தமிழ் அறிவோம்! 78. ஏர் எழுபது - ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 78. ஏர் எழுபது - ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!  78.  ஏர் எழுபது  - ஆ.தி.பகலன்

 


" ஏர் எழுபது " 
 

'கவிச்சக்கரவர்த்தி ' கம்பர் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது " கம்பராமாயணம் " தான்.  அது சமயம் சார்ந்த நூல். 

கம்பர் இயற்றிய "ஏர் எழுபது " என்னும் நூலோ 'உழவுத்தொழில் ' சார்ந்த நூல் . 

கம்பர் படைப்புகளில் ஆகச் சிறந்த நூல் எதுவென்றால் அது " ஏர் எழுபது " தான். 

'ஏர்த்தொழில் ' பற்றி 70 பாடல்களால் பாடப்பட்டுள்ளதால் இந்நூல்  " ஏர் எழுபது " என்று அழைக்கப்படுகிறது. கடவுள் வணக்கம் முதலான பாயிரப் பகுதியோடு சேர்த்துக் கணக்கிடும் பொழுது 79 பாடல்களாக   அமைகின்றன.

உழவுத்தொழிலின் பல்வேறு படிநிலைகளையும், உழவுக் கருவிகளையும் (கலப்பை, கொழு, ஊற்றாணி, நுகத்தடி, பூட்டாங்கயிறு, மண்வெட்டி, எருக்கூடை) உழவுத்தொழில் செய்கைகளையும்  ( நாற்று நடுதல், எரு விடுதல், நீர் பாய்ச்சல்)  விளக்குவதோடு , உழவர்களின் சிறப்பு , உழவர் பண்பாடு, உழவியல் முறைகள், உழவியல் குறிப்புகள்,  உழவர்களின் குலப்பெருமை, இயல்பு, கொடைத்தன்மை என வேளாண்மையின் அறுபத்து ஒன்பது  சிறப்புகளை  விளக்கிக் கூறுகிறது " ஏர் ஏழுபது " . 

1 செங்கோலை விடவும் ஏர் நடத்துவதற்குப் பயன்படும் சிறிய கோலே சிறந்த கோலாகும்.

2. உழவரின் நாற்று முடியே மன்னரின் மணிமுடி.

3. போரில் வெற்றி தோல்விகள் உண்டு. உழவரின் களத்தில் தோல்வி என்பதே கிடையாது.

4. ஞாயிறு, திங்களின் கதிர்கள் உயிர்களை வளர்ப்பதில்லை. ஆனால், நெற்கதிர்களோ உயிரை வளர்க்கிறது.

உள்ளிட்ட உயர்ந்த கருத்துகளைக் கூறுகிறது " ஏர் எழுபது " 

" கார்நடக்கும் படிநடக்கும் காராளர் தம்முடைய

ஏர்நடக்குமெனில் புகழ்சால்  இயல்இசை நாடகம் நடக்கும்

சீர்நடக்கும் திறம்நடக்கும் திருவறத்தின் செயல்நடக்கும்

பார்நடக்கும் படைநடக்கும் பசிநடக்க மாட்டாதே " ( ஏர் எழுபது - 19) 

தவறாமல் மழை பெய்ய நாட்டில் நல்லொழுக்கம் மிக்க வேளாளரது ( காராளர்) ஏர் நடக்குமாயின் நாட்டில் இயல், இசை, நாடகம் நடக்கும். பல்வேறு சிறப்புகள் நடக்கும். படைபலம் குன்றாது . அறம் செழிக்கும். உலகில் உயிர்கள் தோன்றும். ஆனால் மக்களிடையே பசி மட்டும் தோன்றாது. 

வழக்கமான கம்பனின் கவிநயம் இப்பாடலில் இல்லையே என்று யாரும் கவலைப்பட  வேண்டாம். இப்பாடலில் எட்டு இடங்களில் " நடக்கும் " என்ற நேர்மறைச் சொல்லைப் பயன்படுத்திவிட்டு  இறுதியில்  "நடக்காது" என்ற எதிர்மறைச் சொல்லைப் பயன்படுத்தி முத்தாய்ப்பாக முடித்திருக்கிறார் கம்பர். கவிதை உலகில் கம்பர் தொட்ட உச்சத்தை இமயத்தில் ஏறிநின்று பார்த்தால்கூட கண்ணுக்குப் புலப்படாது. 

இந்த உலகில் ஏர்த்தொழிலால் எல்லாம் ( நடக்கும்)  தோன்றும். பசி மட்டும் ( நடக்காது) தோன்றாது.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583)

0 Response to "தமிழ் அறிவோம்! 78. ஏர் எழுபது - ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel