"அங்கவை - சங்கவை "
300 ஊர்களை உள்ளடக்கிய பறம்பு நாட்டை ஆண்டவன் வள்ளல்
வேள்பாரி.
முல்லைக்குத் தேர் கொடுத்தவன். தன்னை நாடி வந்த
இரவலர்களுக்கு 300 ஊர்களையும் கொடையாக கொடுத்தவன். கொடையளிப்பதில்
மூவேந்தர்களையும் முந்திச் சென்றவன்.
தங்களைக் காட்டிலும் தன்னிகரில்லாப் புகழோடு பாரி போற்றப்படுவதைக் கண்டு மூவேந்தர்கள் பகை கொண்டனர்.
பாரிக்கு இரண்டு மகள்கள் இருந்தனர்.
அங்கவை, சங்கவை.
அழகும், அறிவும்
நிரம்பப் பெற்றவர்கள். பாரி மகளிரின் பேரழகு பேரரசுகளை ( மூவேந்தர்களை )
பொறாமைப்பட வைத்தது.
மூவேந்தர்கள் மூவரும் பாரியிடம் சென்று பெண் கேட்டனர். பாரி மறுத்தான். இதற்காகவே காத்திருந்த மூவேந்தர்கள் பறம்பு நாட்டின் மீது போர் தொடுத்தனர். மூவேந்தர்களால் போரில் பாரியை வெல்ல முடியவில்லை. இறுதியில் சூழ்ச்சியால் பாரியை வென்றனர். ஈவு இரக்கமின்றி பாரியைக் கொன்றனர். " அழகு ஆபத்தானது " என்பார்கள். ஆம், பாரி மகளிரின் அழகு பாரியின் உயிருக்கு ஆபத்தானது.
பாரி இறப்புக்குப் பிறகு பாரியின் உயிர் நண்பரான கபிலர்,
பாரி மகளிர் இருவரையும் பாதுகாப்பான
இடத்தில் தங்க வைத்து அவர்களைக் காப்பாற்றி வந்தார்.
பாரி இறந்து ஒரு திங்கள் ( மாதம்) கடந்தபின் வந்த முழுநிலவு அவர்களின் தந்தையையும், நாட்டையும் நினைவூட்டியது. அந்த நினைவை வலியோடு பதிவு செய்து இருக்கிறார்கள் பாரி மகளிர்.
" அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்,
எந்தையும்
உடையேம், எம்குன்றும் பிறர்கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்,
வென்றுஎறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்;யாம் எந்தையும் இலமே ! " ( புறநானூறு - 112)
மூவேந்தர்கள் முற்றுகையிட்டிருந்த அந்த மாதத்தில்
வெண்மையான நிலவொளியில் எங்கள் தந்தையை
நாங்கள் பெற்றிருந்தோம். எங்கள் மலையை பிறர் கைக்கொள்ளவில்லை. எங்களிடமே இருந்தது.
இந்தத் திங்களில் ( மாதத்தில்) வெண்மையான நிலவொளியில் வென்று ஒலிக்கும் முரசினைக் கொண்ட வேந்தர்கள் எம்முடைய மலையைக் கவர்ந்து கொண்டனர். நாங்கள் எங்கள் தந்தையை இழந்தோம்.
மூவேந்தர்களும் பாரியைப் போரில் வெல்லவில்லை.
சூழ்ச்சியால் வென்றனர்.
" வென்றறி முரசின் வேந்தர் " மூவேந்தர்களும் தங்கள் வீரத்தால் பாரியை வெல்லவில்லை என்பதைச் சுட்டிக் காட்டும் இகழ்ச்சிக் குறிப்பு ஆகும்.
"ஒரு திங்கள் சென்று மறு திங்கள் வருவதற்குள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் " என்று வாழ்க்கையின் நிலையாமையை எடுத்துரைக்கும் இப்பாடல் உலகின் மிகச்சிறந்த பாடல்களுள் ஒன்றாகும்.
அழகிலும், அறிவிலும் தன்னிகரில்லா பெண்களான பாரி மகளிரை,
' சிவாஜி ' திரைப்படத்தில் முகத்தில் கரி பூசப்பட்ட இரு பெண்களுக்கு அங்கவை, சங்கவை என பெயர் வைத்து நையாண்டி
செய்திருப்பது காலக்கொடுமை.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! - 92. அங்கவை – சங்கவை ஆ.தி.பகலன்"
Post a Comment