
உண்டேன்! உண்டேன்! உண்டேன்!
பாண்டிய மன்னனின் திருமண விருந்தில் பங்கேற்று திரும்பிய
ஔவையாரைப் பார்த்து புலவர் ஒருவர் கேட்கிறார்.
என்ன ஔவையாரே!
பாண்டிய மன்னனின் திருமணத்தில் கலந்து கொண்டீரே.
விருந்தில்
அறுசுவையும் இருந்ததா?
அனைத்தையும் நன்கு உண்டீரா?
அதற்கு ஔவையார்,
" உண்டேன்! உண்டேன்! உண்டேன்! " என்றார்.
ஔவையார் இப்படிச் சொன்னதைக் கேட்ட அப்புலவர், "
என்ன அவ்வளவு சிறப்பான விருந்தா?
உண்டேன் , உண்டேன்,
உண்டேன் " என்று மூன்று முறை சொல்கிறீர்களே?
மூன்று வேளைக்கும் சேர்த்து மொத்தமாக
உண்டுவிட்டீர்களா? அதனால்தான் ' உண்டேன் '
என்று மூன்று முறை சொல்கிறீர்களா? "
எனக் கேட்டார்.
புலவரின் அனைத்து வினாக்களையும் கேட்டு எரிச்சலுற்ற
ஔவையார்,
" அதையேன் கேட்கிறீர்?
விருந்திற்கு வந்த கூட்டத்தில் நெருக்கு(உ)ண்டேன்.
வெளியே
தள்ளு(உ)ண்டேன்.
பெரும்பசியினாலே வயிறு சுருக்கு(உ)ண்டேன்.
ஆனால்,
சோறு மட்டும் உண்டிலேன் ( உண்ணவில்லை) " என்றார்.
பாண்டிய மன்னனின் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றதால்
கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. அதனால் தனக்கு சோறு கூடக் கிடைக்கவில்லை
என்று கூறுகிறார் ஔவையார்.
ஔவையாரின் இந்தக் கூற்று வஞ்சப்புகழ்ச்சி ஆகும். தனக்கு
சோறு கிடைக்கவில்லை என்பதை பழிப்பது போலக் கூறி பாண்டிய மன்னனின் திருமணம்
கட்டுக்கடங்காதக் கூட்டத்தின் நடுவே சிறப்பாக நடைபெற்றதாகப் புகழ்கிறார்.
அன்றும் சரி
இன்றும் சரி
பெரிய இடத்துத் திருமணங்களுக்குச் சென்றால் சோறு
கிடைப்பதில்லை என்பது இதன்மூலம் உண்மையாகிறது .
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 96. உண்டேன்! உண்டேன்! உண்டேன்! ஆ.தி.பகலன்"
Post a Comment