
"உலகிலேயே மொழிக்காக கட்டப்பட்ட முதல் கோவில்
"
தமிழ்த்தாய்க்கு கோவில் எழுப்ப வேண்டும் என்பது 'கம்பன் அடிப்பொடி ' சா. கணேசன் அவர்களின்
நெடுநாள் கனவாகும். அவர் கனவை நனவாக்கும்
வகையில் காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தின் தெற்கு பகுதியில் 23.04.1975 அன்று அப்போதைய
தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் தலைமையில் கால்கோள் விழா சிறப்பாகக்
கொண்டாடப்பட்டது .
இதற்காகத் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டடப்பணிக்கு ஐந்து லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
'கம்பன் அடிப்பொடி ' சா.கணேசனும், சிற்ப கலாசாகரம் ம.வைத்தியநாத சிற்பியின் மகனும், மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான வை.கணபதி சிற்பியும் இணைந்து தமிழ்த்தாய்க்கு வடிவம் கொடுத்தனர். கோவிலின் இறுதிக் கட்டப்பணிக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் ஐந்து லட்சம் நிதி ஒதுக்கியது.
16.04.1993 அன்று அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களால் தமிழ்த்தாய்க் கோவில் திறக்கப்பட்டது. அன்று முதல் தமிழ்த்தாய்க்கு தொடர்ந்து வழிபாடு நிகழ்ந்து வருகிறது .
கம்பன் மணிமண்டபத்தின் வலப்புறத்தில் பசுமையான
மரங்களுக்கு நடுவில் வடக்கு நோக்கியவாறு தமிழ்த்தாய்க் கோவில் அமைந்துள்ளது.
மும்முனை நிலத்தில் ஆறு பட்டை, ஆறு நிலை, ஆறு விமானங்கள்
கொண்ட கோவிலாக தமிழ்த்தாய்க் கோவில் அமைந்துள்ளது.
தமிழ்த்தாய்க் கோவிலின் பரிவார தெய்வங்களாக வலப்புறம்
உணர்வுகளை ஓங்காரமாக எடுத்துக் கூற ஒலித்தாயும், வடகீழ்க்கோடியில் வள்ளுவரும் ,
வடமேல் கோடியில் கம்பரும், தென்கோடியில் இளங்கோவடிகளும் தனி விமானம் கொண்டு காட்சி
தருகின்றனர். தமிழ்த்தாய்க் கோவிலின் நுழைவாயிலின் முன் ஒலித்தாய், வரித்தாய் ஆகியோர் வாயிற்காப்போர்களாக உள்ளனர்.
கருவறையில் தமிழ்த்தாயின் வலப்புறம் அகத்தியரும், இடப்புறம் தமிழ் மொழிக்கு
இலக்கணம் வகுத்த தொல்காப்பியரும் நின்ற நிலையில் காட்சி தருகின்றனர்.
கருவறையில் தமிழ்த்தாய் நான்கு கைகளுடன் தாமரைப்
பீடத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கின்றாள். வல முன் கையில் சுடர் உள்ளது.
இடக்கையில் யாழ் உள்ளது. கீழ் வலக்கையில் உருத்திராட்ச மாலையும், கீழ் இடங்கையில்
சுவடியும் இடம் பெற்றுள்ளன. மூவேந்தர்களான
சேர, சோழ, பாண்டியர்கள் தமிழைப் போற்றி வளர்த்தனர்
என்பதை உணர்த்தும் வகையில் அவர்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை
தமிழ்த்தாயின் பின்புறம் உள்ள திருவாசியில் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழ்த்தாயின்
வலக்கால் கீழே தொங்கியவாறும், இடங்கால் மடித்த நிலையிலும் தமிழன்னை சுகாசனமாக வீற்றிருக்கிறாள். தமிழ்த்தாயின் கால்களைச்
சிலம்பும், தண்டையும் அணி செய்கின்றன.
பெரும்பாலான கோவில்களில் உள்ள தெய்வச்சிலைகள் கைகளில் ஆயுதம் ஏந்தியிருப்பது போல காணப்படும் . ஆனால் தமிழ்த்தாயோ ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாக சூடியிருக்கிறாள்.
உலகிலேயே ஒரு மொழிக்காக கட்டப்பட்ட முதல்கோவில் என்ற
சாதனையைப் படைத்து உலக வரலாற்றில் இடம்பிடித்த "காரைக்குடி தமிழ்த்தாய்க்
கோவிலை " வாழ்வில் ஒருமுறையேனும்
நேரில் சென்று கண்டு மகிழ்வோம். வணங்கி மகிழ்வோம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! – 37 "உலகிலேயே மொழிக்காக கட்டப்பட்ட முதல் கோவில் " ஆ.தி.பகலன்"
Post a Comment