"முப்பால் "
மூன்று + பால் = முப்பால்.
"பால் " என்ற சொல்லுக்கு பகுப்பு, பிரிவு என்ற பொருள் உண்டு.
1.அறத்துப்பால்
2.பொருட்பால்
3. இன்பத்துப்பால்
ஆகிய மூன்று பால்களையும் விளக்கிக் கூறுவதால் திருக்குறளை " முப்பால் " என்று போற்றுகின்றனர்.
"அறவழியில் நின்று பொருள் ஈட்டி வறியவர்க்குக் கொடுத்து அதனால் வரும் இன்பத்தோடு வாழ வேண்டும் " என்பதை உலகுக்கு உணர்த்தவே திருக்குறளில் அறம் ,பொருள், இன்பம் என்ற தலைப்புகளை உண்டாக்கி உள்ளார் திருவள்ளுவர்.
அறம் - வாழ்வியல்
பொருள் - வாழ்வாதாரம்
இன்பம் - வாழ்க்கை.
இம்மூன்றையும் முன்னிறுத்தியே திருக்குறள் படைக்கப்பட்டுள்ளது.
அறம், பொருள்,
இன்பம் ஆகிய மூன்று சொற்களும் இடம்பெற்ற திருக்குறள் எத்தனை என்று
தெரியுமா?
அவை எதுவென்று தெரியுமா?
அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று சொற்களும் இடம்பெற்ற திருக்குறள் மொத்தம் இரண்டு ஆகும்.
" அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப் படும். ( குறள் - 501)
அறம், பொருள், இன்பம் , உயிர்க்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையானும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் ( ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான் .
" அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள். ( குறள் - 754)
சேர்க்கும் திறன் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல் சேர்க்கப்பட்டு வந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும்.
தமிழர்கள் கண்ட உறுதிப் பொருள்கள் நான்கு ஆகும். அறம்,
பொருள், இன்பம், வீடுபேறு.
இவற்றில் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் விளக்கிய திருவள்ளுவர், வீடுபேற்றை மட்டும் ஏன் கூறவில்லை தெரியுமா?
அறம், பொருள், இன்பம் இம்மூன்றையும் முறையோடும், நெறியோடும், அளவோடும் கைக்கொள்பவர்கள் வீடுபேற்றை அடைவார்கள். அதனால்தான் வீடுபேற்றைத் தனியாக விளக்கவில்லை திருவள்ளுவர்.
அறவழியில் சென்று பொருளைத் தேடுபவர்களின் வாழ்க்கையில்....
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583)
0 Response to " தமிழ் அறிவோம்! 79. முப்பால் - ஆ.தி.பகலன்"
Post a Comment