"ஆற்றுணா வேண்டுவது இல் "
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று " பழமொழி நானூறு "
நானூறு பாடல்களைக் கொண்ட நூல் இது.
இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம்
பெற்றுள்ளது.
ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு பழமொழியையும் சொல்லி அதன் அடிப்படையில் ஒரு
நீதியையும் விளக்கும் வகையில் அமைந்திருக்கிறது " பழமொழி நானூறு "
இப்படி ஒரு சிறந்த நூலை உருவாக்கி மக்களிடையே ஒழுக்கத்தை
மேம்படுத்தவும், பழமொழிகளை நிலைப்படுத்தவும் முயன்ற பெருமைக்கு உரியவர் முன்றுறை
அரையனார். இந்நூலை இயற்றியவர் இவரே.
காலத்தை வென்று நிற்கும் பாடல், கல்வியின் சிறப்பைச்
சொல்லும் பாடல் ஒன்றினைக் காண்போம்.
" ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவது இல். (பழமொழி நானூறு - 55)
கற்க வேண்டிய நூல்களை நிறைவாகக் கற்றவர் அறிவுடையவர்
ஆவார். அவருடைய புகழ் நான்கு திசைகளிலும் பரவும். அவருடைய புகழ் பரவாத நாடு
இல்லை. அந்த நாடுகள் எல்லாம் வேற்று
நாடுகள் இல்லை. தம்முடைய நாடுகளே. எனவே,
அந்நாடுகளுக்குச் செல்லும்போது வழிநடை உணவை, அவர் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை
இல்லை. எந்த நாட்டிற்குச் சென்றாலும்
அந்நாட்டில் கற்றோரை வரவேற்று உணவு அளிப்பர்.
"ஆற்றுணா வேண்டுவது இல் " என்பதற்கு "
கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம் " என்பது பொருளாகும்.
"அக்காலத்தில்,
கற்றவர்களை எல்லா நாட்டு மக்களும் போற்றினார்கள் " என்பதையே இப்பாடல்
நமக்கு உணர்த்துகிறது.
ஆனால், இக்காலத்தில் கற்றவர்களுக்கு மதிப்பில்லை.
பொருளைப் பெற்றவர்களுக்கே மதிப்பு. எவ்வளவு கற்றிருந்தாலும் வேலைக்குச் சென்று
பொருள் ஈட்டினால்தான் மதிக்கிறார்கள்.
அன்று
கற்றவர்களை அயல்நாட்டிலும் போற்றினர்.
இன்று
கற்றவர்களை சொந்த நாட்டில் மட்டுமல்ல, சொந்த வீட்டிலும்
மதிப்பது இல்லை.
இன்று கற்றவர்களின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 93. ஆற்றுணா வேண்டுவது இல் ஆ.தி.பகலன்"
Post a Comment