
" ஒன்பதும், தொண்ணூற்று ஐந்தும் "
தமிழிறிஞர் ஒருவரை சந்திக்க இன்னொரு தமிழறிஞர் அவர் வீட்டுக்கு சென்றார். தன் வீட்டுக்கு வந்த தமிழறிஞரை வரவேற்று நலம் விசாரித்தார்.
இருவரும் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டு இருந்தனர். வீட்டில் இருந்த தமிழறிஞர் தன் மகளை அழைத்து, "அம்மா! ஐயா வந்திருக்கிறார். ஐயாவுக்கு ஒன்பது தர வேண்டும். ஏற்பாடு செய் " என்றார்.
அது என்ன ஒன்பது?
தமிழறிஞரின் மகளுக்கும் விளங்கவில்லை. விருந்தினராக
வந்திருந்த தமிழறிஞர்க்கும் விளங்கவில்லை.
சிறிது நேர ஆராய்ச்சிக்கு பின்பு, ' ஒன்பது' என்பது எதைக் குறிக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட தமிழறிஞரின் மகள் " ஏற்பாடு செய்கிறேன் தந்தையே " என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
விருந்தினராக வந்திருந்த தமிழறிஞர்க்கு கடைசிவரை ஒன்றும்
விளங்கவில்லை. பல கோணத்தில் யோசித்துப் பார்த்துவிட்டு ஒரு வழியாக ' ஒன்பது ' என்ற
சொல் எதைக் குறிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்.
"ஐயா, தங்கள் மகளைக் கொஞ்சம் கூப்பிடுங்கள். அவரிடம் ஒரு செய்தி சொல்ல வேண்டும் " என்றார்.
வீட்டில் இருந்த தமிழறிஞர் தன் மகளை அழைத்தார்.
எதிரே வந்து நின்ற அவர் மகளைப் பார்த்து " அம்மா! நான் இயோது தொண்ணூற்று ஐந்துடன் இருப்பதால் எனக்கு ஒன்பது வேண்டாம் " என்றார் விருந்தினராக வந்த தமிழறிஞர் .
அது என்ன தொண்ணூற்று ஐந்து?
தமிழறிஞரின் மகள் குழப்பத்தில் ஆழ்ந்தாள். சிறிது நேர யோசனைக்குப் பின்பு " தொண்ணூற்று ஐந்து " என்று அவர் எதைக் கூறினார் என்பதை உணர்ந்து கொண்டார். " சரி ஐயா, அவ்வாறே ஆகட்டும் " என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
வழக்கம்போல், தமிழறிஞர் இருவரும் சிறுது நேரம் உரையாடினார்கள். அதன்பின்பு விருந்தினராக வந்த தமிழறிஞர் விடைபெற்று சென்றார்.
இத்துடன் கதை முடிந்தது.
அது என்ன ஒன்பது, தொண்ணூற்று ஐந்து?
திருக்குறளில்
ஒன்பதாவது அதிகாரம் " விருந்து "
தொண்ணூற்று ஐந்தாவது அதிகாரம் " மருந்து "
இப்போது கதையை மறுபடியும் வாசியுங்கள்.
வீட்டில் இருந்த தமிழறிஞர், விருந்தினராக வந்த
தமிழறிஞர்க்கு "விருந்தோம்பல் " செய்ய நினைக்கிறார். அதை தன் மகளிடம்,
"ஐயாவுக்கு ஒன்பது (விருந்து) தரவேண்டும் " என்று குறிப்பால் உணர்த்துகிறார்.
விருந்தினராக வந்த தமிழறிஞர், இந்தக் குறிப்பை உணர்ந்து
கொள்கிறார். "தான் தொண்ணூற்று ஐந்துடன் (மருந்து) இருப்பதால் எனக்கு ஒன்பது
(விருந்து) வேண்டாம் " என
மறுக்கிறார்.
அதாவது, அவருடைய உடற்பிணி காரணமாக நாட்டு மருந்து உண்டு வருகிறார். அதனால் அவர் பத்திய (உப்பு, புளி, காரம் இல்லாத) உணவுதான் உண்ண வேண்டும். விருந்து உண்ண முடியாது. ஆதலால், அவர் ஒன்பது (விருந்து) வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்
இப்போது அனைத்தும் புரிந்ததா?
'தமிழ் படித்தவர்கள் ' என்றால் சும்மாவா?
பாம்பறியும் பாம்பின் கால்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to " தமிழ் அறிவோம்! 90. ஒன்பதும், தொண்ணூற்று ஐந்தும் - ஆ.தி.பகலன் "
Post a Comment