எது நல்ல நிலம்?
ஒரு நிலத்தின் வாழ்வும் தாழ்வும் அந்நிலத்தைப் பொறுத்ததன்று. அந்நிலத்தில் வாழும் மக்களைப் பொறுத்தது. நற்பண்பும் நற்செயலும் உடைய மக்களே அந்நிலத்தின் பெருமைக்கும், புகழுக்கும் காரணமாவர்.
" நாடாகு ஒன்றோ ; காடாகு ஒன்றோ ;
அவலாகு ஒன்றோ ; மிசையாகு ஒன்றோ ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே! ( புறநானூறு - 187)
ஒரு நிலம் நாடாக இருந்தால் என்ன? காடாக இருந்தால் என்ன? பள்ளமாக ( அவலாக) இருந்தால் என்ன? மேடாக ( மிசையாக) இருந்தால் என்ன? எங்கே ஆண்கள் ( ஆடவர்) நல்லவர்களாக இருக்கிறார்களோ அந்த நிலமே வாழ்வதற்கு உரிய நிலம் ( இடம்) . அந்த இடத்தில் மேன்மை பெற்றுத் திகழ்ந்து வாழிய நிலமே! என்று நிலத்தை வாழ்த்துகிறார் ஔவையார்.
இப்பாடலுக்கு இப்படியும் பொருள் கொள்ளலாம்.
நாடு என்பது மருத நிலத்தைக் குறிக்கும்.
காடு என்பது முல்லை நிலத்தைக் குறிக்கும்.
அவல் ( பள்ளம்)
என்பது நெய்தல் நிலத்தைக் குறிக்கும்.
மிசை ( மேடு) என்பது குறிஞ்சி நிலத்தைக் குறிக்கும்.
தமிழர்கள் வாழ்ந்த நால்வகை நிலத்தையும் இப்பாடல் குறித்தது.
" ஆடவர் " என்ற சொல் 'ஆண்கள் ' என்ற பொருளையே தருவதாக சிலர் எண்ணுகின்றனர். அது தவறு. இந்தப் பாடலில் ஆடவர் என்பது ஆள்பவர் ( ஆட்சி செய்பவர்) என்ற பொருளில் வந்துள்ளது.
"ஒரு நிலம் குறிஞ்சியாக இருந்தால் என்ன? முல்லையாக இருந்தால் என்ன?
மருதமாக இருந்தால் என்ன?
நெய்தலாக இருந்தால் என்ன?
அந்த நிலத்தை ஆள்பவர் ஒழுங்காக இருந்தால் அந்த
நிலமும் ஒழுங்காக இருக்கும்" என்று
பொருள் கொள்வதே சரியானதாகும்.
"ஒரு நாடு தலை நிமிர்ந்து வாழ்வதற்கும்,
தலை குனிந்து நிற்பதற்கும் அந்த நாட்டை ஆட்சி செய்வர்களே
காரணம் " என்பதை மிக அழகாக சுட்டிக்காட்டியுள்ளார் ஔவையார்.
உலக வல்லரசுகள் இப்பாடலின் கருத்தை கொஞ்சம் கவனிப்பது நலம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 82. எது நல்ல நிலம்? - ஆ.தி.பகலன்"
Post a Comment