"எண்ணலங்காரம்"
எண்களை வைத்துக் கொண்டு பாடல்கள் எழுதுவதை "
எண்ணலங்காரம் "என்பர். தமிழில் எண்ணிலடங்கா " எண்ணலங்காரப்"
பாடல்கள் உள்ளன.
அவற்றில் ஒன்றை இப்போது காண்போம்.
" ஒன்றில் இரண்டாய்ந்து மூன்றடக்கி நான்கினால்
வென்று களங்கொண்ட வேல்வேந்தே - சென்றுலாம்
ஆழ்கடல்சூழ் வையத்துள் ஐந்துவென்று ஆறுஅகற்றி
ஏழ்கடிந்து இன்புற்று இரு.
( புறப்பொருள் வெண்பாமாலை - 225)
இதில் வரிசையாக ஒன்று முதல் ஏழு வரையான எண்கள் இடம்பெற்று உள்ளன . அவை அந்த எண்களைக் குறிக்காமல் குறிப்பால் வேறு பொருளைக் குறித்து வருகின்றன.
பாடலின் பொருள் :
ஒன்றாகிய உண்மை ஞானத்தினாலே,
இரண்டாகிய நன்மை தீமைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்து ,
பகை, நட்பு, நொதுமல் ( பகை, நட்பு இரண்டுமற்ற நடுநிலை ) என்னும் மூன்றினையும் தன்வயப்படுத்தி ,
யானை, தேர், குதிரை, காலாள் என்னும் நால்வகைப் படையினாலே பூசலை ( பகையை) வென்று போர்க்களத்தைக் கைக்கொண்ட வேல்வேந்தனே!
கரைமேல் சென்று தவழும் அலைகளையுடைய ஆழ்ந்த கடலால் சூழப்பட்ட இந்த உலகினுள்ளே ,
ஐம்புலன்களையும் வென்று ,
அரசனுக்கு உரிய ஆறு ( படை, குடி ( மக்கள்) , கூழ் ( உணவு) , அமைச்சு ( நல் ஆலோசகர் குழு) , அரண் ( பாதுகாப்பு ) உறுப்புகளையும் பெருக்கி,
ஏழுவகைக் குற்றங்களான ஈடில்லா வேட்டம் ( பேராசை), கடுஞ்சொல், மிகுதண்டம் ( அதிகப்படியான தண்டனை) , சூது , பொருளீட்டம் ( அதிகப்படியான பொருள் சேர்த்தல்) , கள் ( மது) , காமம் ஆகியவற்றைக் கடிந்து ( நீக்கி) நெடுங்காலம் வாழ்ந்திருப்பாயாக! என்று அரசனை வாழ்த்துகிறார் .
ஒன்றினால் இரண்டை ஆராய்ந்து மூன்றை அடக்கி,
நான்கினால் ஐந்தையும் வென்று , ஆறினைப் பெருக்கி ஏழையும் விரட்டினால் இன்புற்று
வாழலாம் என்கிறது இந்தப்பாடல்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 86. எண்ணலங்காரம் - ஆ.தி.பகலன்"
Post a Comment