தமிழ் அறிவோம்! 132. ஆயிரத்தில் ஒருவன் ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 132. ஆயிரத்தில் ஒருவன் ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!  132. ஆயிரத்தில் ஒருவன்  ஆ.தி.பகலன்

  


"ஆயிரத்தில் ஒருவன் "
 

தமிழ்நாட்டு மக்களைப்  பொறுத்தவரை " ஆயிரத்தில் ஒருவன் " யாரென்று கேட்டால்   " புரட்சித் தலைவர் " எம்.ஜி.ஆர் என்று  சொல்வார்கள்.

ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே " ஆயிரத்தில் ஒருவன் " என்ற பட்டத்தை முதன்முதலில் பெற்றவர் யாரென்று தெரியுமா? 

திருவெண்ணெய் நல்லூர்

" சடையப்ப வள்ளல் "தான். 

" கவிச்சக்கரவர்த்தி " கம்பரைத் தமிழுலகிற்கு கொடையாகத் தந்தவர்.

"சடையப்ப வள்ளல் இல்லையேல் கம்பர் இல்லை " . கம்பரின் கவிதையைப் போற்றுபவர்கள் கொஞ்சம் சடையப்ப வள்ளலையும் போற்ற வேண்டும். அதுதான் நியாயமானது. 

நன்றி மறவாமைக்கு சான்றாக  விலங்குகளில் எப்போதுமே நாயைத்தான் சொல்வார்கள். அதுபோல மனிதர்களில் நன்றி மறவாமைக்குச் சான்றாக யாரையாவது சொல்ல வேண்டும் என்றால் , இந்த உலகில் கம்பரைத் தவிர வேறு  யாரையும் சொல்ல முடியாது.

" நன்றி மறவேல் " என்று ஆத்திசூடி படித்தாலும் சரி,  "செய்ந்நன்றி அறிதல் " என்று திருக்குறள் படித்தாலும் சரி நம் நினைவுக்கு வர வேண்டியவர் கம்பர் மட்டுமே. 

தாம் இயற்றிய  "இராமாவதாரம்  " ( கம்பராமாயணம்)  அரங்கேற்றம் செய்ய திருவரங்கம் சென்றார் கம்பர். தமிழ் அறிந்த சான்றோர் முன்னிலையில்

அரங்கேற்றம் செய்யும்போது தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை நூறு பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் புகழ்ந்து பாடினார். அதற்கு அவையில் உள்ளவர்கள் கடும்கண்டனம் தெரிவித்தனர். இறைவனின் பெருமையைப் போற்றிப் பாடும் நூலில் இம்மண்ணில் வாழும் ஓர் எளியோனைப் ( சடையப்ப வள்ளல்) போற்றி  புகழ்வதா? என்று கேள்வி கேட்டனர் . அதனால், 'சடையப்ப வள்ளல் பற்றிய பாடலை நீக்க வேண்டும் " என்றனர்.  

" சடையப்ப வள்ளல் " பற்றிய பாடலை நீக்கினால்தான் எனது நூலை அரங்கேற்றம் செய்ய முடியும்  என்றால் , அப்படி அரங்கேற்றம் செய்ய வேண்டிய  அவசியம் எனக்கில்லை " என்று  கடுஞ்சினத்துடன் கூறினார்  கம்பர்.

"ஒர் உயிரைக் காப்பவன்தான் உண்மையான கடவுள் என்றால், என்னை இதுவரை காத்து நின்ற சடையப்ப வள்ளலே என் கடவுள். ஆதலால்,  சடையப்ப வள்ளல் பற்றிய பாடலை நீக்குவதற்கு  ஒருபோதும் உடன்பட  மாட்டேன் " என்றார் கம்பர். 

கம்பரின் நன்றி மறவாப் பண்பினைக் கண்டு வியந்த அவையோர் அனைவரும்  அகமகிழ்ந்து " ஆயிரம் பாடலுக்கு ஒரு பாடல் வீதம் சடையப்ப வள்ளலைப் பாடுக " என்றனர். 

" எம் சடையப்ப வள்ளலை நூற்றில் ஒருவன் " என்று இதுவரை  நினைத்திருந்தேன். ஆனால்,  "நீங்கள்  ஆயிரம் பாடலுக்கு ஒரு பாடல் வீதம் பாடவைத்து அவரை 'ஆயிரத்தில் ஒருவன்' ஆக்கிவிட்டீர்கள் " என்று பெருமிதத்தோடு கூறினார் கம்பர். 

கம்பர் பாடிய 10569 (கம்பராமாயணம்) பாடல்களில்,  ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் என மொத்தம் பத்து  பாடல்களில் சடையப்ப வள்ளலைப் புகழ்ந்து  பாடியுள்ளார் கம்பர். 

" மஞ்சினில் திகழ்தரு மலையை, மாக்குரங்கு

எஞ்சுறக் கடிது எடுத்துஎறியவே, நளன்

விஞ்சையில் தாங்கினன்; சடையன் வெண்ணெயில்

'தஞ்சம் ' என்றோர்களைத் தாங்கும் தன்மைபோல் "

(சேது பந்தனப் படலம் - 09,  யுத்த காண்டம்,  கம்பராமாயணம்) 

இராமர்  "சேது பாலம்" கட்டும் போது  பல குரங்குகள், கல்லைத் தொம்தொமென்று கொண்டு வந்து போட , அதை மூழ்காமல் தாங்கி , ஒழுங்கில் அமைக்கிறான் நளன் என்னும் பொறியாளன் . எதைப்போல்?

"பல துன்பங்களைக் கொண்டு வந்து போட்டாலும்  அதை எல்லாம் தாங்கிக் கொண்டு,  தன்னிடம் தஞ்சம் என்று வருவோரைத் தாங்கும் சடையன் போல் " என்று சடையப்ப வள்ளலின் பொறுமையையும்,  பெருமையையும் போற்றுகிறார் கம்பர். 

இலங்கை வேந்தனை வென்று அயோத்தி திரும்புகிறான் இராமன்.  அயோத்தி நாட்டு மன்னனாக முடிசூட்டிக் கொள்கிறான். திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்பரின் மரபில் வந்தவர்கள் மணிமுடியை எடுத்துக் கொடுக்க வசிட்ட முனிவர் முடிசூட்டியதாகக் கூறி சடையப்ப வள்ளலின் பரம்பரையையே பெருமைப்படுத்தி உள்ளார்  கம்பர்.

இப்படி இறுதிவரை சடையப்ப வள்ளலைப் புகழ்ந்து பாடி தன் நன்றி மறவாமையை வெளிப்படுத்தினார் கம்பர்.

 

" ஆயிரத்தில் ஒருவன் "

சடையப்ப வள்ளல்

வாழ்க! வாழ்க!

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .


0 Response to "தமிழ் அறிவோம்! 132. ஆயிரத்தில் ஒருவன் ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel