"உதவி சிறிது பலன் பெரிது"
நாம் மற்றவர்களுக்கு செய்யும் உதவி பெரிதாக இருக்க வேண்டும் என்பதில்லை. நாம் செய்யக்கூடிய ஒரு சிறிய உதவி கூட பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆகையால், எந்த வழியிலாவது நாம் மற்றவர்களுக்கு உதவி செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
" வாங்கும் கவளத்து ஒருசிறிது வாய்தப்பின்
தூங்கும் களிறோ துயர்உறா - ஆங்கதுகொண்டு
ஊரும் எறும்புஇங்கு ஒருகோடி உய்யுமால்
ஆரும் கிளையோடு அயின்று. ( நீதிநெறி விளக்கம் - 38)
தாம் எடுத்துக் கொள்ளும் ஒருவாய் உணவின் ( கவளம்) ஒரு சிறிய பாகமானது வாயினின்று தவறி விழுந்து விட்டால், அசைந்து கொண்டிருக்கும் யானைகளோ அதனால் வருத்தமடைய மாட்டா ; ஆனால், அவ்வுணவு சிந்திய இடத்தில் ஊர்ந்து செல்கின்ற ஒரு கோடி அளவிலான எறும்புகள் தமது நெருங்கிய சுற்றத்தோடு, விழுந்த உணவை உண்டு பிழைக்கும்.
பெரும் செல்வந்தர், தம்மிடம் உள்ள செல்வத்தில் ஒரு சிறுபகுதியைக் கொடையாகக் கொடுத்தாலே, அதனால் எத்தனையோ ஏழைகள் உயிர் வாழ்வர். கொடுப்பதால் அந்த செல்வந்தர்க்கு எவ்வித இழப்பும் ஏற்படப் போவதில்லை. ஆனால், அவர்களிடம் இருந்து உதவி பெறும் ஏழைகளோ எண்ணில் அடங்காப் பலன்களைப் பெறுவர்.
பணம் படைத்தவர்கள் கொஞ்சம் மனம் படைத்தவர்களாக இருக்க
வேண்டும். அப்போதுதான் இல்லாமை இல்லாத நிலை இந்த மண்ணில் உண்டாகும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583)
0 Response to " தமிழ் அறிவோம்! 81. உதவி சிறிது பலன் பெரிது - ஆ.தி.பகலன்"
Post a Comment