திருநிறைசெல்வன் / திருநிறைசெல்வி திருவளர்செல்வன் /
திருவளர்செல்வி
திருநிறைச்செல்வன் /
திருநிறைச்செல்வி
திருவளர்ச்செல்வன்
திருவளர்ச்செல்வி
எது சரி?
திருமண அழைப்பிதழில் காலம்காலமாக ஒரு பிழை அச்சேறி
வருகிறது. அதைப்பற்றி இப்போது ஆய்வு செய்வோம்.
மணமக்கள் பெயரின்
முன் திருநிறைசெல்வன், திருநிறைசெல்வி,
திருவளர்செல்வன், திருவளர்செல்வி என்று எழுதுவது வழக்கம் . இந்த
சொற்களுக்கு இடையே வல்லினம் (ச்) இல்லாமல்
எழுத வேண்டும். ஏனென்றால் இவை எல்லாம்
வினைத்தொகைகள்.
இலக்கண விதியின்படி வினைத்தொகை சொல்லுக்கு இடையே
வல்லினம் மிகக் கூடாது.
ஒரு வினைச்சொல்லும், ஒரு பெயர்ச்சொல்லும் இணைந்த
கூட்டுச்சொல்லே 'வினைத்தொகை' ஆகும். முன்வரும்
வினைச்சொல், மூன்று காலத்தையும் குறிப்பால் உணர்த்தும் . பின் வரும்சொல்
பெயர்ச்சொல்லாக இருக்கும்.
திருநிறை, திருவளர் என்ற சொற்களின் முன்வரும் "திரு
" என்ற சொல்லுக்கு மேன்மை, செல்வம், வளம், அழகு, சிறப்பு, பொலிவு என்று
பல்வேறு பொருள்கள் உண்டு.
திருநிறை, திருவளர் என்ற இடத்தில் ' திரு ' என்பது
'மேன்மை' என்ற பொருளில் வருகிறது.
திருநிறைசெல்வன் :
திரு ( மேன்மை)
நிறைந்த செல்வன்
நிறைகின்ற செல்வன்
நிறையும் செல்வன்
என்று வினைத்தொகையில் வரும்.
திருவளர்செல்வன் :
திரு ( மேன்மை)
வளர்ந்த செல்வன்
வளர்கின்ற செல்வன்
வளரும் செல்வன் என்று வினைத்தொகையில் வரும்.
திருநிறைச்செல்வன், திருநிறைச்செல்வி என்ற
சொற்களின் இடையில் வல்லினம் ( ச்) இட்டு எழுதினால் பொருட்பிழை உண்டாகும்.
திரு நிறைந்துவிட்டது . இனி திரு ( மேன்மை)
கிடைக்காது என்றாகிவிடும்.
' நிறை, என்ற
சொல்லுக்கு எடை, பருமன் என்றும் பொருள் உண்டு.
'நிறைச்செல்வன் ' என்றால் மணமகன் எடை மிகுந்தவன்,
பருமனானவன் என்றெல்லாம் கூட பொருள் வந்துவிடும்.
திருவளர்ச்செல்வன் ,
திருவளர்ச்செல்வி என்ற சொற்களின் இடையில் வல்லினம் ( ச்)
இட்டு எழுதினால் திரு ( மேன்மை) வளர்ந்து
முடிந்துவிட்டது . இனி வளராது என்றாகிவிடும் .
திருவளர் என்பது
ஏற்கனவே திரு வளர்ந்து இருந்தது. தற்போது வளர்கிறது. இனியும் வளரும் என்று மூன்று காலங்களிலும்
பொருள் உணர்த்தும். இதுதான் வினைத்தொகையின் சிறப்பு ஆகும். அதுபோலவே திருநிறை
என்பதற்கும் பொருள் வரும்.
திருமணம் செய்து கொள்ளும் மணமக்களை மேலும் மேலும்
செல்வங்கள், வளங்கள் பெற்று வாழ வேண்டும்
என்றுதான் வாழ்த்துவோம் . வளங்களோ, செல்வங்களோ நிறைந்துவிட்டது. வளர்ந்து முடிந்து விட்டது.
இனி அவ்வளவு தான் என்று வாழ்த்துவது முறையாகுமா?
ஆகவே,
இனி வல்லினம் ( ச்) இடாமல் எழுதுவோம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583)
0 Response to "தமிழ் அறிவோம்! 74. திருநிறைசெல்வன் / திருநிறைசெல்வி திருவளர்செல்வன் / திருவளர்செல்வி - ஆ.தி.பகலன்"
Post a Comment