"வந்தேறிகள்"
தமிழக அரசியல் மேடைகளில் அடிக்கடி பேசப்படும் ஒரு சொல் "வந்தேறிகள்" . இது ஏதோ கெட்ட வார்த்தை போல எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். அது தவறான கண்ணோட்டம்.
ஒரு நிலப்பரப்புக்குள், ஒரு நாட்டிற்குள் வெளியில்
இருந்து வந்து குடியேறியவர்களை "வந்தேறிகள்" என்றழைப்பது பொதுவான
சொற்பயன்பாடாகும்.
வெளியில் இருந்து (வந்து) குடி (ஏறி) யவர்கள் என்பதன் சுருக்கமே "வந்தேறிகள் " என்பதாகும் .
வந்து + ஏறி = வந்தேறி.
உலகில் முதன்முதலில் " வந்தேறி " என்ற சொல்லுக்கு உயிர் கொடுத்தவர்கள் யார் தெரியுமா?
தமிழர்கள்.
இன்று தமிழ்நாட்டில் இருந்துகொண்டு யார்யாரையோ வந்தேறிகள் (குறிப்பாக இந்திக்காரர்களை) என்று சொல்லி வாய்கிழியப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
உலக வரலாற்றைப் பொறுத்தவரை, அனைத்து நாடுகளுக்குமே முதல் வந்தேறிகளாக
இருந்தவர்கள் தமிழர்கள்.
அவ்வளவு ஏன் இப்போதுள்ள இந்திய நாட்டிற்கும், தமிழ்
நாட்டிற்கும் முதல் வந்தேறிகள் தமிழர்களே!
தமிழர்களே தமிழ்நாட்டிற்கு வந்தேறிகள்தான் என்பதை நம்ப முடியவில்லையா?
நம்பித்தான் ஆக வேண்டும். இதை நான் சொல்லவில்லை .
வரலாறு சொல்கிறது.
இலக்கியம் சொல்கிறது.
" பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி " (சிலப்பதிகாரம் : காடு காண் காதை - 19-22)
"பஃறுளி ஆறும், பல பக்க மலைகளையுடைய குமரி மலையும்
இடம்பெற்று இருந்த குமரிக்கண்டத்தைக் கடல்கோள் (சுனாமி) காலிசெய்தது.
இழந்த பகுதியை ஈடுசெய்யவே இந்தியத் திருநாட்டின் வட திசையில் உள்ள கங்கைப் பகுதியையும், இமயத்தையும் கைப்பற்றி தன் இனம் (தமிழினம்) வாழ வழிசெய்துவிட்டு தென்திசையை ஆண்டான் பாண்டிய மன்னன்" என்கிறது சிலப்பதிகாரம்.
குமரிக்கண்டத்தில் ஏற்பட்ட கடல்கோளால் தமிழர்கள் உலகின்
பல நாடுகளுக்கு பரவினர்.
தமிழன் தன் நாற்றாங்காலை (குமரிக்கண்டம்) இழந்ததும், தன் விளைநிலத்தின் விவரம் அறிந்தான். ஆம்,
உலகெங்கும் குடியேறினான். தமிழினமே உலகின் மூத்த குடி என்பதால் இன்று
உலகில் உள்ள எல்லாக் குடிகளுமே தமிழினத்தின் வழித் தோன்றல்களே. ஆகையால் யாரையும் " வந்தேறி " என்று சொல்லி சிறுமை படுத்த வேண்டாம்.
வந்தேறிகளை இருவகையாகப் பிரிக்கலாம்.
1. எப்படியாவது வாழ வேண்டும் என்று வாழ வழி தேடி
வருபவர்கள்.
சான்று :
இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியால் தன் தாய்நாட்டை விட்டு உலகின் பலநாடுகளுக்கு ஏதிலிகளாக சென்று குடியேறிய ஈழத்தமிழர்கள்.
2 . எப்படியாவது சூழ்ச்சி செய்து ஒரு நிலப்பரப்பைக்
கைப்பற்றி அம்மக்களை ஆள நினைப்பவர்கள்.
சான்று :
மத்திய ஆசியாவில் இருந்தும், ஐரோப்பாவில் இருந்தும், அரேபியாவில் இருந்தும் வந்து இம்மண்ணை (இந்திய நிலப்பரப்பை) ஆண்டவர்கள். மீண்டும் மீண்டும் ஆள நினைப்பவர்கள்.
வந்தேறிகளாக வந்து வாழ நினைப்பவர்களுக்கு வாழ்வளிப்போம்.
வந்தேறிகளாக வந்து ஆள நினைப்பவர்களை அழித்தொழிப்போம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583)
0 Response to "தமிழ் அறிவோம்! 80. வந்தேறிகள் - ஆ.தி.பகலன் "
Post a Comment