
"திரு.வி.க. தமிழ் "
இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ், செந்தமிழ், நற்றமிழ், வண்டமிழ், ஒண்டமிழ் என்று எத்தனையோ தமிழை அறிந்துள்ளோம்.
அது என்ன திரு.வி.க.தமிழ்?
இன்று அதை அறிந்து கொள்வோம்.
திருவாரூர் விருத்தாலம் கல்யாணசுந்தரம் என்பதை
சுருக்கியே திரு.வி.க. என்று அழைத்து மகிழ்கிறது தமிழுலகம்.
காஞ்சிபுரம் மாவட்டம் துள்ளம் என்ற சிற்றூரில் (26.08.1883) பிறந்தவர்தான் திரு.வி.க.
தமிழின்பால் ஈடுபாடு கொண்டு தமிழின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர்.
1912 ஆம் ஆண்டு கமலாம்பிகை என்னும் நங்கையை வாழ்க்கைத்
துணையாக ஏற்றார் திரு.வி.க.
இவர்களின் இல்லற வாழ்வின் சான்றாக இரு பிள்ளைகள் பிறந்தனர். திருமணம் ஆன ஆறு ஆண்டுகளுக்குள் ( 1918 ) தன் மனைவியையும் , தன் இரு பிள்ளைகளையும் நோயால் பறிகொடுத்தார்.
அவர் தனிமரமாய்
நிற்பதைக் கண்டு கவலையுற்றனர் திரு.வி.க.
வின் நண்பர்கள்.
"நீ தனியாக இருந்து துன்பப்பட வேண்டாம். மறுமணம் செய்துகொள் . உனக்கென்று ஓரு துணை வேண்டுமல்லவா" என்று நண்பர்கள் அறிவுறுத்தினார்கள்.
அதற்கு திரு.வி.க . என்ன சொன்னார் தெரியுமா?
"நான் தனியாக வாழவில்லை. தமிழோடு வாழ்கிறேன் " என்றார்.
ஆம். இன்றுவரை திரு.வி.க. தமிழோடுதான் வாழ்கிறார். தமிழ் உள்ளவரை அவர் வாழ்வார்.
"எங்கும் தமிழ் , எதிலும் தமிழ் " என்பதை முழுமூச்சாய் கொண்டார். வடமொழி கலவாமல் பேசவும், எழுதவும் செய்தார். சென்னை மகாஜன சங்கக் கூட்டத்தில் " இனி எங்கும் எவரும் தமிழிலேயே பேச வேண்டும் " என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
காந்தியடிகள் தமிழகம் வந்த போதெல்லாம் அவரின் மேடைப்பேச்சை மொழிபெயர்த்து காந்தியடிகளிடம் பாராட்டு பெற்றார். மகாத்மா காந்திக்கு அழகு தமிழில் " காந்தியடிகள் " என்று பெயர் சூட்டி அழைத்தது திரு.வி.க.தான்.
"திரு.வி.க. நடை " என்ற ஒரு தனி நடையை
நடைமுறைப் படுத்தினார். எல்லோர்க்கும் எழுத்து நடை வேறு. பேச்சு நடை வேறு. இந்த
இருவேறு நடையையும் ஒன்றாக்கிப் புதியதோர் நடை படைத்தார்.
" பேசுவது போலவே எழுதுவது.
எழுதுவது போலவே
பேசுவது " இதுதான் திரு.வி.க.வின் தனிநடை ஆகும்.
இந்தப் புதுவகை நடையையே " திரு.வி.க. தமிழ்
" என்று போற்றியது தமிழுலகம்.
அறிஞர் அண்ணா உள்ளிட்ட அக்கால இளைஞர்களை எல்லாம் மேடையேறத் தூண்டியது "திரு.வி.க.தமிழ் "
எளிமையின் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் திரு.வி.க.
சொந்த வீடு கிடையாது. செருப்பு கூட அணியமாட்டார். எளிய தூய கதர் ஆடையையே எப்போதும் உடுத்துவார்.
இவருடைய வழித்தோன்றலாக கல்கியும், மு.வரதராசனாரும் (மு.வ.) தோன்றினர்.
இவர்மீது கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரைக் கல்கி என்று
மாற்றிக் கொண்டார் இரா.கிருஷ்ண மூர்த்தி. திரு.வி.கல்யாண சுந்தரனார் என்னும்
பெயரின் முதல் இரண்டெழுத்துடன் (கல்) தன் பெயரின் (கிருஷ்ண மூர்த்தி) முதல் எழுத்தையும் (கி) சேர்த்து (கல் + கி) "கல்கி " என்ற புனைப்பெயரை
உருவாக்கினார் இரா. கிருஷ்ண மூர்த்தி.
"மகாகவி " பாரதியிடம் இருந்து "பாவேந்தர் " பாரதிதாசன் தோன்றியது போல திரு.வி.க . விடமிருந்து தோன்றியவர்தான் கல்கி. " பொன்னியின் செல்வன் " என்னும் புகழ்பெற்ற புதினத்தைப் படைத்து அழியாப் புகழ் பெற்றார் கல்கி.
தமிழுலகம் உள்ளவரை "திரு.வி.க.தமிழ் " தமிழர்
நெஞ்சத்தைத் தென்றலாய் வருடிக் கொண்டிருக்கும்.
ஆம். திரு.வி.க தான் " தமிழ்த்தென்றல் "
ஆயிற்றே.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to " தமிழ் அறிவோம்! 126 - திரு.வி.க. தமிழ் ஆ.தி.பகலன்"
Post a Comment