" தமிழ்விடு தூது "
96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்றுதான் தூது இலக்கியம். தலைவன் மேல் காதல் கொண்ட தலைவி தன் காதல் நோயின் துன்பத்தைக் காதலுனுக்கு எடுத்துக் கூறி " மாலை வாங்கி வா " என்றும், " தூது சொல்லி வா " என்றும் உயர்திணைப் பொருளையோ , அஃறிணைப் பொருளையோ தூது விடுவதாகப் பாடுவதே "தூது இலக்கியம்" ஆகும்.
வழக்கமாக தோழி, விறலி, அன்னம், மயில், கிளி, வண்டு,
முகில், தென்றல், நெஞ்சம் உள்ளிட்டவற்றைத்தான்
தூது அனுப்புவர்.
ஆனால் இங்கோ தமிழையே தூதாக அனுப்பி இருக்கிறார் புலவர் ஒருவர் .
உலக வரலாற்றில் ஒரு மொழியின் பெயரில் எழுதப்பட்ட முதல் நூல் " தமிழ்விடு தூது " .
மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலைக் கூறிவருமாறு தமிழ் மொழியைத் தூது விடுவதாக இயற்றப்பட்டதுதான் தமிழ்விடு தூது. இந்நூலை இயற்றிய ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை.
இரண்டு இரண்டு பூக்களை வைத்து தொடுக்கப்படும் மாலையைக் கண்ணி என்பர். அதுபோல, இரண்டு இரண்டு அடிகளை வைத்து தொடுக்கப்படும் செய்யுளைக் கண்ணி என்பர். தமிழ்விடு தூது நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது. கலி வெண்பாவால் பாடப்பட்டது இந்நூல்.
தூது அனுப்புவோர் தூதுப் பொருளிடம் அதன் பெருமைகளைக் கூறித் தூது செல்ல வேண்டுவதை எல்லாத் தூது நூல்களிலும் காணலாம். இந்த நூலில் தூது விடும் தலைவி, தூதுப் பொருளான தமிழின் பெருமை, இனிமை, இலக்கிய வளம், சுவை, அழகு, திறன், தகுதி ஆகியவற்றை புகழ்ந்து கூறி தூது செல்ல வேண்டுகிறாள்.
" இருந்தமிழே உன்னால் இருந்தேன் - இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் " ( தமிழ்விடு தூது - 151)
பெருமை பெற்ற தமிழ்மொழியே! நீ எனக்கு துணையாய் இருப்பதால்தான் நான் இதுவரை உயிரோடு இருக்கிறேன். இல்லையேல் என்றோ மாய்ந்திருப்பேன். தேவர்கள் விருந்தாக உண்ணும் உணவாகிய அமிழ்தத்தைத் தந்தாலும் அதை நான் விரும்ப மாட்டேன். உண்ண மாட்டேன். காரணம் தமிழ்மொழி அமிழ்தினும் சிறந்ததாகும் . தன்னிகரற்றதாகும்.
இப்பாடலைப் படித்து நெஞ்சம் நெகிழ்ந்துருகிய தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள் 1930 ஆண்டு முதன்முதலில் இந்நூலைப் பதிப்பித்தார்.
தமிழின் அருமை பெருமைகளை அறிய "தமிழ்விடு தூது
" நூலை முழுவதும் படிப்போம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583)
0 Response to "தமிழ் அறிவோம்! 72. தமிழ்விடு தூது ஆ.தி.பகலன்"
Post a Comment