" பாம்பறியும் பாம்பின் கால் "
கால்களே இல்லாத பாம்பை வைத்துப் புழக்கத்தில் இருக்கும் இப்பழமொழியின் சரியான விளக்கம் என்ன?
இதற்கு இருவகையில் பொருள் கொள்ளலாம்.
1. பாம்பிற்கு கால் என்னும் உடல்பாகம் இல்லை என்பது அனைவர்க்கும் தெரிந்ததே. கால் என்பது இடம்பெயர்வதற்கு பயன்படும் ஓர் உறுப்பு. எனவே பாம்பிற்கு இடம்பெயர உதவும் ( கால் போன்ற) உறுப்பு எதுவென்பது அதே இனமான பாம்புகளுக்கு மட்டுமே தெரியும். மற்ற உயிரினங்களுக்குத் தெரியாது. அதாவது, பாம்புகள் எப்படி ஊர்ந்து செல்கிறது என்பது பாம்புகளுக்கு மட்டுமே தெரியும் .
2. பாம்பு தன் உணவுக்காக நெடுந்தொலைவு அலைந்து திரியும்.
பின்னர் தன் இருப்பிடத்தை எவ்வாறு சரியாக கண்டடைகிறது? அதற்கு தன் இருப்பிடத்திற்குச் செல்ல எவ்வாறு
வழி தெரிகிறது?
அதுதான் பாம்பு இனத்திற்கே உரித்தான தனித்திறமை.
'கால் ' என்ற சொல்லுக்கு வழி, பாதை, தடம் என்று பல
பொருள்கள் உண்டு.
பாம்பின் கால் = பாம்பு தன் உறைவிடம் திரும்பும் வழி. எத்துணை தொலைவு
சென்றாலும் , தன் இருப்பிடத்திற்குத் திரும்பி வரும் வழியை அறியும் திறன்
பாம்புக்கு உண்டு. அதற்கு எவ்வாறு வழி தெரிகிறது என்பதை நாம் உணர முடியாது .
பாம்பு சென்று வரும் வழியைப் பாம்பு மட்டுமே அறிய
முடியும்.
அதைத்தான்
விளக்குகிறது
" பாம்பறியும் பாம்பின் கால் " என்னும் பழமொழி.
" புலம்மிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புனல் ஊர! பொதுமக்கட்கு ஆகாதே
பாம்பறியும் பாம்பின் கால். ( பழமொழி நானூறு - 301)
"நன்மைகள் மிகுதியாக உடைய , அழகிய நீர்வளம் மிகுந்த ஊருக்கு உரியவனே! பாம்பின் கால்களை அதற்கு இனமான பாம்புகளே நன்றாக அறியும் திறம் உடையன. அதுபோலவே, அறிஞரின் சிறப்பை அவரைப் போன்ற அறிஞர்களே அறிந்து உணர்ந்து பாராட்டுவர் ; அறிவுச் சிறப்பில்லாத சாதாரண மக்களுக்கு அவர் சிறப்பை அறிந்து கொள்ளவே முடியாது. ஆகவே, அவர் அறிஞரை மதிப்பதற்கும் போற்றுவதற்கும் அறியார்" என்பதையே இப்பாடல் உணர்த்துகிறது.
"பாம்பெல்லாம் பூமியையே பாதமாகப்
பயன்படுத்திக்
கொள்ளுகின்ற காரணத்தால்
பாம்புக்குப்
பாதம்பூ எனப் பேரிட்டார்
பாதம்பூ என்பதையே நாமெல்லோரும்
பாம்பென்று கூறுகின்றோம் " என்கிறார் உவமைக் கவிஞர்
சுரதா.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 91 பாம்பறியும் பாம்பின் கால் - ஆ.தி.பகலன் "
Post a Comment