"தமிழ்நாட்டின் ( சங்க காலம்) அடையாளங்கள் "
வேழம் உடைத்து மலைநாடு ; மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து; தெள்நீர் வயல்தொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து. ( ஔவையார் தனிப்பாடல் திரட்டு - 61)
1. சேரநாடு ( மலைநாடு) வேழம் ( யானை) உடைத்து:
மலைகள் அதிகம் ( மேற்குத்தொடர்ச்சி மலை) உள்ள சேரனின்
நாட்டில் சிறந்த யானைகள் நிறைந்திருக்கும். அதனால்தான் "சேரநாடு வேழம்
உடைத்து" என்று போற்றப்பட்டது.
2 . சோழநாடு சோறுடைத்து:
மேன்மை கொண்ட சோழனின் நாட்டில் வயல்கள் நன்கு வளமாக
விளையும். சோற்றுக்கு எப்போதுமே பஞ்சம் இல்லை. அதனால்தான் "சோழநாடு
சோறுடைத்து" என்று போற்றப்பட்டது .
3. பாண்டிய நாடு முத்துடைத்து :
பூழியர்களின் ( பூழியர் என்பது பாண்டியர்களைக்
குறிக்கும் சிறப்புப் பெயர்) தலைவனாகிய
பாண்டியனின் தென்னாட்டில் முத்துகள் நிறைந்திருக்கும். பாண்டியர்களின் துறைமுகம்
கொற்கை. கொற்கையில் கிடைக்கும் முத்துகள் உலகப் புகழ்பெற்றவை. அதனால்தான்
"பாண்டிய நாடு முத்துடைத்து" என்று போற்றப்பட்டது.
4. தொண்டை நாடு சான்றோர் உடைத்து :
தெளிவான நீர் நிரம்பி நிற்கும் வயல்களைக் கொண்ட தொண்டை
நன்னாட்டில் நல்ல சான்றோர்கள் நிறைந்திருப்பார்கள். தொண்டை நாட்டின் தலைநகரம்
காஞ்சிபுரம் ஆகும். காஞ்சிபுரம் பட்டுக்கு மட்டுமல்ல படிப்புக்கும் புகழ்பெற்றது. ஆம் நாளந்தா பல்கலைக்கழகத்தை
உருவாக்கிய எண்ணற்ற கல்வியாளர்களை
உருவாக்கிய ஊர் காஞ்சிபுரம்.
அறிவு, வீரம், அறம், கல்வி ஆகிய நற்பண்புகள் நிறைந்த
பெரியோரே சான்றோர் எனப்படுவர். அப்படிப்பட்ட சான்றோர்களை உருவாக்கிய நாடு தான்
தொண்டை நாடு.
"வையம் பெறினும் பொய்யுரைக்க
மாட்டார் தொண்டை நாட்டார் " என்கிறது செஞ்சிக்
கலம்பகம்.
அதனால்தான் "தொண்டை நாடு சான்றோர் உடைத்து"
என்று போற்றப்படுகிறது.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 68. "தமிழ்நாட்டின் ( சங்க காலம்) அடையாளங்கள் " ஆ.தி.பகலன்"
Post a Comment