தமிழ் அறிவோம்! - 8 - அரசு / அரசினர் எது சரி? ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! - 8 - அரசு / அரசினர் எது சரி? ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்! - 8 - அரசு / அரசினர்  எது சரி? ஆ.தி.பகலன்

 


அரசு / அரசினர்

எது சரி?

 

அரசினர் மேனிலைப் பள்ளி

அரசினர் கலைக்கல்லூரி

அரசினர் பொது மருத்துவமனை

ஓமந்தூரார் அரசினர் தோட்டம்

 

போன்ற பெயர்ப் பலகைகளை பார்த்து இருப்பீர்கள். அவற்றில் உள்ள 'அரசினர்' உயர்திணை ஆகும். ஆனால் அச்சொல்லால் சுட்டப்படுகிற பொருள்  'அஃறிணை'  ஆகும் . 'அரசு ' என்னும் அஃறிணைக்கு உயர்வு அல்லது மரியாதை தருகின்ற 'அர்' விகுதி தேவையில்லை .

 

அமைச்சர் - அமைச்சு + அர்

இங்கு அமைச்சு என்பது அஃறிணை . 'அர் ' விகுதியைச் சேர்க்கும் போது அந்த அமைச்சில் வீற்றிருக்கின்ற உயர்திணையாளரைக் குறிக்கிறது.

ஆனால் அரசு என்னும் அஃறிணை அமைப்பை உயர்திணைக்கே உரிய உயர்வுப் பன்மை விகுதியைச் சேர்த்து சொல்வது தேவையற்றது .

 

அரசு+இன்+அர் = அரசினர். இங்கு அரசு என்னும் சொல்லோடு 'இன்' என்னும் இடைச்சொல்லையும் , 'அர்' என்னும் உயர்வுப் பன்மை விகுதியைச் சேர்த்து 'அரசினர்' என்று சொல்வது தவறாகும்.

 

சங்கம் = ஒரு தனியார்  அமைப்பு.

சங்கத்தினர் = சங்கத்தைச் சார்ந்தவர்கள், உறுப்பினர்கள் .

 

அரசு =  பொதுமக்களுக்கான ஓர் அமைப்பு.

(அரசுப் பள்ளி - அரசு நடத்தும் பள்ளி)

அரசினர் = அரசை நடத்தும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊழியர்கள் . (அரசினர் பள்ளி - அரசை நடத்துபவர்கள் நடத்துகிறப் பள்ளி என்று பொருள்படும்)

 

அஃறிணை சொல்லுடன்  'அர்' விகுதி சேர்ந்தால் அது மனிதரையே குறிக்க வேண்டும்.

அலுவல் +அர் - அலுவலர்

அரசு + அர் - அரசர்

ஆட்சி + அர் - ஆட்சியர்.

 

நடுவில் 'இன்' என்னும் இடைச்சொல் போட்டும், யகர உடம்படுமெய் போட்டும்  புது சொல்லை உருவாக்கலாம்.

"இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் "

(திருப்பள்ளி எழுச்சி - 04)

வீணை +ய்+அர் = வீணையர் (வீணையை உடையவர்)

யாழ் +இன்+அர் = யாழினர் (யாழை உடையவர்கள்)

இப்படி 'அர்' விகுதி சேரும் இடம் எல்லாம் அது மக்களைச் சுட்டுகிறது.

ஆனால் 'அரசினர் ' என்பது மக்களைச் சுட்டுகிறதா? இல்லை. ஆகவே அது பிழைச்சொல்.

 

'அரசு ' என்பதே சரி.

அரசு மேனிலைப்பள்ளி

அரசு பொது மருத்துவமனை

என்றே இனி எழுதுவோம்.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583)

0 Response to "தமிழ் அறிவோம்! - 8 - அரசு / அரசினர் எது சரி? ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel