தமிழ் அறிவோம்! 70. நஞ்சை / புஞ்சை ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 70. நஞ்சை / புஞ்சை ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்! 70.  நஞ்சை / புஞ்சை  ஆ.தி.பகலன்

 


நஞ்சை / புஞ்சை   
நன்செய் / புன்செய்  எது சரி? 

வேளாண்மை செய்யப்படும் நிலங்களை அவற்றின்  தரத்திற்கேற்ப நன்செய், புன்செய் என இருவகையாகப் பிரித்தனர் நம் தமிழ்மக்கள். 

நன்மை ( சிறந்த)  + செய் ( நிலம்)  = நன்செய். 

"நன்செய் நிலம் " என்றால் சிறந்த நிலம் என்று பொருள்.

ஆறு, ஏரி, குளம், கிணறு உள்ளிட்டவற்றில் உள்ள நீரை வைத்து வேளாண்மை செய்யப் பயன்படும் நிலங்கள் அனைத்தும் 'நன்செய் ' நிலம் என்று அழைக்கப்படும். 

நன்கு செய்யப்பட்ட ( பக்குவம் அடைந்த,  சமப்படுத்தப்பட்ட ) நிலமே நன்செய் நிலம் ஆகும். 

இந்நிலங்கள் வரப்புகள் வழியே பிரிக்கப்பட்டு, நீர் பாசன வாய்க்கால்கள் வழியே , தண்ணீர் பாய்ச்சவும் , அளவுக்கு அதிகமான உள்ள நீரை வடிக்கவும் கூடியதாக இருக்கும்.

நீர் அதிகம் தேவைப்படும் பயிர்களான நெல், கரும்பு, வாழை உள்ளிட்டவை இந்நிலத்தில் விளையும். 

நன்செய் நிலத்தில் ஆண்டுக்கு மூன்று போகம்  வரை பயிர்  செய்யலாம். 

புன்மை + செய் = புன்செய். 

'புன்மை ' என்ற சொல்லுக்கு சிறுமை, இழிவு, குற்றம் என்று பொருளாகும். 

'புன்செய் ' நிலம் என்றால் குற்றமுள்ள ( குறைபாடுகள் உள்ள)  நிலம் என்று பொருள்.  அதாவது, காய்ந்து கட்டாந்தரையாகி விளைச்சலுக்கு பயன்படாத தரிசு நிலமே " புன்செய் " நிலமாகும்.  

மழை நீரை ஆதாரமாகக் கொண்டது தான்  " புன்செய் " நிலம்.  நீர்ப்பாய்ச்சலுக்கு ஆதாரம் இல்லாத நிலப்பகுதியை " புன்செய் " என்று அழைத்தனர்.

இந்நிலத்தில் நீர் ஆதாரம் குறைவாகத் தேவைப்படும் பயிர்கள் மட்டுமே விளையும்.

கம்பு. கேழ்வரகு, சோளம், காராமணி, தினை, சாமை, வரகு, குதிரைவாலி , துவரை, கொள்ளு, வேர்க்கடலை உள்ளிட்ட சிறுதானியங்கள் , பயறு வகைகள்  மட்டுமே இந்நிலத்தில் விளையும். 

நல்ல சுவையான உணவு தானியங்களுக்கு " புன்மை " என்று பட்டம் கட்டினர்.

உடலுக்கு பல்வேறு நன்மைகள் செய்யும் சிறுதானியங்களையே " புன்செய் பயிர்கள் " என்று போற்றுகின்றனர். 

வான்கொடை நம்பிய " வானமாரிப் பயிர்கள் " 

பொதுவாக புன்செய் நிலத்தை " வானம் பார்த்த பூமி " என்றும், புன்செய் பயிர்களை மானாவாரிப் பயிர்கள் என்றும் அழைப்பர்.  எவ்வித நீர்ப்பாசன வசதியும் இல்லாமல் , மழைப்பொழிவை மட்டுமே நம்பி பயிரிடப்படுவதுதான் 'புன்செய் பயிர்கள் ' .

வானம் தரும் கொடையான மாரியை ( மழையை) மட்டுமே நம்பிப் பயிரிடப்படுவதால் " வானமாரிப் பயிர்கள் " என்று அழைக்கப்பட்டன.

" வானமாரிப் பயிர்கள் " என்ற சொல்லாடலே இலக்கணப் போலியாகி  " மானவாரிப் பயிர்கள்" என்று அழைக்கப்பட்டு பின் " மானாவாரிப் பயிர்கள் " என்றாயின . 

நன்செய், புன்செய் என்ற சொற்கள் நாளடைவில் மருவி நஞ்சை, புஞ்சை என்றானது. 

நன்செய், புன்செய் என்பதே சரியான சொற்கள் ஆகும்.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

 

0 Response to "தமிழ் அறிவோம்! 70. நஞ்சை / புஞ்சை ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel