தமிழ் அறிவோம்! 66. கடமை அது கடமை " ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 66. கடமை அது கடமை " ஆ.தி.பகலன்

  தமிழ் அறிவோம்! 66.  கடமை அது கடமை "  ஆ.தி.பகலன்



"கடமை அது கடமை "

 

'வெற்றி' என்பது தனிமனிதனைச் சார்ந்ததன்று. அது பலருடைய உழைப்பு. இந்த உலகில் மனிதராய் பிறந்த அனைவருமே தத்தம் கடமை எதுவென்று உணர்ந்து செயல்பட்டாலே எந்த ஒரு வெற்றியும் சாத்தியம் ஆகும். 

யார் யார் என்னென்ன கடமைகளைச் செய்ய வேண்டும் என்று மகனைப் பெற்ற தாய் ஒருத்தி கூறுவதாக அமைந்துள்ளது இப்புறநானூற்றுப் பாடல் . 

" ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே

சான்றோன் ஆக்குதல்  தந்தையின் கடனே

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்

களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே " ( புறநானூறு - 312)

 ஒரு குழந்தையைப் பெற்றுப் பேணிக் காத்தல் தாயின் கடமை. 

அக்குழந்தையைப் படிக்க வைத்துச் சான்றோனாக ( வீரனாக) விளங்கச் செய்தல் தந்தையின் கடமை. 

தாய்நாட்டைக் காக்க போர்க்களம் புகும் வீரனுக்குத் தேவையான படைக்கருவிகளை உருவாக்கிக் கொடுத்தல் கொல்லரின் கடமை. 

தன் குடிமக்களை நன்னடத்தை உள்ளவர்களாக விளங்கச் செய்தல் அரசனின் கடமை. 

ஒளியுடன் விளங்கும் வாளைக் கையில் ஏந்திப் போர்க்களத்தில் பகைவனின் யானையைக் கொன்று, பகையை வென்று வெற்றியுடன்  திரும்புதல் வீரனின் கடமை. 

 ஆணோ, பெண்ணோ அவர்கள் வாழ்வில் அடையும் வெற்றிக்கு அவர்கள் மட்டுமே காரணம் இல்லை.

பலரது ( பெற்றோர், ஆசிரியர், நட்பு, சமூகம், அரசு) உழைப்பும் உதவியும் உறுதுணையாக இருப்பதை மறுக்கவும் கூடாது. மறக்கவும் கூடாது. 

நாம் அனைவருமே நமக்கான கடமையைச் செய்யும் போது ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். நாம் கடமை தவறும்போது பலரது வாழ்க்கை வினாக்குறி ஆகிவிடும். அதுவே , நாம் நம் கடமையைச் சரிவர செய்யும் போது பலரது வாழ்க்கை வியப்புக்குறி ஆகிவிடும். 

இதை அனைவரும் உணர்ந்து அவரவர்  கடமையை சரிவர ஆற்றினால்

இந்த உலகம் உன்னத நிலை அடையும்.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

 


0 Response to " தமிழ் அறிவோம்! 66. கடமை அது கடமை " ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel