" எட்டி பழுத்தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன "
எட்டி மரம் கசப்புக்கு பேர் போனது. அதன் இழை, தண்டு,
பட்டை,வேர், காய் என அனைத்துமே மிகவும் கசப்பானது .
எட்டிமரத்தின் காய் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தாலும் அதனை உண்ண முடியாது . அவ்வளவு கசப்பாக இருக்கும்.
அதுபோலத்தான்
பிறருக்குத் தராமல் செல்வத்தைத் தானே வைத்துக் கொண்டு வாழ்பவர்களது (
ஈயாதார்) செல்வமும் யாருக்கும் பயன்படாது.
வறியோர்க்கு செல்வத்தை வழங்காமல் செல்வத்தை வைத்துக்
கொண்டு செழிப்போடு வாழ்ந்து என்ன பயன்?
அதுபோல எட்டிக்காய் அழகாக காய்த்து தொங்குவதால் யாருக்கு
என்ன பயன்?
இந்தக் கேள்வியைத்தான் அப்பழமொழி கேட்கிறது.
" எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன
ஒட்டிய நல்லறம் செய்யாதவர் செல்வம்
வட்டிகொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன் அறியாரே "
(திருமந்திரம் - 260)
எட்டிக்காயின் கனி பழுத்து பெரிதாகி நிலத்தில்
விழுந்தாலும் அது கசப்புத்தன்மை கொண்டிருப்பதால் அதை யாரும் உண்ண மாட்டார்கள்.
ஆகையால் அது யாருக்கும் உதவாது.
அதுபோலவே ஏழைகளின் வறுமையைப் போக்க வாரி வழங்காத செல்வமும் யாருக்கும் உதவாது.
பலவழிகளில் சேர்த்து வைத்த செல்வத்தைப் பெருக்க
வட்டிமேல் வட்டி போட்டு எல்லோரையும் ஏமாற்றி மேலும் மேலும் பணம் சம்பாதிக்கும்
நீதிநெறி இல்லாத பாதகர்களின் ( பதகர், பாதகர் - பெரும்பாவம் செய்தவர்கள்) செல்வமும் நிலைக்காது. அதன் உண்மையான பயனை
அவர்கள் ஒருபோதும் அறியமாட்டார்கள்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 64. " எட்டி பழுத்தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன " ஆ.தி.பகலன்"
Post a Comment