" கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே "
கவிஞர் வாலி எழுதிய பல பாடல்களை கவியரசர் கண்ணதாசன்
எழுதியதாக பாமர மக்கள் எண்ணிக்கொண்டு இருப்பது போலவே , மேற்கண்ட பாடலை ஔவையார்
பாடியதாக எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் இது ஔவையார் பாடிய பாடல்
இல்லை. அதிவீரராமபாண்டியன் எழுதிய "வெற்றி வேற்கை" ( நறுந்தொகை)யில்
உள்ள பாடலாகும்.
" கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே "
பிச்சை எடுப்பது இழிவான செயலாகும். அதனால் தான் "
ஏற்பது இகழ்ச்சி " என்கிறார் ஔவையார் ( இது உண்மையிலேயே ஔவையார் சொன்னதுதான்)
. அந்த இழிவான செயலையும் கல்வி கற்பதற்காக செய்யலாம். ஏனெனில் பிச்சை எடுத்தாவது
கல்வி கற்றுக் கொண்டால் நாளை நம்மை யாரிடமும் கையேந்தாமல் (பிச்சை எடுக்காமல்) அது பார்த்துக்கொள்ளும் .ஆகவே, எப்படியாவது
கல்வி கற்றுக்கொள்ளுங்கள்.
கல்வி கற்றுக்கொள்ள வேண்டுமெனில் தெரு தெருவாக சென்று
பிச்சை எடுத்து அந்தப் பணத்தில் படிக்க வேண்டும் என்பது மட்டும் பொருள் அல்ல.
நமக்கு ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதைத் தெரிந்தவர்களிடம் சென்று
கெஞ்சிக் கூத்தாடியாவது படிக்க வேண்டும் என்பதே உண்மையான பொருளாகும். அதாவது
கற்றவர்களின் காலில் விழுந்தாவது கற்றுக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் யார் காலிலும் விழாமல் இருக்க வேண்டுமானால்
கல்வியைக் கற்றுத்தரும் ஆசிரியர்களிடம் அடிபணிந்து அவர்களிடம் உள்ள ஞானத்தைப் பெற
வேண்டும்.
மனிதனின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தையும், நாடே வியக்கும் ஏற்றத்தையும் என்றென்றும்
தருவது கல்வி மட்டுமே!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 42 - " கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே " ஆ.தி.பகலன்"
Post a Comment