தான்தோன்றி (சுயம்பு)
ஒரு கோவிலில் இருக்கும் தெய்வத்தின் திருவுருவமானது தானாக (சுயம்பாக) தோன்றுவதை ( வெளிப்படுவதை)க் குறிப்பதற்காக
'தான்தோன்றி ' என்ற சொல் பயன்படுத்தப் படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள
எண்ணற்ற தெய்வத்தின் திருவுருவங்கள் தான்தோன்றியாக கிடைத்தவையே.
மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் கோவிலில் உள்ள இறைவனின் திருப்பெயர் தான்தோன்றியப்பர் . அக்கோவிலில் வீற்றிருக்கும் இறைவனைப் போற்றி திருஞான சம்பந்தர் பாடிய பாடல் (தேவாரம்) ஒன்றைக் காண்போம்.
"கொங்குசேர் தண்கொன்றை மாலையினான் கூற்றடரப்
பொங்கினான் பொங்கொளிசேர் வெண்ணீற்றான் பூங்கோயில்
அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி
தங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே "
(தேவாரம்)
தேன் விளங்கும் குளிர்ந்த கொன்றை மாலையுடைய ஈசன், கூற்றுவன் வதைப்படுமாறு சினந்தவன்; மேலான ஒளியைத் தருகின்ற திருவெண்ணீறு தரித்தவன். அப்பெருமான் விளங்குகின்ற கோவில் , வேதத்தின் ஆறு அங்கங்களும் அரிய மறைகள் நான்கும், ஐந்து வகையான வேள்விகளும் ஆற்றி ஒழுகும் சீலர்கள் உள்ள ஆக்கூரில் திகழும் தான்தோன்றி மாடம் ஆகும்.
"தான்தோன்றித்தனம் "
தானாக வெளிப்படும் இறைவனின் திருவுருவத்தைக் குறித்த
'தான்தோன்றி ' என்னும் சொல்லானது, தற்போது தறிகெட்டு வாழும் மனிதர்களைக்
குறிக்கும் சொல்லாக மாறியிருக்கிறது . யாரையும் மதிக்காமல், மற்றவர்களின்
அறிவுரைகளைக் கேட்காமல் 'தன்' மனதுக்கு எது எப்படித் 'தோன்று' கிறதோ அதையே
பிடிவாதமாகச் செய்யும் குணத்தையே 'தான்தோன்றித்தனம் ' என்று கூறுவர்.
'பெரியாரைத் துணைக்கோடல் ' என்னும் வள்ளுவர் வாக்கை
மறந்து ' தான்தோன்றித்தனமாக ' வாழ்பவர் விரைவில் கெட்டொழிவர்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to " தமிழ் அறிவோம்! 35 தான்தோன்றி (சுயம்பு) ஆ.தி.பகலன்"
Post a Comment