" நனிநாகரிகர் "
நீண்ட காலமாக நட்பு கொண்டவர்கள், ஒருமுறை நேருக்கு நேர்
சந்திக்கிறார்கள். அதில் ஒரு நண்பர் இன்னொரு நண்பரிடம் நஞ்சைக் கொடுத்து "
நண்பா! இந்த நஞ்சை உண்பாயாக " என்று
வேண்டுகிறார். மிகுந்த நட்புடைய
சான்றாண்மை மிக்க அந்த நண்பர் அது நஞ்சு எனத் தெரிந்திருந்தும் அதனை உண்டு மேலும்
அவரோடு நட்பு கொள்வார்.
" நஞ்சைக்
கொடுத்து என்னைக் கொல்லவா பார்க்கிறாய், நயவஞ்சகனே! இனி உன்னோடு ஒருநாளும் நட்பு
கொள்ள மாட்டேன் " என்று அந்த நட்பைப் புறக்கணிக்க மாட்டார்.
" முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் " ( நற்றிணை - 355)
நண்பர்கள் என்று தம்மிடம் நெருங்கிப் பழகுபவர்கள் எதைக்
கொடுத்தாலும், அது நஞ்சாக இருந்தாலும்கூட நாகரிகம் கருதி உண்ணும் சான்றாண்மை உடைய
மக்கள் அந்தக் காலத்தில்
இருந்திருக்கிறார்கள். அவர்கள் நட்புக்கு சிறப்பு கொடுத்து
வாழ்ந்திருக்கிறார்கள்.
இந்தக் காட்சியை வள்ளுவரும் பதிவு செய்து இருக்கிறார்.
" பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். ( குறள் - 580)
தம்மோடு மிக நெருங்கிப் பழகியவர்கள் தமக்கு முன்னால்
இருந்து நஞ்சைக் கலந்து அதை உண்ணுமாறு
வேண்டினாலும் நட்புக்காக உண்பார்களாம் .
இத்தகைய இயல்பு யாரிடம் அமையும்?
சான்றோரிடம் என்கிறார் வள்ளுவர்.
இவர்களை நயத்தக்க நாகரிகம் கொண்டவர்கள் என்று போற்றுகிறார்.
இப்படிப்பட்ட நட்புடையவர்களாக பழந்தமிழர்கள்
வாழ்ந்திருக்கிறார்கள் என்று அறியும் போது நமக்கு உள்ளம் உருகுகின்றது. இத்தகைய
உயர்ந்த மனப்பான்மையையே அவர்கள் நாகரிகம்
என்று கருதினார்கள். அதனால்தான் அவர்கள் நனிநாகரிகர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.
நனிநாகரிகர் - சிறந்த நாகரிகம் உடையவர்கள் .
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583)
0 Response to "தமிழ் அறிவோம்! 76. நனிநாகரிகர் - ஆ.தி.பகலன் "
Post a Comment