பிரியாணி
(ஊன் துவை அடிசில் / ஊனடிசில்)
பிரியாணி பிறந்த இடம் பாரசீகம் (ஈரான்) என்பார்கள். பாலைவனத்தில் பயணம் செய்த ஈரான் வியாபாரிகள்
உணவு சமைக்கத் தேவையான அரிசி, மசாலா பொருட்களை ஒன்றாக தண்ணீரோடு கலந்து பாத்திரத்தில்
இடுவார்கள். இதனைத் தொடர்ந்து, இறுக்கி மூடி,துணியால் கட்டிய பாத்திரத்தை கொதிக்கும்
பாலைவன மணலில் புதைத்துவிட்டு, ஒட்டக நிழலில் ஒய்வெடுப்பார்கள். இப்படி கொதிக்கும்
மணலில் தம் போட்டு சமைக்கப்பட்ட உணவின் சுவையில் கவரப்பட்ட ஈரானியர்கள் தாங்கள் செல்லும்
இடங்களிலும், நாடுகளிலும் இதையே சாப்பிட்டார்கள். பாலைவனம் அல்லாத பகுதிகளில் குழி
தோண்டி அதில் விறகை வைத்து தீ மூட்டி சமைத்து
தம் கட்டுவார்கள். காலப்போக்கில் காட்டில் வேட்டையாடும் விலங்குகளின் இறைச்சியையும்
சேர்த்து சமைத்து சாப்பிட்டதுதான் இன்று பிரியாணியாக மாறி இருக்கிறது. அவர்கள் முதலில்
மசாலா பொருட்களை மட்டுமே பயன்படுத்தினர் . முகலாயர்கள் மூலம் பிரியாணி இந்தியா வந்தவுடன்தான்
நம்நாட்டு நறுமணப் பொருட்களை (பட்டை, இலவங்கம், கிராம்பு, ஏலக்காய்) அதில் சேர்த்தனர்.
அதன் பின்தான் மணம்கமழும் வாசனையால் வையம்
எங்கும் பரவி புகழ்பெற்றது "பிரியாணி
"
உணவாக இருந்தாலும் சரி, உணர்வாக இருந்தாலும் சரி இவ்விரண்டும்
எங்கு (ஈரேழு உலகத்திலும் ) பரவினாலும் அது தோன்றிய இடம் தமிழ் மண்ணாகத்தான் இருக்கும்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழ் மண்ணில் தோன்றியதுதான்
"பிரியாணி "
இதை தமிழில் "ஊன் துவை அடிசில் " என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஊன் - இறைச்சி
துவை - கலந்த தன்மை
அடிசில் - சமைக்கப்பட்ட உணவு.
"ஊன் துவை அடிசில் " என்பதற்கு இறைச்சி கலந்து சமைக்கப்பட்ட
உணவு என்று பொருள்.
"சோறு வேறுஎன்னா ஊன்துவை அடிசில்
ஓடாப் பீடர் உள்வழி இறுத்து "
(பதிற்றுப்பத்து : 45: 13-14)
இந்த சங்க இலக்கியம் கூறும் செய்தி என்னவென்று தெரியுமா?
சேரன் செங்குட்டுவன் போர்க்களத்தில்
வெற்றி பெற்றபின் தனது வீரர்களுக்கு விருந்தளித்தான். அந்த விருந்தில் அவன் வழங்கிய
ஊன்துவை அடிசிலானது, சோறு வேறாகவும் இறைச்சி வேறாகவும் பிரித்து அறிய முடியாத அளவிற்கு
ஒன்றி இருந்ததாக கூறுகிறார் அப்பாடலைப் பாடிய புலவர் பரணர். இப்படி எண்ணற்ற சங்க இலக்கியப் பாடல்கள் "ஊன்துவை
அடிசில்" (பிரியாணி) பற்றி பாடியுள்ளன.
இன்று பிரியாணி பலவகைகளில் கிடைக்கிறது. அவற்றிற்கு எல்லாம் தமிழில்
பெயர் வைத்து அழைக்கலாமே?
ஊன்துவை அடிசில் " என்பதை "ஊனடிசில்" என்றும் சுருக்கி
அழைக்கலாம்.
ஆன்(மாடு)+ஊன்+அடிசில் = ஆனூன் அடிசில் (பீஃப் பிரியாணி)
ஆடு+ஊன்+அடிசில் = ஆட்டூன் அடிசில் (மட்டன் பிரியாணி)
கோழி+ஊன்+அடிசில் = கோழியூன் அடிசில் (சிக்கன் பிரியாணி)
முட்டை பிரியாணி (முட்டை அடிசில்)
வெஜ் பிரியாணி (காய் அடிசில்)
என்று தனித்தமிழில் அழைப்போம்.
இனி தமிழ்நாட்டில் உள்ள "பிரியாணி கடை"களுக்கு
"ஊனடிசில் உணவகம்" என்று தனித்தமிழில்
பெயர் சூட்டி மகிழ்வோம்.
பிரியாணி மட்டுமல்ல, அதன் பெயரும் நம் அடையாளமாக இருக்கட்டும்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583)
0 Response to "தமிழ் அறிவோம்! -6 - பிரியாணி (ஊன் துவை அடிசில் / ஊனடிசில்) ஆ.தி.பகலன்"
Post a Comment