தமிழ் அறிவோம்! - 18 - நாள்கள் / நாட்கள் எது சரி? ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! - 18 - நாள்கள் / நாட்கள் எது சரி? ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்! - 18 -   நாள்கள் / நாட்கள்  எது சரி? ஆ.தி.பகலன்

 


நாள்கள் / நாட்கள்

எது சரி?

 

"லள வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும் " 

(நன்னூல் - நூற்பா 227)

 

நிலைமொழி இறுதியில் உள்ள லகர (ல்), ளகர (ள்) மெய்கள் வேற்றுமை புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் (க,ச,த,ப ) வந்தால் முறையே றகர மெய்யாகவும், டகர மெய்யாகவும் திரியும்.

அதாவது லகர மெய் (ல்),  றகர மெய்யாகத் (ற்) திரியும்.

பல் + பொடி = பற்பொடி.

கல் + கண்டு = கற்கண்டு.

 

 'ளகர' மெய் (ள்) டகர மெய்யாகத் (ட்) திரியும்.

பொருள் + காட்சி = பொருட்காட்சி

அருள் + பா = அருட்பா.

 

மேற்கண்ட விதியின்படி நாள்கள் என்பது 'நாட்கள் ' என்றுதானே வரும் என்று நீங்கள் நினைக்கலாம். அதுதான் இல்லை.

நிலைமொழி ஈற்றில் நிற்கும்  லகர, ளகர மெய்களோடு 'கள்' என்னும் பன்மை விகுதி சேர்ந்தால் சில இடங்களில் றகர, டகர மெய்களாக திரியும் . சில இடங்களில் திரியாது .

 

1.தனிக்குறிலை அடுத்து

லகர, ளகர மெய்கள் வந்து அதனோடு 'கள்' என்னும் பன்மை விகுதி புணர்ந்தால் அது றகர மெய்யாகவும், டகர மெய்யாகவும் திரியும்.

( பற்கள், சொற்கள், முட்கள், புட்கள்)

 

2. குறிலிணையை அடுத்து லகர,ளகர மெய்கள் வந்தால் அது றகரமாகவோ, டகரமாகவோ திரியாது.

(  விரல்கள், நிழல்கள்,  குறள்கள், பொருள்கள்)

நிழல்கள் என்பது நிழற்கள் என்று வராது. ஆனால்,  நிழல் + சாலை = நிழற்சாலை (Avenue) என வரும்.

குறள்கள் என்பது குறட்கள் என்று வராது. ஆனால் குறள் + பா = குறட்பா என வரும்.

பொருள்கள் என்பது பொருட்கள் என்று வராது. ஆனால் பொருள் + காட்சி = பொருட்காட்சி என வரும்.

காரணம் என்ன?

தனிக்குறிலை அடுத்து வரும் லகர, ளகர மெய்களோடு 'கள் ' என்னும் பன்மை விகுதி சேரும் போதும் மட்டுமே றகரமாகவும், டகரமாகவும் திரியும்.  மற்ற இடங்களில் லகர, ளகர மெய்களோடு 'கள் ' என்னும் பன்மை விகுதி சேராத இடங்களில் (வேற்றுமை ஏற்கும் இடங்கள்)  றகர, டகர மெய்களாக திரியும்.

 

3. தனி நெடிலை அடுத்து வரும் லகர, ளகர மெய்கள் றகரமாகவோ, டகரமாகவோ திரியாது.

( வால்கள், கால்கள், கோள்கள், தாள்கள் )

 

இந்த விதியின் அடிப்படையில் பார்த்தால் நாள்கள், ஆள்கள் , வாள்கள் என்பனவற்றை நாட்கள், ஆட்கள், வாட்கள் என்று எழுதக் கூடாது.

 

'நாள்கள்' என்பதை 'நாட்கள் ' என்று எழுதினால் பொருள் மாறுபாடு உண்டாகும். 

'நாள்கள் ' என்பது 'நாள்' என்பதன் பன்மையைக் குறிக்கும்.

'நாட்கள் ' என்பது அன்று இறக்கிய 'கள்' (மது) என்னும் பொருளைத் தரும்.

 

சங்க இலக்கியங்களிலும் 'நாட்கள் ' என்னும் சொல் 'அன்று இறக்கிய கள் ' என்னும் பொருளிலேயே வந்துள்ளது.

 

நாட்கள் உண்டு, நாள்மகிழ் மகிழின்,

யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே;

தொலையா நல்லிசை விளங்கு மலையன்

மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்

பயன்கெழு முள்ளூர் மீமிசைப்

பட்ட மாரி உறையினும் பலவே!

 

(புறநானூறு - 123)

 

ஒரு மன்னன் கள்ளுண்டு மகிந்து இருக்கும்  போது புலவர்களுக்குத் தேர்களைப் பரிசாக அளிப்பது எளிது.   அவ்வாறு கள்ளுண்டு மகிழாது தெளிந்த அறிவோடு இருக்கும் பொழுது திருமுடிக்காரி புலவர்களுக்குப் பரிசாக அளித்த தேர்கள் முள்ளூர் மலைமேல் பெய்த மழைத்துளிகளை விட அதிகம் என்று இப்பாடலில் வள்ளல் மலையமான் திருமுடிக்காரியின் கொடைத்தன்மையைப் போற்றுகிறார் தமிழ்ப்புலவர் கபிலர்.

 

நான்

தமிழ் படிக்காத

 நாள்கள் உண்டோ?

இல்லவே இல்லை! 

நான் தமிழ் படித்து  வாழ்கிறேன்.

தமிழால் வாழ்கிறேன்

தமிழ் என்னும்

நாட்கள் ( மதுவை) உண்டு! 

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583)

0 Response to "தமிழ் அறிவோம்! - 18 - நாள்கள் / நாட்கள் எது சரி? ஆ.தி.பகலன் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel