"வேந்தமை இல்லாத நாடு "
" என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் "
என்று பாடினார் கவிஞர் மருதகாசி.
எல்லா வளமும் பெற்ற நாடு நம்நாடு. ஆனாலும் உலக அரங்கில்
ஓர் ஓரமாய் உட்கார்ந்து கொண்டு இருக்கிறது. வேகமாய் ஓட வேண்டிய நாம், எழுந்து
நிற்கவே எதிரே நிற்பவனின் உதவியை நாடிக்கொண்டு இருக்கிறோம்.
ஏன் இந்தத் தடுமாற்றம்?
வள்ளுவரிடம் கேட்போமா?
ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை இல்லாத நாடு. ( குறள் - 740)
ஒரு நாடு எல்லா வளங்களையும் பெற்றிருந்தாலும், ஆட்சி
செய்பவன் சரியில்லை எனில் அந்த நாடு எந்த வகையிலும் முன்னேறாது. ஆள்பவன்
கையில்தான் அனைத்தும் இருக்கிறது.
நாட்டை ஆள்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும்
வள்ளுவர் வழி சொல்லி இருக்கிறார் .
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும். ( குறள் - 388)
ஒரு நாட்டை முறையாக ஆட்சி செய்து மக்களைக் காப்பாற்றும்
மன்னவன், அம் மக்களுக்குத் தெய்வம் என்று சொல்லப்படும் உயர்நிலையிலே வைத்து
மதிக்கப்படுவான்.
முறைசெய்து காப்பாற்றும் மன்னனை முறையாகத்
தேர்ந்தெடுப்பது நம் கடமையல்லவா?
ஒரு மன்னனை
தேர்ந்தெடுக்கும் உரிமை
மன்னராட்சியில் இல்லை. ஆனால், மக்களாட்சியில் உண்டு. மக்களாகிய நாம்தான் நமக்கான
நல்ல தலைவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் இது. நல்ல தலைவன் யாரென்று
தேடுங்கள். தேர்ந்தெடுங்கள்.
"தேர்ந்தெடுக்கப் பட்டவன் திருடன் என்றால் ,
தேர்ந்தெடுத்தவன் ( ஓட்டுப் போட்டவன்) அயோக்கியன் " என்றார் தந்தை பெரியார்.
சிந்தித்து வாக்களிப்போம்!
மக்களாட்சிக்கு
வாழ்வளிப்போம்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 95. வேந்தமை இல்லாத நாடு ஆ.தி.பகலன்"
Post a Comment