வேண்டாம் / வேண்டும்.
பள்ளிப் பருவத்தில் ஒருமுறை வள்ளலார் தன் வகுப்புத்
தோழர்களுடன் வகுப்பறையில் அமர்ந்திருந்தார். அப்போது அவருடைய ஆசிரியர் சபாபதி
அவர்கள் " உலக நீதி "யில் உள்ள ஒரு
பாடலை நடத்த ஆரம்பித்தார்.
" ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் "
என்று ஆசிரியர் அழகாக
பாட அனைத்து மாணவர்களும் அவரோடு சேர்ந்து பாடினர் .
ஆனால் வள்ளலார் மட்டும் அப்பாடலைப் பாடவில்லை . அதைக் கவனித்த ஆசிரியர் சபாபதி
அவர்கள் , வள்ளலாரை அழைத்து " நீ
ஏன் இப்பாடலைப் பாடவில்லை என்று கேட்டார்?
அதற்கு வள்ளலார்,
" ஐயா, நீங்கள் நடத்திய பாடலின் ஒவ்வொரு அடியின் இறுதிச்
சொல்லும் அமங்கலமாக முடிகிறது. அதாவது வேண்டாம், வேண்டாம் என்று
எதிர்மறைச் சொல்லில் (NEGATIVE) அப்பாடல் முடிவதால் நான் அப்பாடலைப் பாட
விரும்பவில்லை " என்றார்.
அதைக் கேட்டு கோபமடைந்த ஆசிரியர், "அப்படியானால்
'வேண்டும்' என்ற சொல்லில் முடிவதுபோல் நீ ஒரு பாடலைப் பாடு பார்ப்போம் "
என்றார்.
வள்ளலார் தன் ஆசிரியரை மிகவும் பணிவுடன் வணங்கிவிட்டு
ஒரு பாடலைப் பாடத் தொடங்கினார்.
" ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு
வேண்டும்.
உள்ளொன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்.
பெருமைபெறும் நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்.
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாது இருக்க வேண்டும் "
இப்படி எல்லா அடியின் ஈற்றிலும் ' வேண்டும் ' என்னும்
சொல் வருவதுபோல பாடி முடித்தார்.
வள்ளலார் பாடிய பாடலைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்தார்
ஆசிரியர் சபாபதி.
வள்ளலாரைப் பார்த்து,
" இராமலிங்கம் நீ கல்லாது உணரும் ஞானத்தைப் பெற்று விட்டாய். இனி உனக்கு
பாடம் சொல்லும் தகுதி எனக்கில்லை " என்று தாழ்மையுடன் சொல்லிவிட்டு
விடைபெற்றார் ஆசிரியர் சபாபதி.
" எண்ணம்போல் வாழ்க்கை " என்பார்கள். எப்போதுமே நேர்மறையாக எண்ண வேண்டும்.
நேர்மறையாக பேச வேண்டும். அப்போது தான் நமக்கு நடப்பவை எல்லாம் நேர்மறையாக ( POSITIVE) நடக்கும்.
இதைத்தான் வள்ளலாரின் வாழ்க்கையும் நமக்கு
உணர்த்துகிறது.
அதனால், இனி
நாம் பேசும்போது நடக்காது, முடியாது, கிடைக்காது, வேண்டாம் போன்ற எதிர்மறைச்
சொற்களைத் தவிர்ப்போம்.
நடக்கும், முடியும், கிடைக்கும், வேண்டும் போன்ற
நேர்மறைச் சொற்களைப் பயன்படுத்துவோம்.
நல்லதே நினைப்போம்!
நல்லதே நடக்கும்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 63. வேண்டாம் / வேண்டும். ஆ.தி.பகலன்"
Post a Comment