
" கங்காணி "
கண்+ காணி = கண்காணி.
'கண்காணி ' என்ற சொல்லே மருவி ( திரிந்து) ' கங்காணி ' என்று ஆகியிருக்கிறது.
அந்தக் காலத்தில் தங்களிடம் வேலை செய்யும் பணியாளர்களின் பணியை மேறபார்வை செய்பவர்களையும், வேளாண் துறையில் வரி முறையைக் கண்காணிப்பவர்களையும் 'கண்காணி ( கங்காணி) என்று அழைத்தனர் .
தற்போது ' கண்காணி ' என்ற சொல் கண்காணிப்பாளர் , மேலாளர் என்று மாற்றம் அடைந்துள்ளது.
திருமூலர் இயற்றிய " திருமந்திரம் " என்னும் நூலில் " கண்காணி " என்ற சொல் பயன்படுத்தப்பட்டு உள்ளதை இங்கு காண்போம்.
" கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களஒழிந் தாரே " ( திருமந்திரம் - 2067 )
நம்மைக் கண்காணிப்பவர்கள் யாரும் இல்லை என்ற இறுமாப்பில் சிலர் எண்ணற்ற பாவங்களைச் செய்கிறார்கள். அது மனித இயல்பு என்றாலும் , நம்மை உண்மையிலேயே கண்காணிக்க மூன்றாவது கண் ஒன்று உண்டு. அது இறைவன்.அந்த இறைவன் இல்லாத இடமே இல்லை. " அவன் தூணிலும் இருப்பான் . துரும்பிலும் இருப்பான் " என்ற உண்மையை நாம் உணர்வது இல்லை. உள்ளும் புறமாய் உறையும் இறைவன் நம் மனதினில் உள்ள எண்ண ஓட்டத்தினையும் , நாம் செய்யும் செயல்களையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான் என்பதை நாம் உணர வேண்டும். உணர்ந்தால் பிறர் பொருளைக் களவு செய்து நுகர வேண்டும் என்ற எண்ணம் உண்டாகாது. தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எள்ளளவு கூடத் தோன்றாது. நம் கண்ணுக்குப் புலப்படாத கண்காணி ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்தால் , தீய செயல்களைச் செய்பவர்கள் அனைவரும் தீமை செய்யும் எண்ணத்தை அடியோடு விட்டுவிடுவார்கள்.
" நம்மைக் கவனிப்பார் யாரும் இல்லை " என்ற எண்ணமே இன்று உலகில் நடக்கும் எல்லா குற்றங்களுக்கும் வழியமைத்துக் கொடுக்கிறது.
இப்பாடலில் வரும் " கண்காணி இல்லா இடம் இல்லை
" என்ற அடியை ஆராயும்போது தற்போது உள்ள " கண்காணிப்புக் கருவி ( CCTV
CAMERA) தான் நினைவுக்கு வருகிறது.
இன்று உலகையே கண்காணிக்கும் ' கண்காணி ' எதுவென்றால் அது " கண்காணிப்புக் கருவி" தான்.
நமக்கு மேல் ஒரு
கண்காணி ( இறைவன் / இயற்கை) இருப்பதை
உணர்ந்து வாழ்ந்தால், எந்த ஒரு
கண்காணிப்புக் கருவியும் இந்த உலகிற்கு தேவைப்படாது.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583)
0 Response to " தமிழ் அறிவோம்! 73. கங்காணி ஆ.தி.பகலன்"
Post a Comment