" யாக்கை ( உடல்)
நிலையாமை "
இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. பிறப்பும் இறப்பும் இணைந்ததே உலக வாழ்க்கை. நம் உற்றார் உறவினர் , நண்பர்கள் என யாரேனும் இறந்துவிட்டால் கதறி அழுகிறோம். இயற்கையைப் பழிக்கிறோம். இது சிறுபிள்ளைத்தனமான. ஒன்றாகும். இறந்தவரைக் கண்டு கண்ணீர் விட்டு அழுபவர்களை எள்ளி நகையாடுகிறது இப்பாடல்.
" பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும்இவ்
இயல்பும் இன்னே மேல்வரு மூப்பும் ஆகி
நாளும்நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ "
( குண்டலகேசி
நாம் நம் தாய் வயிற்றில் முதலில் கருவாய் இருந்தோம்.
அந்த நிலை இறந்த பின்புதான் குழந்தை என்ற நிலைக்கு உருவானோம். அந்த குழந்தைப்
பருவம் இறந்த பின்புதான் காளைப் பருவம் என்ற நிலையை அடைந்தோம். அந்த காளைப்பருவம்
இறந்த பின்புதான் இல்வாழ்க்கைக்கு துணை
தேடும் இளமைப் பருவத்தை அடைந்தோம். அந்த இளமைப் பருவம் இறந்த பின்புதான் இப்போது
இருக்கின்ற முதுமை (மூப்பு)ப் பருவத்தை அடைந்தோம். இப்படி மீண்டும் மீண்டும்
இறக்கின்ற இயல்புடைய வாழ்க்கையில் முதுமையும் ஒருநாள் இறக்கத்தான் போகிறது. ஒரு
பருவம் முடியும் போது இறக்கிறோம். ஒரு பருவம் தொடங்கும்போது பிறக்கிறோம். இவ்வாறு
நாம் நாள்தோறும் செத்து செத்து பிழைக்கிறோம். நம் இறப்பிற்கு நாம் அழாமல்
இருப்பதற்கு காரணம் என்னவோ?
ஊரார் சாவுக்கு அழுகின்ற நீ
உன் சாவுக்கு நீ அழாமல் இருப்பது ஏன்? என்ற கேள்வியை
நம்மிடம் வைக்கிறது இப்பாடல்.
வரவு என்ற ஒன்று இருந்தால் செலவு என்ற ஒன்று இருக்கும் .
பிறப்பு என்ற ஒன்று இருந்தால் இறப்பு என்ற ஒன்று
இருக்கும். இதை உணராமல் உலகில் உயிர் வாழ்வதில் பொருள் இல்லை.
தமிழில் உள்ள ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றுதான்
குண்டலகேசி. இந்நூலை இயற்றியவர்
நாதகுத்தனார்.
இந்நூலில் 19 பாடல்கள் மட்டுமே முழுமையாகக் கிடைத்தது.
அந்த 19 பாடல்களில் ஒன்றுதான் இப்பாடல்.
வாழும் வாழ்க்கை நிலையற்றது. இதில் எதற்காக அழவேண்டும்.
யாருக்காக நாம் அழவேண்டும். எது வந்தாலும் அதை நாம் கடந்து போவோம். கால வெள்ளத்தில் அது கரைந்து போகும்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to " தமிழ் அறிவோம்! 55. யாக்கை ( உடல்) நிலையாமை ஆ.தி.பகலன்"
Post a Comment