" உன் ஆடு பொன் ஆடு "
தமிழ் மூதாட்டி ஔவையார் அவர்கள் ஊர் ஊராகச் சென்று பாடல்கள் பல பாடி தமிழ் வளர்த்தவர். அரண்மனையோ , குடிசையோ எங்கு இடம் கிடைத்தாலும் அங்கே தங்கிவிடுவார் . அப்படி ஒருமுறை, "தான் தங்கியிருந்த இல்லத்தார் வறுமையில் இருப்பதை அறிந்த ஔவையார் , தனக்கு விருந்தளித்த அவ்வில்லத்தார்க்கு அவர் வறுமையைப் போக்க அந்நாட்டு மன்னரிடம் ஓர் ஆட்டைப் பெற்றுக் கொடுத்தால் , அவர்கள் அதை வைத்து தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்வர் " என்று எண்ணினார். உடனே மன்னனிடம் சென்றார்.
அவரை வரவேற்ற அரசன்,
" பெரும்புலவரே! தங்கள் வருகையால் என் நாடே சிறப்புற்றது. என்னால்
தங்களுக்கு ஆக வேண்டியது இருந்தால் சொல்லுங்கள்.
உடனே நிறைவேற்றுகிறேன் " என்று அன்புடன் சொன்னான்.
" தலையிலே மணிமுடி சூடிக் கொண்டிருக்கும் சேர
மன்னா! பால் தரும் ஆடு ஒன்று வேண்டும் " என்று கேட்டார். இரந்தோர்க்கு
பொன்னும் பொருளும் வாரி வழங்கும் அச்சேர மன்னன் , கேட்பது தமிழ்ப் புலவர் என்பதை
அறிந்தான். புலவருக்குச் சாதாரண ஆட்டைப் பரிசாகக் கொடுப்பதா? அவர் வறுமையைப் போக்க
பொன்னாலான ஆட்டைப் பரிசாகக் கொடுப்பதே தமக்கும் தமிழுக்கும் பெருமை என்றெண்ணி,
பொன்னால் செய்யப்பட்ட ஆடு ஒன்றை ஔவைக்குப் பரிசளித்தான். இரப்பவர் எதைக்
கொடுத்தாலும் பெற்றுக் கொள்வர். எனினும் கொடுப்பவர் தம் தகுதி அறிந்து கொடுக்க
வேண்டுமல்லவா? அதனால்தான் பொன்னால் ( தங்கத்தால்) ஆன ஆட்டைப் பரிசளித்தான் சேர
மன்னன்.
அதைப் பெற்றுக் கொண்ட ஔவையார்,
"சேரா! உன்னாடு பொன்னாடு " என்றார்.
" சேரன் தந்த ஆடு பொன்னால் செய்யப்பட்டது"
என்று ஒரு பொருளையும், " சேரனுடைய
நாடு பொன்னாடு " என்று மற்றொரு பொருளையும் தருகிறது இச்சொற்றொடர்.
உன்னாடு :
உன் நாடு, உன் ஆடு
பொன்னாடு :
பொன் நாடு, பொன் ஆடு.
ஔவையாரின் நயம் மிகுந்த சொற்களைக் கேட்டு அரசனும்,
அவையோரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
" சிரப்பால் மணிமவுலிச் சேரமான் தன்னைச்
சுரப்பாடு யான்கேட்கப் பொன்னாடுஒன்று - ஈந்தான்
இரப்பவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர்
தாமறிவர் தன்கொடையின் சீர். ( ஔவையார் தனிப்பாடல் திரட்டு - 30)
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to " தமிழ் அறிவோம்! 84. " உன் ஆடு பொன் ஆடு - ஆ.தி.பகலன்"
Post a Comment