தமிழ் அறிவோம்! 97. தமிழுக்கும் அமுதென்று பேர் ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 97. தமிழுக்கும் அமுதென்று பேர் ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!  97.  தமிழுக்கும் அமுதென்று பேர்  ஆ.தி.பகலன்

 


"தமிழுக்கும் அமுதென்று பேர் " 
 

'தமிழை அமுது ' என்று போற்றுகிறார் பாவேந்தர் பாரதிதாசன். 

அமுது என்றால் என்ன?

"அமிழ்தம், அமிழ்து " என்பதன் சுருக்கப் பெயர்தான் அமுதம், அமுது என்று சொல்லப்படுகிறது. 

'அமிழ்தம் ' என்ற சொல்லுக்கு உயிர்தரு மருந்து , சோறு, இன்சுவை உணவு, பிணி நீக்கும் மருந்து, தாய்ப்பால், இனிமை என்று பல பொருள்கள் உண்டு. 

அம்+இழ்+தம் = அமிழ்தம்.

அம் - அம்மா

இழ் - பொருந்துதல்

தம் - தமக்கு. 

தனக்குப் பொருந்தியதை அம்மா தருவதே ' அமிழ்தம் ' ஆகும். அதாவது, தாய்ப்பாலை ' அமிழ்தம் ' என்று அழைப்பதற்கான காரணம் இதுதான் என்பர். அம்மா தன் குழந்தைக்கு தன் குருதியைப் பாலாக்கித் தருவதான் " அமிழ்தம் " ஆகும். 

தம் + இழ் = தமிழ்.

தமக்குப் பொருந்தியது.

"தமக்குப் பொருந்திய மொழி " என்ற பொருளிலேயே தாங்கள் பேசும் மொழிக்கு "தமிழ் மொழி " என்று பெயரிட்டு அழைத்தனர் தமிழர்கள். 

தாயின் கருவறையில் குழந்தை உருவான 8 ஆவது மாதத்தில் செவிப்புலன் செயல்பட்டு ஒலிகளை உணர தொடங்கிவிடும் . குழுந்தையானது  முதன்முதலில் தாய் பேசும் மொழியை உள்வாங்கும் . தாயின் கருவறையில் இருந்து ஒரு குழந்தை எந்த மொழியை முதன்முதலில் உணர்கிறதோ அதுவே " தாய்மொழி " என்று அழைக்கப்படுகிறது . 

தாய்மூலம் கிடைத்த அமிழ்தம் என்பதால் தமிழை அமிழ்தம் என்று பாரதிதாசன் போற்றுகிறாரா? என்றால் அதுதான் இல்லை. அப்படி போற்றுவதாக இருந்தால் உலகில் உள்ள எல்லா மொழிகளும் அமிழ்தம் தானே? 

அமிழ்து அமிழ்து அமிழ்து அமிழ்து என்று சொல்லிப் பாருங்கள். தமிழ் தமிழ் தமிழ் தமிழ் என்று ஒலிக்கும். 

அமிழ்து + அமிழ்து 

"உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும் " என்ற விதிப்படி நிலைமொழி ஈற்று உகரம் ( து = த்+உ . இதில் உள்ள உகரம்) கெட்டு 'அமிழ்த் ' என்றாகும் . 

அமிழ்த்+ அமிழ்து

"உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே " என்ற விதிப்படி நிலைமொழி ஈற்று மெய்யும் ( த்) , வருமொழி முதல் உயிரும் ( அ) புணர்ந்து  ( த்+அமிழ்+து )   "தமிழ் " என்றானது.

'தமிழ்' வேறு , அமிழ்து வேறு அல்ல.

அமிழ்து, அமிழ்து என்று சொல்வதில் இருந்துதான் ' தமிழ் ' என்று சொல் உருவாகியிருக்கிறது. 

அமிழ்தத்தைப் போலவே தமிழும் 'உயிர்தரு மருந்து' . பிணியை நீக்கி நம் வாழ்நாளை நீட்டிக்கும். அமிழ்தத்தை உண்பவர்கள் எப்படி மரணத்தை வெல்வார்களோ, அதைப்போலவே தமிழ் மொழியைப் பேசுபவர்களும் மரணத்தை வெல்வார்கள்.

அதனால்தான் வள்ளலாரும் " தமிழ் மொழியே இறவாத நிலை தரும் " என்று போற்றுகிறார்.

"ஒரு மனிதன் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் நிலையை அடைய தமிழ் படித்தாலே போதும் " என்பதே வள்ளலாரின் கருத்தாகும். 

இப்படி மனிதனுக்கு மரணம் இல்லாப் பெருவாழ்வு தரும் அமிழ்தமாக தமிழ் இருப்பதால்தான்,

"தமிழுக்கும் அமுதென்று பேர் " என்று பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். 

தமிழின் பெருமையைத் தன்பாடல்கள் மூலம் நிலைநாட்டிய பாவேந்தர் பாரதிதாசனின்  நினைவுநாள் ( 21.04.1964) இன்று.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

 

0 Response to "தமிழ் அறிவோம்! 97. தமிழுக்கும் அமுதென்று பேர் ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel