
சோறு / சாதம் எது சரி?
தக்காளி சாதம்
தயிர் சாதம்
புளி சாதம்
சாம்பார் சாதம்
என்று சொல்லி சொல்லியே " சாதம்" என்பது தமிழ்ச்சொல் என்று நினைத்துக் கொண்டனர் நம் தமிழ்மக்கள்.
ஆனால்,
"சாதம் " என்பது தமிழ்ச்சொல் அன்று.
வடமொழிச்சொல் ( சமற்கிருதம்) ஆகும்.
இன்றும் கேரளாவில் உள்ள உணவகங்களில் சென்று பாருங்கள்.
" சோறு " என்று அழகு தமிழில்தான் சொல்வார்கள். உணவகத்தில் சென்று ' ஒரு சோறு கொடுத்தோ " என்று மலையாளத்தில்
கேட்பதைப் பார்க்கலாம். மலையாளத்தில் " சோறு " என்னும் சொல் நடைமுறையில்
இன்றும் இருக்கிறது.
ஆனால், தமிழில் " சோறு " என்ற சொல் ஏதோ தீண்டத்தகாத சொல் போல எண்ணிக்கொண்டு சொல்வதற்கு கூச்சப்படுகிறார்கள் . ஆங்கிலத்தில் ' RICE ' என்றும் , வடமொழியில் ' சாதம் ' என்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம் .
சோறு :
" ஏற்றுக உலையே ; ஆக்குக சோறே "
( புறநானூறு - 172)
இப்பாடல் மூலம் உலையில் இட்டு சமைக்கப்பட்ட உணவே சோறு
எனப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.
"சொது சொதுவென நீர் பொதிந்த நெல்லரிசியையே " சோறு " என்று கூறுவர். அதாவது, அரிசியை அவித்து பதமான நிலையில் பெறப்படும் உணவே ' சோறு ' ஆகும். நெல்லரிசியால் செய்வதை மட்டுமின்றி பின்னாளில் சிறுதானிய உணவையும் " சோறு" என்று சொல்லும் வழக்கம் உண்டாயிற்று.
வரகரிசிச் சோறு, தினையரசிச்சோறு, குதிரைவாலியரிசிச்
சோறு, கம்பஞ் சோறு என்று பலவகைச் சோறு உண்டாயிற்று.
கள்ளி, கற்றாழை ஆகியவற்றின் உள்ளீடும் சோறு போல் ஒத்த தோற்றம் தருவதால் கள்ளிச்சோறு, கற்றாழஞ்சோறு எனப் பெயர் பெற்றது.
சோற்றைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள் :
அடிசில், போனகம், மூரல், அமலை, அழுப்பு, அமுது, அவிழ், அயினி, பொம்மல், மடை, மிசை, உணா, புழுக்கல், வல்சி, பாளிதம், அன்னம், பதம், மிதவை, பாத்து, துற்று, உண்டி, சொன்றி, புன்கம் , சரு, அசனம், ஊண், கூழ், ஓதனம், புகா, துப்பு, தோரி, பருக்கை, பிசி, புகர், புழுக்கு, புற்கை, பொம்மல், பொருகு, மடை இவையாவும் சோற்றின் வெவ்வேறு பெயர்கள் ஆகும்.
"சோழ வளநாடு சோறுடைத்து "
"எத்திசைச் செலினும் , அத்திசைச் சோறே "
என்று சங்க காலத்தில் ஔவையாரும் " சோறு" என்ற சொல்லைக் கையாண்டு உள்ளார்.
" வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு
வாழும் மனிதருக்கு எல்லாம் "
" சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!
வெறும் சோற்றுக்கோ வந்ததுஇந்தப் பஞ்சம்!
என்று பாரதிரும் " சோறு " என்ற சொல்லைக் கையாண்டுள்ளார்.
பாரதி காலத்தில் சோற்றுக்கு பஞ்சம் வந்தது. இப்போதோ " சோறு " என்ற சொல்லுக்கே பஞ்சம் வந்துவிட்டது.
இனியாவது,
புளிச்சோறு, தக்காளிச்சோறு, தயிர்சோறு, சாம்பார் சோறு
என்று சொல்லப் பழகுவோம்!
சோறு உண்டு வாழும் நாள்வரை
சோறு என்னும் சொல்லை மறவாதிருப்போம்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to " தமிழ் அறிவோம்! 67. சோறு / சாதம் எது சரி? ஆ.தி.பகலன்"
Post a Comment