தமிழ் அறிவோம்! – 19 - ஐந்து /அஞ்சு எது சரி? ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! – 19 - ஐந்து /அஞ்சு எது சரி? ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்! – 19 - ஐந்து /அஞ்சு   எது சரி? ஆ.தி.பகலன்

 


ஐந்து /அஞ்சு 

எது சரி?

 

'அஞ்சு' என்பது முற்றுப்போலி.

 

அது என்ன முற்றுப்போலி?

ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துக்கு பதிலாக, எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது முற்றுப்போலி.

அதாவது, அஞ்சு என்பதில் ஐந்து என்பதன் முதல், இடை, கடை என அனைத்து எழுத்துகளும் போலியாக மாறியும் பொருள் மாறாததால், 'அஞ்சு' என்பது 'ஐந்து '  என்பதன் போலி வடிவம் ஆகும்.

 

' அஞ்சு' என்னும் சொல் முற்றுப்போலியாக இருந்தாலும் கவிஞர்களும், கடைக்கோடி மக்களும் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

 

அஞ்சறைப்பெட்டி = ஐந்து +அறை+ பெட்டி.

ஐந்து அறைகளைக் கொண்ட பெட்டி.

காலம் காலமாக பயன்பாட்டில் உள்ள சொல்தான் அஞ்சறைப்பெட்டி.

 

கவிச்சக்கரவர்த்தி கம்பரும் 'அஞ்சு' என்ற சொல்லை வைத்து கவிப்புலமையில் விளையாடி இருக்கிறார்.

 

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறுஆக ஆருயிர் காக்க ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்கண்டு ; அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்.

(கம்பராமாயணம்)

 

1."அஞ்சிலே ஒன்று பெற்றான் "

ஐந்து பூதங்களிலே ஒன்றான வாயு (காற்று) பகவான் பெற்ற மைந்தன் அனுமனை இது குறிக்கிறது.

2. "அஞ்சிலே ஒன்றைத் தாவி "

ஐந்து பூதங்களிலே ஒன்றான நீர்ப்பரப்பான (இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான)  கடலைத் தாண்டி அனுமன் சென்றதைக் குறிக்கிறது.

3. " அஞ்சிலே ஒன்று ஆறுஆக ஆருயிர் காக்க ஏகி "

ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை (ஆறுஆக) வழியாகக் கொண்டு, தன் உயிரினும் மேலான (ஆருயிர் காக்க) இராமனுக்காக அனுமன் சென்றான் அல்லது இராமனின் ஆருயிரான சீதா தேவியைக் காக்க அனுமன் சென்றான் என்றும் பொருள் கொள்ளலாம்.

4. "அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு ; அயலார் ஊரில் "

ஐந்து பூதங்களிலே ஒன்றான பூமா தேவி பெற்றெடுத்த  சீதையை, இலங்கையில் (அயலார் ஊரில் ) அனுமன்  கண்டான் .

 5. "அஞ்சிலே ஒன்று வைத்தான் "

ஐந்து பூதங்களிலே ஒன்றான நெருப்பை இலங்கையில் வைத்தான் அனுமன்.

"அவன் என்னை அளித்துக் காப்பான்"

ஐந்து பூதங்களையும் ஆட்சி கொண்ட அனுமன் நமக்கு அருள் அளித்துக் காப்பான் என்று பாடலை முடிக்கிறார் கம்பர். 

 

"அஞ்சிலே "  என்ற ஒற்றைச் சொல்லை வைத்து அதற்குள் ஐந்து பூதங்களையும் (நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ) அடக்கி கவி படைத்ததால்தான் கம்பனை  "கவிச்சக்கரவர்த்தி " என்று போற்றுகிறது தமிழுலகம். 

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

0 Response to "தமிழ் அறிவோம்! – 19 - ஐந்து /அஞ்சு எது சரி? ஆ.தி.பகலன் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel