
"ஆயுளை நீட்டிக்கும் அன்னைத் தமிழ் "
24.04.1820 அன்று கனடா நாட்டில் பிறந்தவர்தான்
ஜி.யு.போப். சமயப்பணி புரிவதற்காக 1839 இல் தமிழ்நாட்டிற்கு வந்தார்.
கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார். சென்னைக்கு வந்த போப் அவர்கள் சாந்தோம் பகுதியில் தங்கினார். இங்கிலாந்து திருச்சபையில் சேர்ந்தார். அங்கு " குரு " பட்டம் பெற்றார்.
தூத்துக்குடி
அருகே உள்ள சாயர்புரத்தில் சமயப்பணி ஆற்றினார்.
அதன்பின் தஞ்சாவூரில் சமயப்பணி ஆற்றினார் . இந்தக்
காலகட்டத்தில்தான் புறநானூறு, நன்னூல், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களைக்
கற்றார். தஞ்சாவூரில் சமயப்பணி , தமிழ்ப்பணி, கல்விப்பணி ஆகிய
முப்பணிகளைச் செய்தார்.
தஞ்சாவூரை தொடர்ந்து உதக மண்டலத்தில் தன் பணிகளைத்
தொடர்ந்தார்.
ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஜி.யு.போப் அவர்கள் முதுமையினால் தன் உடல் நலிவுற்றதைக் கண்டு 1882 ஆம் ஆண்டு தனது 62 ஆவது வயதில் இங்கிலாந்து சென்றார். அங்கு தன் முதுமைக் காலத்தைக் கழிக்க விரும்பினார்.
ஒருநாள் தன் நண்பரிடம் திருவாசகத்தின் பெருமையை
விவரித்துக் கூறினார். அதனைக்கேட்டு வியப்படைந்த நண்பர், " நீ கண்டிப்பாக திருவாசகத்தை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பதிப்பிக்க வேண்டும் " என்று வற்புறுத்தி
இருக்கிறார்.
அதற்கு போப் அவர்கள் தன் முதுமையினைக் குறிப்பிட்டு ,
அது நீண்ட நெடிய பணி. அவ்வளவு காலம் நான் உயிரோடு இருப்பேன் என்ற நம்பிக்கை இல்லை
" எனக் கூறியிருக்கிறார்.
அதற்கு போப்பின் நண்பர் " ஒருவன் தன்னை உன்னதமான
பணியில் ஈடுபடுத்திக் கொள்வதுதான் நீண்ட காலம் வாழ்வதற்கு உண்டான வழி .
நீ கண்டிப்பாக இப்பணியினை நிறைவேற்றுவாய் . அதுவரை உன் ஆயுள் நீட்டிக்கப்படும். " என்று ஊக்கப்படுத்தி இருக்கிறார்.
அதன்பின் தமிழ்ப்பணியை முழுமூச்சாய் தொடங்கினார்.
இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் 1885 ஆம் ஆண்டு தமிழ் கற்பிக்கும் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். தன் இறுதிக்காலம் ( 1908) வரை அங்கே பணியாற்றினார் .
1886 ஆம் ஆண்டு திருக்குறளை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவரது "திருக்குறள் மொழிபெயர்ப்பு " உலகப்புகழ் பெற்றது.
1893 ஆம் ஆண்டு நாலடியாரை மொழி பெயர்த்தார் .
1882 ஆம் ஆண்டுமுதல் 1900 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து 18
ஆண்டுகள் தன் அயராத உழைப்பினால் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப்
பதிப்பித்தார். நண்பரின் ஊக்கத்தினால்தான் " திருவாசகம் மொழிபெயர்ப்பு "
நடந்தேறியது " என்று
தனது 80 ஆவது பிறந்த நாளன்று எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜி.யு.போப்.
"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க " என்ற திருவாசக வரிகளை எழுதிய பின்புதான் கடிதம் எழுத தொடங்குவார். இது அவரின் மதப்பற்றையும் தாண்டி அவரின் தமிழ்ப்பற்றை உணர்த்துகிறது.
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த போப் அவர்கள், "உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விட புலமை, உழைப்பு துன்பத்தைப் பொறுத்தல் , இடையறா நிலைத்த இறைப்பற்று ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை " என்று குறிப்பிடுகிறார்.
62 வயதில் உடல் நலிவுற்று இருந்தபோது திருவாசகத்தை மொழிபெயர்க்கும்படி
நண்பர் சொன்னார். " அது நீண்ட பணி.
அவ்வளவு காலம் வாழ்வேன் என்ற நம்பிக்கை இல்லை " என்றவர் எப்படி 88
வயது ( 12.02.1908) வரை வாழ்ந்தார். 26 ஆண்டுகள் அவர் ஆயுளை நீட்டித்தது எது?
தமிழ்ப்பற்றன்றோ!
தமிழ்ப்பணியன்றோ!
ஆம். போப் அவர்களின் ஆயுளை மட்டுமல்ல, நம் எல்லோருடைய ஆயுளையும் நீட்டிக்கும் வல்லமை
அன்னைத் தமிழுக்கு மட்டுமே உண்டு.
அதற்கான காரணத்தை வள்ளுவர் வழியில் பார்ப்போம்.
" வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். ( குறள் - 38)
ஒருவன் இடைவிடாமல் நாள்தோறும் நன்மைகளைச் செய்வானாயின், அது அவனுடைய இறப்பு என்னும் தடைக்கல்லை உடைத்து மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் படிக்கல்லைத் தரும்.
நாமும் நம் ஆயுளை நீட்டித்துக் கொள்ள அன்னைத் தமிழுக்குத் தொண்டாற்றுவோம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to " தமிழ் அறிவோம்! 127. ஆயுளை நீட்டிக்கும் அன்னைத் தமிழ் ஆ.தி.பகலன்"
Post a Comment