"தமிழை வளர்ப்பதற்காகவே படைக்கப்பட்டவர் "
இன்று யாராவது ஒருவர் " நான் பட்டப்படிப்பில் (
இளங்கலை / முதுகலை ) தமிழ் படிக்கப் போகிறேன். தமிழ் படித்துவிட்டு தமிழை வளர்க்கப் போகிறேன். தமிழுக்குத் தொண்டு செய்யப்
போகிறேன்" என்று சொன்னால் ஏதோ மனநலம் பாதிக்கப்பட்டவனைப் பார்ப்பதைப் போல
பார்ப்பார்கள். என்னையும் அப்படித்தான் பார்த்தார்கள். பார்க்கிறார்கள். தமிழை வைத்து நீ வளர்வதற்கு (
பணம் சம்பாதிக்க ) வழி இருக்கிறதா? என்று
பார். தமிழை வளர்க்கிற வழியை எல்லாம் நீ பார்க்காதே! என்று அரைமணி நேரம்
உட்கார்ந்து அறிவுரை சொல்லுவார்கள். இப்படித்தான் இருக்கிறது தமிழ்நாட்டில் தமிழை வளர்க்க நினைப்பவர்களின்
இன்றைய நிலைமை.
ஆனால்,
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர்
" நானாக இந்த பூமியில் பிறக்கவில்லை. தமிழை வளர்க்க வேண்டும். அதற்கு
இவன்தான் சரியான ஆள் என்று நினைத்து இறைவனே என்னை நல்ல முறையில் படைத்து விட்டான்
" என்று சொல்லி இருக்கிறார் என்றால் அவருக்கு எவ்வளவு துணிச்சல் இருந்திருக்க
வேண்டும். எந்த அளவுக்கு தமிழ்ப்பற்று இருந்திருக்க வேண்டும்.
அந்தத்
தமிழ்ப்பற்றாளர், தமிழ்த்தொண்டர் யார் தெரியுமா?
திருமூலர்.
தமிழ்மீது திருமூலர் கொண்ட பற்றை விடவும்,
தமிழுக்கு திருமூலர் செய்த தொண்டினை
விடவும் இதுவரை யாரும் செய்ததும் இல்லை. செய்யப்போவதும் இல்லை.
இது எந்த அளவுக்கு உண்மை என்பதை வாழ்க்கையில் ஒரு
முறையேனும் திருமூலர் இயற்றிய
"திருமந்திரத்தை " முழுவதும் படித்துப் பாருங்கள். அப்போது
உண்மை புரியும்.
திருக்குறளைப் போல திருமந்திரத்தையும் இந்தத் தமிழுலகம்
கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால் கொண்டாட மறந்து விட்டது.
இனியாவது கொண்டாடுவோம்.
இந்த ஒரு பாடலைப் படித்துவிட்டு.
" பின்னைநின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே " ( திருமந்திரம் -
81)
பிறவி என்பது துன்பத்தைத் தருவது. இருந்தும் மீண்டும் மீண்டும் ஏன்
பிறக்கிறார்கள்? பிறவி தொடர்வது ஏன்? இப்படி மீண்டும் மீண்டும் பிறப்பவர்கள்
எல்லாம் , முன் பிறப்பில் முறையாகத் தவம் செய்யாதவர்கள்தான் . தவம் செய்யத்
தவறியவர்களுக்குத்தான் பிறவி தொடரும்.
ஆனால், நான் பிறந்திருக்கிறேனே? நான் எப்படி பிறந்தேன்?
என்று கேட்கலாம். நான் பிறக்கவில்லை. இறைவனால் பிறப்பிக்கப்பட்டேன்.மோன நிலையில்
இறைவன் எனக்கு உணர்த்தியதை எல்லாம் நன்றாகத்
தமிழ்ப் பாக்களால் பாடவும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவும்தான் இறைவன்
என்னைப் படைத்துள்ளான். அதற்காகவே இந்தப் பிறவியை இறைவன் எனக்குத் தந்துள்ளான்.
இறைவன் என்னை நன்றாகப் படைத்தது தமிழை நன்றாக வளர்ப்பதற்காகவே
.
ஆறாம் அறிவைக் கடந்தவர்களால் மட்டுமே திருமூலரின்
அறிவையும், அறிவுரையையும் உணர முடியும்.
'தமிழன் ' என்று
தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள நினைப்பவர்கள் எல்லோருமே காலையில் எழுந்தவுடன்
" என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே "
என்னும்
மந்திரத்தை உதடு வலிக்க உச்சரித்துவிட்டு அன்றைய நாளை தொடங்குங்கள்.
இதுவே தமிழுக்கு நீங்கள் செய்யும் தொண்டாக இருக்கட்டும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583)
0 Response to "தமிழ் அறிவோம்! 77. தமிழை வளர்ப்பதற்காகவே படைக்கப்பட்டவர் - ஆ.தி.பகலன் "
Post a Comment