
" ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ் "
ஊர் என்று ஒன்று இருந்தாலே அங்கு ஆறு என்ற ஒன்று இருக்க
வேண்டும். ஆறுதான் அந்த ஊருக்கு உண்மையான அழகு. அதனால்தான் " ஆறு இல்லா
ஊருக்கு அழகு பாழ் " என்று " நல்வழி " என்னும் நூலில் ஔவையார்
பாடியுள்ளார்.
அஃறிணையாய் இருந்த மனித சமுதாயத்தை உயர்திணையாய்
மாற்றியது ஆறுகள்தான். தனக்கான ஒரு நிலையான வாழ்க்கையை மனிதர்கள் கட்டமைத்துக்
கொண்டது ஆற்றங்கரையோரம்தான் .
அதனால்தான் உலக நாகரிகங்கள் அனைத்தும் நதிக்கரை
நாகரிகமாகவே உள்ளன.
பொருநை (தாமிரபரணி) ஆற்றங்கரையில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இருந்த ' உமி நீக்கப்பட்ட நெல்லினை ' கரிமம் நீக்கிப் பார்த்தபோது அதன் வயது ஏறக்குறைய 3176 ஆண்டுகள் எனத் தெரிய வந்துள்ளது. 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே பொருநை ஆற்றங்கரையில் வளமான 'நாகரிகத்தை' தமிழர்கள் கட்டி எழுப்பியிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. உழுது பயிர் செய்யவும், உணவை சமைத்து உண்ணவும் நீர் வேண்டும். அதனால்தான் தன் வாழ்விடத்தை ஆற்றங்கரையோரம் அமைத்துக் கொண்டது மனித சமுதாயம்.
ஊருக்கு மட்டுமல்ல, இந்த உலகத்திற்கே அழகு தந்தது, அடையாளத்தைத் தந்தது எவைவென்றால் அவை ஆறுகள்தான்.
ஆறு :
இரு கரைகளுக்கு இடையே ஓடும் நீர்பரப்பையே " ஆறு
" என்பர்.
'அறு' என்ற சொல்லே ' ஆறு ' என்றானது. இது முதனிலை நீண்ட ( அறு > ஆறு ) தொழிலாகு பெயர் ஆகும். தனக்கான வழியைத் தேடி தரையை அறுத்துக் கொண்டும், காடு முதலானவற்றை ஊடறுத்துக் கொண்டும் செல்லுவதால் இப்பெயர் பெற்றது.
உலக உயிர்கள் வாழவும். நெடுந்தூரப் பயணத்தை நீர்வழி மூலம் செய்யவும் வழி ஏற்படுத்தி தந்தமையால் ' ஆறு ' என்ற சொல்லுக்கு ' வழி ' என்ற பொருளும் உண்டானது.
ஒரு நாட்டின் உண்மையான வளமே " ஆறுகள்தான் " . ஆறுகள் இல்லாத நாடு பாலைவனமாகத்தான் இருக்க முடியும்.
உலகிலேயே ஆறுகள் இல்லாத நாடு எது தெரியுமா?
சௌதி அரேபியா.
அந்த நாடு ஏன் முழுவதும் பாலைவனமாக இருக்கிறது என்பது
இப்போது புரிந்திருக்கும்.
இந்த உலகம் பசுமையாக இருக்க வேண்டுமா?
பாலைவனமாக இருக்க வேண்டுமா? என்பதை ஆறுகளை நாம் பாதுகாப்பதில்தான் இருக்கிறது.
தமிழ்நாட்டின் வளத்தை பாடும்போது " ஆறுகளால்தான் தமிழ்நாடு வளமாக இருக்கிறது " என்று கூறுகிறார் பாரதியார் .
" காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருநை நதி - என
மேவிய ஆறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு!"
"தமிழ்நாடு செழிப்பாக இருப்பதற்கு காரணம்,
காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வையை (வைகை) , பொருநை (தாமிரபரணி) உள்ளிட்ட ஆறுகள் பாய்வதுதான் " என்கிறார் பாரதியார்.
இயற்கையாக ஓர் ஆற்றை நம்மால் உருவாக்க முடியாது.
ஆனால், ஓர் ஆற்றை அழிக்காமல் இருக்க முடியுமல்லவா?
ஆறுகளைப் பாதுகாப்போம்!
அதன்மூலம்
அடுத்த தலைமுறையையும்
பாதுகாப்போம்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to " தமிழ் அறிவோம்! 83. ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ் " - ஆ.தி.பகலன்"
Post a Comment