்தையும் அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்தவர்கள் சித்தர்கள். பகுத்தறிவு, புரட்சி என்ற சொற்கள் பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் எல்லாம் மேடைகளில் அதுபற்றி பேசுவது காலக்கொடுமை. உலகின் முதல் " புரட்சியாளர்கள், பகுத்தறிவாளர்கள் " என்ற பெருமைக்கு உரியவர்கள் சித்தர்கள்தான்.
இன்று உலக மக்கள் அனைவரும் அறிவின் தொடக்க நிலையில் இருக்கிறார்கள். ஆனால், சித்தர்களோ அறிவின் இறுதி நிலையைக் கண்டவர்கள். அதனால்தான் , சித்தர் பாடல்களை உள்வாங்கும் திறனைப் பெறாமல் இருக்கிறார்கள் உலக மக்கள்.
காலம் மாறும். அன்று சித்தர்களின் சிந்தனைகள் உலக மக்களின் தலைக்குள் ஏறும்.
ஏழாம் அறிவுக்கு மட்டும் விளங்குகின்ற சித்தர் பாடல் ஒன்றை இங்குக் காண்போம்.
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி. " ( கடுவெளி சித்தர் பாடல்)
நந்தவனத்தில் ( பூந்தோட்டம்) இருந்த ஆண்டி ( எதுவும்
இல்லாதவன்) ஒருவன் இருந்தான். அவன் குயவனிடத்தில் நான்கு ஆறு ( 6+4 = 10) மாதமாக வேண்டி ஒரு தோண்டியைக் (மண்குடம்) கேட்டுப் பெற்றான் . அப்படி வேண்டிப் பெற்ற
தோண்டியைக் கையாளத் தெரியாமல் போட்டு உடைத்துவிட்டான்.
மேலோட்டமாகப் பார்த்தால் இப்பாடலுக்கு இதுதான்
பொருளாகும். ஆனால்,
உண்மையான பொருள் இதுவல்ல.
நந்தவனம் - உலகு
ஆண்டி - ஆன்மா ( உயிர்)
நாலாறு மாதம் ( 4+ 6 = 10. பத்து மாதங்களாக தாயின் கருவறையில் இருந்து உருவாதல்)
குயவன் - இயற்கை / இறைவன்.
தோண்டி - மனிதப் பிறவி.
தாயின் கருவறையில் பத்து மாதங்கள் இருந்து வேண்டிப் பெற்ற இந்த உடலை முறையாக பாதுகாக்காமலும், பயன்படுத்தாமலும் இருந்து, உலக இன்பங்களில் சிக்க வைத்து இறுதியில் சீரழிந்து போவது என்ன வாழ்க்கை?
எது உண்மையான பேரின்பம்? என்ற மெய்யுணர்வு இல்லாமல் பொய்யான வாழ்க்கை
வாழ்ந்து வீணாக மடிந்து போகலாமா?
இயற்கை கொடுத்த உடலைக் கொண்டு இயற்கையைக் காத்து வாழாமல் இயற்கைக்கு எதிராக வாழ்வது தகுமோ?
என்று எண்ணற்ற வினாக்களைக் கேட்கிறது இப்பாடல்.
"ஐம்புலன்களை
அடக்கி
ஐம்பூதங்களுக்கு
அடங்கி
வையம் வாழ வாழ்வதே
உண்மையான வாழ்க்கை! "
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 125 நந்தவனத்தில் ஓர் ஆண்டி ஆ.தி.பகலன்"
Post a Comment